"மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்:021" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

12:21, 16 ஜூலை 2012 இல் நிலவும் திருத்தம்


இதுகாறும் நான் எழுதிவருவனவற்றைப் படிப்பவர்களிடமிருந்து வரும் எதிர்மறையான கருத்துக்கள் ஒரு சில வகைகளுள் அடங்கும்.


1. தங்களுக்குப் பிடித்த, ஏதோ கலைமேதையென தமக்குள் கற்பித்துக்கொண்டு பாலாபிஷேகம் செய்து பூசிக்கும் சில நடிகர்களை அவர்கள் நடித்த படங்களை, சில இயக்குனர்களையெல்லாம் குறிப்பிட்டு அவர்கள் இயக்கிய படங்களையும் பட்டியலிட்டு, ”இவையெல்லாம் நல்ல படங்கள் இல்லையா?” என்று தம்முள் ;பொங்கி எழும் சீற்றத்தை அல்லது தமக்குள் வதைபடும் மிகுந்த மன வேதனையைக் கொட்டிக் கேட்கிறார்கள். இவர்களுக்கு நான் முன் வைக்கும் கருத்துக்கள், பார்வைகள் எதையும் எதிர்கொள்ளும் மனமிருப்பதில்லை. அவற்றையெல்லாம் படித்தும், அது பற்றிக் கொஞ்சம் கூடச் சிந்திக்காமல், தம் கையிலிருக்கு விளக்குமாற்றால் ஒரே வீச்சில் அவ்வளவையும் துடைத்து எறிந்து விட்டு, தாம் முன் கொண்டிருந்த மனநிலைக்கே திரும்பி இதெல்லாம் நல்ல படமில்லையா, அதெல்லாம் நல்ல படமில்லையா? என்று தொண்டை அடைக்கக் கேட்கும் போது, அதை ஒரு வேதனைக் குறல் என்றே சொல்லவேண்டும், குரல் கம்மிக் கம்மிக், கதற ஆரம்பித்துவிடுகிறார்கள். இதுகாறும் தம் சொப்பன சுகத்தில் ஆழ்ந்திருந்ததெல்லாம் பொய் எனச் சொல்லப்பட்டால் நிலை குலைந்து போவதைச் சகித்துக்கொள்ள முடிவதில்லை.. இல்லையெனில் திடீரென ஒரு அதிர்ச்சியும் கையாலாகாச் சீற்றமும். பத்து வயது அண்ணனுக்கு வீட்டில் அடி விழுந்தால் ஆறு வயது தம்பி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிடுவான். அண்ணன் எதற்கு அடிபடுகிறான், என்ன சொல்லி அப்பா அடிக்கிறார் என்பதெல்லாம் அவனுக்குப் புரிவதேயில்லை. அன்ணன் அடி படுவது தெரிகிறது. அது அவனால் தாங்க இயலாது. இரண்டாவது தான் தனித்து விடப்பட்ட துக்கம் வேறு. தாங்கத் தான் முடிவதில்லை. தம்பிப் பையனுக்கு
.
2. இரண்டாவது வகையினர் இன்னொரு வேடிக்கையும் பரிதாபமுமான கற்பனை வாதம் ஒன்றை முன் வைக்கிறார்கள். நாளெல்லாம் வெயிலில் வேர்த்து விறுவிறுத்து உழைத்துத் திரும்புகிறவன் தன் கஷ்டங்களையெல்லாம் மறந்து ஜாலியாக இருக்க விரும்புகிறவனின் எதிர்பார்ப்பதைத் தருகிறது அவனுக்கு அன்று ஒரு ஜெயமாலினி, இல்லை ஜோதி லட்சுமி,இன்று ஒரு நமீதாவாவது டான்ஸ் பண்ண வேண்டும். அதைப் பார்த்து மகிழ்ந்து நன்றாகத் தூங்கி நாளைக்கு மறுபடியும் வேர்த்து விறுவிறுக்கத் தயாராவான். இந்த மாதிரியான ஒரு சினிமா கலைத் தத்துவம் தமிழ் மன்ணுக்கே உரியது.. இது போல ஒரு பொய்யும் நேர்மையற்றதுமான ஒரு வாதம், இன்னொரு பெயரில் இளிச்சவாய்த்தனமான வாதம், இருக்குமா என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஆனாலும் கொள்ளையடிக்கவே வந்திருப்பவர்கள், அதற்கு ஏதாவது கவர்ச்சியான ஜனநாயகப் பூச்சு பூசி மக்களை ஆபாசத்துக்குத் தள்ளுகிறவர்கள் இன்னும் மோசமான பொருளைச் சந்தைக்கு எடுத்துச் செல்ல வேண்டி வரும்போது, இன்னமும் நேர்மை கெட்ட, இன்னமும் மோசடி நிறைந்த பொய்யை, மக்களுக்காகப்பேசுவதாக நினைத்துக்கொள்ளும் அறிவு ஜீவிகளுக்காகத் தயார் செய்ய மாட்டார்கள் என்பது நிச்சயமில்லை.


