"மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்:026" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

12:23, 16 ஜூலை 2012 இல் நிலவும் திருத்தம்

பொய்யான கற்பனைகளிலும், மாயா ஜாலக் காட்சிகளிலும், மனம் குதூகலித்து, நம் மண்ணுக்கோ, அன்றாட வாழ்க்கைக்கோ, நம் அனுபவங்களுக்கோ உறவில்லாத, அர்த்தமற்ற குப்பைகளையே பார்த்துப் பழகிய காரணத்தால், இவையல்லாத எதையும் ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. இது வரை எந்தத் தமிழ் சினிமா நம் வாழ்க்கையோடு ஒட்டி உறவாடி, நாம் அந்த வாழ்க்கையின் அவதியில் ஆழ்ந்திருக்கும்போது பார்த்திராத, பார்க்கத் தவறிய உண்மைகளைச் சொன்னது? வெகு அபூர்வமாக ஒன்றிரண்டு சொல்லலாம். வீடு என்று ஒரு படம். பிறகு? பூமணி எடுத்த ஒரு படம். தலைப்பு மறந்து விட்டது. கருவேலம் பூக்களா? நினைவில்லை. கிட்டத் தட்ட இம்மாதிரித் தான் ஒரு பெயர்.


காலை ஐந்து மணிக்கு ஒரு வண்டி வரும். அதற்காக வேலைக்குப் போக, கிராமத்துச் சிறுமிகள் கையில் ஒரு சின்ன தூக்கு, மதியம் சாப்பாடு கொண்டு போகும் தூக்கோடு காத்திருப்பார்கள். கரிசல் காட்டுத் தீப்பெட்டி, பட்டாசுத் தொழிற்சாலைக்குச் செல்லக் காத்திருக்கும் சிறுமிகள். எங்களாலும் முடியும் என்று செய்து காட்டிய தமிழ்க் கலைஞர்கள். அதோடு நாங்கள் வாழ்வது இந்த மன்ணில், எங்கள் கவலைகள் இந்த மண்ணை, எங்களைச் சுற்றியிருக்கும் மக்களைப் பற்றியது, நீங்கள் கவனிக்க, சிந்திக்க மறுக்கும் இந்த என் மக்களின் வாழ்க்கை இது என்று சொல்ல வாழும் தமிழர்கள் கலைஞர்கள் இவர்கள். தமிழர்கள் இவர்கள். இந்த மண்ணில் இருந்திருக்கிறார்கள். கொஞ்ச நாளைக்குத் தம் தலை காட்டியிருக்கிறார்கள். இவர்கள் சிந்தனையும், கவலைகளும், வாழ்க்கையும் ஒரு புதிய பாதையைத் தமிழ் சினிமாவில் உருவாக்க முயன்றன.. இவர்கள் ஏதும் நூறு கோடி முதல் போட்டு, அதை முன்னூறு கோடியாக்கி லாபம் சம்பாதிக்க நினைத்தவர்கள் இல்லை. தன்னைத் தன் சிந்தனைகளை வருத்தும் உலகை, தன் சக மனிதர்கள் காணத் தவறிய, சிந்திக்க மறுக்கும் உலகை அவர்களின் முன் நிறுத்தவேண்டும். அவர்கள் சிந்தனையை பார்வையை இங்கு இந்த வாழ்க்கை பற்றியும் நினைக்கத் தூண்டவேண்டும் என்று நினைத்து அதற்கு ஆகும் செலவில் இவை தயாரிக்கப்பட்டன.


இவர்கள் எண்ணமெல்லாம் தாங்கள் போட்ட பணத்தை எடுத்து அதற்கு மேல் தாம் வாழக் கொஞ்சம் லாபமும் வேண்டும். அவ்வளவே. இதில் தவறென்ன? இவ்விருவரில், வீடு படத்தின் இயக்குனர் பாலு மகேந்திராவாவது சினிமாப் புகைப்படக் கலைஞர். சினிமாத் துறையின் பரிச்சயமும் ஆழ்ந்த நுண்ணுணர்வும் கொண்டவர். புதியவர் அல்லர். ஆனால், பூமணி இத்துறையில் எவ்விதப் பரிச்சயமும் அற்றவர். பம்பாயிலிருக்கும் FFDC யிலிருந்து கடன் உதவி பெற்று ஒன்றிரண்டு லக்ஷங்களில் படத்தைத் தயாரிக்கும் நிர்ப்பந்தத்தில் உள்ளவர். இந்த ஒன்றிரண்டு லக்ஷம் வடிவேலுவுக்கு இரண்டு நாள் சம்பளத்துக்கே காணாது என்று நினைக்கிறேன். இருந்தாலும் தனக்குப் பரிச்சயமில்லாத துறையில் கால் வைத்துப் பணம் கடன் வாங்கி ஒரு அர்த்தமுள்ள இது சினிமாதான் என்று சினிமா என்ற தொழில் நுட்பத்தையும் கலையையும் தெரிந்தவர்கள் ஒப்புக்கொள்ளும் ஒரு படத்தைத் தயாரித்துத் தந்துள்ளார்.


இவர்கள் எவரையும் இந்தத் தமிழ் சினிமா உலகம் வாழவிடவில்லை. ஏதோ அருங்காட்சியகப் பொருட்களாக அவ்வப்போது யாராவது இந்தப் பெயர்களைச் சொல்வார்கள். ”தமிழ் சினிமாவிலும் நல்ல படங்கள் வந்து தான் இருக்கின்றன, நீங்கள் தான் ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள், தமிழ் சினிமாவைத் தாழ்த்திப் பேசுவதே உங்கள் வேலை” என்று இங்கு என்னைக் கடிந்து கொள்பவர்களுக்கும் ஒரு பட்டியல் வேண்டுமே அந்தப் பட்டியலை அவர்களுக்குத் தர இவர்கள் அவ்வப்போது நினைவுக்கு வருவார்கள். பின் என்னைக் கடிந்து கொண்டபின் தங்கள் காரியம் முடிந்ததென்று மங்காத்தா இன்னொரு முறை பார்க்கக் கிளம்பிவிடுவார்கள்.. படம் பார்த்து வெளியே வரும்போது வாசலில் காமிராவோடு நிற்கும் சன் டிவி நிருபரிடம் தம்பதி சகிதம் “சூப்பர்” என்று முகம் மலரச் சொல்லிச் செல்வார்கள். வந்த காரியம் முடிந்தது என்ற திருப்தியோடு. இதில் எல்லோருக்குமே கலைக்குத் தொண்டாற்றிய திருப்தி.


இம்மாதிரியான முயற்சிகள் அவ்வப்போது நடந்துகொண்டு தான் வருகின்றன. ஆனால் பல நூறுக்கணக்கில் ஒவ்வொரு வருடமும் படங்கள் தயாரிக்கப்படும் தமிழ் சினிமா உலகில் இப்படியான பாதை மீறிய படங்களும் அது பற்றிச் சிந்திப்பவர்களும் எப்போதாவது ஒன்றிரண்டு பேர் வந்து ஒன்றோ அல்லது இரண்டோ படங்களுக்குப் பிறகு கையொடிந்து மறைந்து விடுவார்கள். எல்லாமே வியாபாரம், லாபம், அதிலும் கொள்ளை லாபம் என்ற ஒரே நோக்கத்தோடு, (க்ளாமர் உலகில் உல்லாசமாகத் தோளுரசலாம் என்று நினைப்பும் கூடுதல் போனஸாக இருக்கும் கட்டாயமாக) இந்த நினைப்பும் முனைப்பும் தான் தமிழ் சினிமா உலகின் கலாசாரத்தை நிர்ணயித்து வருகின்றன.


யாரும் பணத்தைக் கொட்டி நாசமாக்குவதற்காக இங்கு வரவில்லை. ஒரு படம் எடுக்கப் பணம் வேண்டும் தான். நிறையவே வேண்டும். அந்தப் பணம் திரும்ப எடுக்கப் படவேண்டும் தான். ஆனால் பணம் கொள்ளை கொள்ளையாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு அதற்கான காரியங்கள் அத்தனையையும் சந்தை நிலவரத்தை, இந்த வாரம் ஹிட்டான படத்தின் தரத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதே மாதிரி தானும் செய்ய வேண்டும் என்ற மந்தை மனப்பான்மை தான் தமிழ் சினிமாவின் மொத்த உருவாகவும், கலாசாரமாகவும் இருந்து வந்துள்ளது.