முப்பது நாற்பது வருஷங்களுக்கு முன் புராணப் படங்கள் கோலோச்சிய காலத்தில் இந்திரனோ, எவனாவது மன்னனோ சபைக்கு வந்து அமர்ந்ததும் “ஏழு கன்னிகைகள் வந்து நடனமாடுவார்கள்.” பின்னர் அடுத்த தலைமுறையில் ஒரு கல்யாணமோ, இல்லை பெரிய மனிதருக்கு வரவேற்போ என்று காரணம் காட்டி ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு காண எல்லோரும் தியேட்டருக்குப் போவார்கள். அங்கு காதல் மலரும்.


இந்த மாற்றம் எந்த ஊர் தொழிலாளிகள் எல்லாம் தாம் சிந்திய வியர்வையைக் காட்டி எங்களுக்கெல்லாம் எங்கள் உடல் சிரமத்தைக் குறைத்து ஒத்தடம் கொடுத்து எங்கள் முகத்தில் சிரிப்பையும் இறைவனையும் வரவழைக்க சிலுக்கு சிமிதா நாட்டியம் காட்டுங்கள் என்று ஜாயிண்ட் பெட்டிஷன் போட்டார்களா, இல்லை ஏழு கோடி தமிழர்களிடம் கையெழுத்து வாங்கி கோடம்பாக்கம் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பொது மனு கொடுத்தார்களா என்பது தெரியாது. ஒரு வேளை அந்தச் செய்தி வந்த அன்று என் ஏரியாவில் பவர் கட் இருந்திருக்கலாம். இதற்கு அடுத்து எப்போது இந்த மாதிரி ஒரு பொது மனு, “இனி உதகை பார்க், ஏற்காடு, வைகை அணையெல்லாம் பார்த்து அலுத்து விட்டது, இனி ஸ்விட்சர்லாந்துக்கோ, அர்ஜெண்டினாவுக்கோ, டோரண்டோவுக்கோ போய் கமலஹாசனும், சிம்புவும் நயனதாராவோடு ஒரு நாற்பது பேர் கூட்டத்தோடு டான்ஸ் பண்ணினால் தான் எங்கள் அலுப்பு தீரும்போல இருக்கு. இப்பொல்லாம் பார்ங்க உடம்புலே கொட்டுற வியர்வை நிறையவே கூடிப்போச்சு உதகை பார்க் டான்ஸெல்லாம் இந்த வியர்வைக்குப் பத்தாது என்று மறுபடியும் கொடுத்தார்கள் என்ற செய்தியும் என் பார்வையிலிருந்து தப்பி விட்டது. அடிக்கடி வரும் பவர் கட்டினால் வரும் விபத்து இது. . .


எனக்கென்னவோ இந்த ஆபாசங்கள் எல்லாம் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களின் டிமாண்டு தானே ஒழிய அப்பாவித் தமிழ் மக்கள் அல்ல. அந்த வியர்வை கொட்ட அதைக் காய வைக்க எந்த அப்பாவி தமிழ் உழைப்பாளியும் 300 ரூபாயும் 500 ரூபாயும் கொடுத்து டிக்கட் வாங்க மத்தியானம் ரண்டு மணி வெயிலில் க்யூவில் நிற்கமாட்டான். அந்த பைத்தியக் காரத்தனம் செய்யும் தமிழ் ரகங்களே வேறே தான். கோடிக் கணக்கில் வசூலிக்கும் படத்தின் வெற்றிக்குக் காரணம் தேடுகிற வியாபாரக் கூட்டம், ஒரு கட்டத்தில் கருணாநிதி வசனம், சிவாஜி முக அவஸ்தைகள், சிலுக்கு ஸ்மிதா நடனம், கமலஹாசனின் மேக்கப் அவதாரங்கள், ரஜனி காந்தின் அங்க சேஷ்டைகள் என்று தம் நுண்மாண் நுழைபுல ஆராய்ச்சியில் கண்டு பிடித்துத் தம் அடுத்த படத்தில் அந்தச் சரக்கை இன்னும் ஒன்றிரண்டு பெக் கூடச் சேர்த்துக் கலந்த காக்டெயிலை சந்தைக்குக் கொண்டு வரும் பேராசைக் கனவுகளுக்கு என்னமோ உழைக்கும் வர்க்கம், சொட்டும் வியர்வை, மக்கள் ரசனை என்று கோஷிப்பதையே தம் கண்டு பிடிப்பு போலத் திரும்பத் திரும்ப நமக்குச் சொல்கிறார்கள், இந்த ஆபாசங்களும் தரக்கேடுகளும் தமக்கும் பிடித்துப் போக அதற்கு நியாயம் கற்பிக்கும் நம் அறிவு ஜீவிகள். தமிழ் சினிமாக் கலா ரசிகர்கள்.


ஒரு ஆபாசத்தை நிலை நிறுத்த, தொடர்ந்து நடைமுறைப் படுத்த என்னென்ன வார்த்தை ஜாலங்கள் எல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. “இலவசத் தொலைக்காட்சி தருவதற்கு என்ன உயரிய நோக்கம் சொல்லப் பட்டது? குடிசை வாசிகளும் உலக அறிவு பெற வேண்டும், கலை ரசனை பெருக வேண்டும் என்ற மகத்தான லக்ஷியம் தான் காரணம் என்று. கடைசியில் சன் டிவிக்குப் போட்டியாக அதிலிருந்தும் கீழிறங்கி “மானாட மயிலாட” கண்டு பிடிக்கப்பட்டது. எதற்கு?. உடன் பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும் உலக அறிவு பெற,. கலைகள் கண்டு களித்திட. ஒவ்வொரு தரக்கேடும், ஒவ்வொரு ஆபாசமும் தனியே வருவதில்லை. உடன் அதற்கான லக்ஷிய கோஷங்களோடு தான் சந்தைக்கு வருகிறது.


3. மூன்றாவதாகத் தமிழ் சினிமா முன்னேறிக்கொண்டு தான் வருகிறது. மாற்றங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன என்று சொல்கிறவர்கள், மிஷ்கின், பாரதி ராஜா, பாலசந்தர் மணி ரத்னம், மகேந்திரன், போன்றோரையும், வெய்யில், சுப்பிரமணியபுரம், நந்தலாலா, போன்ற படங்களையும் சுட்டிக்காட்டுகிறார்கள். இவர்களில், மகேந்திரனையும் இவர்கள் சொல்லாத பாலு மகேந்திராவையும் தான் நான் மாற்றம் கொண்டு வர முயன்றவர்களாக, ஆனால் தோற்றவர்களாக நான் ஒப்புக்கொள்வேன். தோற்றது அவர்களுக்கு இழுக்கில்லை. அவர்களை விரட்டி அடித்தது நாம்தான். மக்கள் ரசனை, உழைப்பாளி வியர்வை கொள்கைக்காரர்கள் தான். அவர்கள் நம் மதிப்புக்கு உரியவர்கள். ஆனால் அவர்களால் எந்த மாற்றத்தையும் தமிழ் சினிமாவில் கொணர முடியவில்லை. மற்றவர்கள் எல்லாம் வெறும் பாவ்லா பண்ணுகிறவர்கள். அவர்களுக்குத் தமிழ் சினிமாவின் மாற்றத்தில், தர உயர்வில் எந்த அக்கறையும் கிடையாது. பாவ்லா காட்டியே பெயர் வாங்கிக் கொண்டவர்கள். இந்த பாவ்லாக்களைக் காட்டியே பெயரும் பணமும் பண்ண தமிழ் சமூகத்தில் தான் முடியும். இந்த இயக்குனர்களின் பாவ்லாக்களை, படங்களின் பாவ்லாக்களை நான் அங்கங்கே சொல்லியே வந்திருக்கிறேன்.