சிலருக்கு இந்தக் கலாசாரத்தில் மாற்றம் கொணரவேண்டும் என்ற நினைப்பு அடிக்கடி உறுத்திக்கொண்டிருப்பதை சமீப காலமாக நாம் பார்த்து வருகிறோம். வெயில், சுப்ரமணியபுரம், மாயாண்டித் தேவர் குடும்பம் (தலைப்பு சரிதானா?) இவை எதுவும் சம்பிரதாய, வெற்றிப் படமோ, இல்லை டப்பாக்குள் போய் அடைந்து கொண்ட படமோ எதானாலும் சந்தையில் வெற்றியைக் குறிவைப்பவை தான் ஆனாலும், பாதை மீறித்தான் பார்ப்போமே என்று துணிந்த தமிழ் படங்கள், சம்பிரதாய தமிழ்ப் படங்களின் வழியில் எடுக்கப் பட்டவை அல்ல. வித்தியாசமான கதை ,வித்தியாசமான படமாக்கல், வித்தியாசமான பேச்சு மொழி என்ற குறிக்கோளைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை. ஆனால், தமிழ் சினிமா சந்தையைப் பற்றியும் இவர்களுக்கு மிகுந்த பயம் உண்டு. சந்தையில் தோற்றுவிடக்கூடாது என்ற எச்சரிக்கையும் உண்டு. கொள்ளையாகப் பணம் பண்ணவேண்டாம், ஆனால், போட்ட பணம் வந்து அதற்கு மேல் கொஞ்சம் வந்தாலும் சரி, ஆகையால், சாதாரணமாகச் சேர்க்கும் மசாலாச் சரக்குகளையும் சேர்த்துக் கொள்வோம் என்ற எச்சரிக்கை உணர்வோடு மசாலாக்களையும் சேர்த்து சந்தைக்குக் கொண்டு செல்லப்பட்டவை. இப்படித் தான் பாரதி ராஜாவும் செய்தார்.


இவர்களிடம் ஒரு இரட்டை மன பேதலிப்பு இருந்தது. இவர்கள் எல்லாம் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் இன்னும் நடிகர் இயக்குனர் இத்யாதி பெரியவர்கள் காலம் காலமாகத் தொடர்ந்து வரும் சந்தை மனப்பான்மை, கொள்ளையடிக்கும் மனப்பான்மையின் காரணமாக இவர்களது படம் பற்றிய பார்வையே முற்றிலுமாக. பொதுப் புத்திக்குக்கூட ஏற்காத மசாலாக்கள் காலம் செல்லச் செல்ல யாரும் கேள்வியே எழுப்பாது ஒப்புக்கொள்ளப்பட்ட மரபில் வந்தவர்கள் அத்தோடு இவர்களுக்குக் கொஞ்சம் அவ்வப்போது சந்தேகமும் வந்து தொல்லை படுத்தியது. இந்த மசாலாக்களில் சிலவற்றை புத்திக்கு ஏற்ப செய்தால் என்ன?, சிலவற்றை விட்டுத் தொலைத்தால் தான் என்ன? வழக்கமான பிதற்றலைக் கொஞ்சம் கொஞ்சமாவது குறைத்துப் பார்த்தால் என்ன? என்ற கேள்விகள் அவர்களை உறுத்தின. ஆக இரண்டு உலகங்களில் அவர்கள் வாழ்ந்தார்கள். மனம் ஒரே சமயத்தில் கனவும் காணவும் நனவில் வாழவும் ஆசைப்பட்டது. அதாவது கண்களை மூடிக் கனவும் காணவேண்டும். . அதே சமயம் கண்கள் விழித்து நாங்கள் புதுமை செய்பவர்கள், கலைஞர்கள் என்ற பெயரும் சம்பாதிக்க ஆசை. கற்புக்கரசி என்ற பெயரும் வேண்டும். அத்தோடு முடிந்த அளவோ அல்லது வேண்டிய அளவோ ஜாலியாகவும் வாழ்க்கை வாழவேண்டும் என்ற தத்தளிப்பு.


பாரதி ராஜா சிவாஜி கணேசனை, நடிகர் திலகத்தை, ”உங்க உலகப் புகழ் பெற்ற நடிப்பைக் கொஞ்சம் மறந்து விட்டு சாதாரணமா இருங்களேன்,” என்றும் சொல்வார். அதேசமயம் வெள்ளை ஆடை உடுத்தி பூச்சரம் சூடி, நளினமாக ஆடிக்கொண்டே தேவதைகள் போல ஆகாயத்தில் கன்னிகைகளையும் மிதந்து வரச் சொல்வார். என்ன செய்ய? டான்ஸ் காட்டியாகணுமே!!. ரொம்பவும் யதார்த்தமாக எடுக்கப்பட்ட,, பெரிதும் பலரால் புகழப்பட்ட முதல் மரியாதை படத்தில், சிவாஜி கணேசனை இயல்பாக நடக்கப் பேச அறிவுரை கொடுத்தவர், வழக்கமான பாணி, திரும்பச் சொல்கிறேன் வழக்கமான பாணி காதல் விளையாட்டுக்களை விட்டு விட அவருக்கு மனசிருப்பதில்லை. இந்த பாணி தமிழ்,ஹிந்தி சினிமாவுக்கே ஆன பாணி. வேதம் புதிது படத்தில் என்று நினைவு. ஆற்றின் கரையில் நின்று கொண்டு சிறு வயது பிராமணப் பையன், எதற்கு மூச்சுக்கொரு தடவை நாயக்கரோ/கவுண்டரோ சாதியைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்பான். அது அவரை கன்னத்தில் அறைந்தது போலிருந்தது என்று சாதாரணமாகப் பேச்சில் சொல்வார்கள். பத்திரிகைக் கதைகளிலும் ஒரு வரி அப்படி வரும். அந்தப் பையன் கேட்டதும் சத்யராஜ் கன்னத்தில் அறையும் சத்தம் வரும் மூன்று முறை. மூன்று முறையும் அவர் கன்னத்தைத் திருப்பிக் கொள்வார். அந்தச் சத்தம் வரவேண்டும், சத்ய ராஜும் கன்னத்தைத் திருப்ப வேண்டும். சத்தம், கன்னத்தைத் திருப்பல் எல்லாம் வேண்டும். அதுவும் மூன்று முறை வேண்டும். அப்பத் தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ”பையன் கன்னத்தில் அறைஞ்ச மாதிரில்லா ஒரு கேள்விய கேட்டுப்புட்டான்? பாரதி ராஜா படமில்லா, பின்னா என்னாங்கறேன். அவர் டச் இருக்காதா?” என்று புரிந்து கொண்டு ரசிப்பார்கள். இதெல்லாம் ஒண்ணாங்கிளாஸ் பாடம் நடத்துகிற மாதிரி. ஒரு தடவைக்கு இரண்டு மூன்று தடவையாகச் சொன்னால் தான் புரியும். மனசில் பதியும்.


வெயில் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நிச்சயமாகச் சில காட்சிகள், சில காட்சிகளின் அமைப்பும், பேச்சும் நடிப்பும் வாழ்க்கையில் இயல்புக்கு ஏற்பவே இருந்தன. இருந்தாலும் அனேக இடங்களில் பரத்தும் பசுபதியும் சேர்ந்த காட்சிகள் அதீதமாக நாடகமயப்படுத்தப்பட்டவை. அதிக சத்தம் போடுபவை. சண்டைக் காட்சிகள் மசாலாவுக்காகச் சேர்க்கப்பட்டு அதுவும் அதீத நாடக பாணியில் உருவாக்கப்பட்டவை. பின்னர் மிஞ்சியது பாட்டும் ஆட்டமும். அதை எங்கு செய்தால் புதுமையாகவும் அதே சமயம் மசாலாவாகவும் இருக்கும்? வேறு எங்கு? சினிமா ப்ரொஜெக்டர் இருக்கும் அறைதான். அங்கு ப்ரொஜெக்டர் வைக்கவும் அதை இயக்குபவர் நிற்கவும் தான் இடம் இருக்கும். ஆனால் இந்தப் புதுமை//மசாலா இயக்குனர் ஆச்சே? ஓடி ஆடி ஒளிந்து பாட்டு பாடிக்கொண்டு ஆடும் அளவுக்கு விஸ்தாரமான இடம் இருக்கும். அதுவும் புதுமை தானே?. கொடுமைக்காரத் தகப்பன்களைப் பார்த்திருக்கிறோம். இருக்கிறார்கள் தான். ஆனால் தன் சின்னப் பையனை விருதுநகர் தெரு வெயிலில் ஏதோ கருவாடு காயப்போடுவதைப் போல வறுத்தெடுக்கும் காட்சி அப்பத்தானே பாக்கறவங்களுக்கு உறைக்கும்? சொல்றதை நல்லா சொல்லாண்டாமா? தெற்கு மாவட்டங்கள் கதை என்றால் அதில் மடித்துக்கட்டிய வேட்டி, காக்கி ட்ரௌசர் தெரிந்தால் இன்னும் சிறப்பு, அந்தந்த வட்டாரத் தமிழ், பின் கொடூரமான வன்முறை. கார்கள் பறப்பதற்கு பதிலாக, வீச்சரிவாளுக்குப் பதிலாக வேறு வேறு புதிதாகக் கற்பனை செய்துகொள்ளும் வன்முறைக் காட்சிகள். இதெல்லாம் தென்மாவட்ட ப்ராண்ட் சினிமா சமையலுக்கான, மிளகாத்தூளு,,, கொத்தமல்லித் தூளு, மஞ்சத் தூளு, தேவையான உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயத் தூளு,.,கரம் மசாலா இருந்தா சேத்துக்கலாம். நல்லாருக்கும்.
ருசியா எல்லாரும் சாப்பிடுவாங்க.

-வெங்கட் சாமிநாதன்

--Ksubashini 20:44, 3 பெப்ரவரி 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini, Geetha Sambasivam மற்றும் Na.Kannan