இது போன்ற, சங்கடமான நிலை வரும்போது, எதையாவது சொல்லி, எப்படியாவது தப்பித்துக்கொள்ளும் சாமர்த்தியங்களையெல்லாம் விட்டு விடுவோம். சாமர்த்தியங்கள், வார்த்தை ஜாலங்கள், லக்ஷிய கோஷங்கள் எல்லாம் மூடி மறைப்பன நம் நல்லதை யோசித்துச் செய்யப்படுவன அல்ல. என்றும், எங்கும், எக்காலத்தும். இவர்கள் எல்லாம் நம்மிடமிருந்து பணம் பிடுங்க வந்தவர்கள் என்பது பெரிய விஷயமில்லை. போன பணம் போனாலும் பின்னர் நாம் பணம் சம்பாதித்துக்கொள்ளலாம். ஆனால் இவர்கள் பணம் கொழிக்க, தமிழ் நாட்டின் பண்பாட்டை, நாகரீகத்தை, கலைப் பிரக்ஞையை நாசம் செய்து வருகிறார்கள். இவை நாசம் ஆனால் திரும்பப் பெறக்கூடியவை அல்ல. கீழ் நோக்கிய சரிவு தொடங்கிவிட்டால் அந்த சரிவு எங்கும் இடையில் நிற்கப் போகும் சரிவு அல்ல. இந்திர சபையில் அப்ஸ்ரஸ்கள் ஏழு பேர் ஆடும் நடனம் இன்று முப்பது பேர் திடீரென, ஏன், எப்படி, எதற்கு என்ற காரண காரிய விவஸ்தையே இல்லாமல் நடு ரோடில் நாற்பதுபேர் ஆடும் “ஓ போடு” ஆட்டமாக, “கட்ட மர துடுப்பு போல இடுப்பை ஆட்டுறா” வாக மாறினால் அது நிற்காது தொடரும் சரிவு. அன்று இந்திர சபை அப்ஸரஸ்களின் நடனத்தைத் தவிர்க்கும் படங்கள் இருந்தன. இந்திரன் கதையில் இருந்தால் இந்திர சபையும் அப்ஸ்ரஸுகளின் நடனமும் நிகழ்வதில் ஒரு நியாயம் இருந்தது. ஒரு நியாயம் தான். கட்டாய விதி இல்லை. அது இல்லாதே இந்திரன் வந்த படங்கள் இருந்தன. ஆனால், ”கட்ட மர துடுப்பு போல இடுப்பை ஆட்டுகிறவளை” எந்த நியாயமும் இல்லாது இழுத்துப் பிடித்து வரவேண்டியிருக்கிறது. என்ன பைத்தியக்காரத்தனம் இதெல்லாம் என்றால், வியர்வை, உழைத்துக் களைத்த உடம்பு, மக்களின் மகிழ்ச்சி, என்று என்னென்னவோ பிதற்றல்கள் வந்து விழுகின்றன. இதுக்கு சப்போர்ட்டு எல்லாத் தரப்பிலிருந்தும் வந்து குவிகிறது. பத்திரிகைகள், எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள், அமைச்சர்கள், முத்தமிழ்க் காவலர்கள், செம்மொழி கொண்டாந்தவர்கள் என்று ஒருத்தர் பாக்கி இல்லை. எல்லாரும்.


இந்த நேர்மையின்மை என்பது சமூகத்தின் எல்லாத் துறை சார்ந்தவர்களிடமும், எல்லா சமூக நிலைகளில் இருப்பவர்களிடமும் காணப்படுகிறது. சமூகம் பூராவுமா, ஒருத்தர் பாக்கி இல்லாமல் எல்லாரும் ஊமத்தம்பூவைத் தின்று கிடக்கிறார்கள், இப்படி உளறுவதற்கு. இல்லை. அவர்கள் ஒழுங்காக உடை உடுத்துகிறார்கள். மனைவியை நல்லி கடைக்கு அழைத்துச் சென்று மகிழ்விக்கிறார்கள். வரும் பணத்தை ஒழுங்காக எண்ணத் தெரிகிறது அவர்களுக்கு. கண்டதைத் தின்பதில்லை தெருநடுவில் உட்கார்ந்து கொண்டு. சரவண பவனிலிருந்து ஐந்து நடசத்திர ஹோட்டல் வரை சக்திக்கேற்ப அவ்வப்போது போய் வருகிறார்கள். தெருவில் பத்துப் பேர் சேர்ந்து விட்டால் உடனே அணிவகுத்து “வருவீய்யா, மாட்டீய்யா” என்று கைகளையும் கால்களையும் உதறிக்கொண்டு இதான்யா டான்ஸ் என்று ஆடத் தொடங்குவதில்லை. சிவாஜி கணேசன் மாதிரி யாராவது வசனம் பேச ஆரம்பித்தால், “இந்தா, யோவ், உனக்கு என்ன ஆச்சு இப்ப? நேத்து வரைக்கும் நல்லாத்தானே இருந்தே?” என்று கடிந்து கொள்வார்கள் கட்டாயம். அவர்கள் மகன், “தந்தையே, நான் இந்த பிரியங்கா இல்லாமல் உயிர் வாழ்முடியாது. அவளை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன், அப்பா” என்று வசனம் பேசட்டும்.” அவன் சொல்லி முடிப்பதற்குள், “எடு செறுப்பை, ராஸ்கல், சினிமா பாத்துப் பாத்து மரை கழண்டு போயிருக்கு உதவாக்கரைக்கு”. என்று கத்திக்கொண்டே அந்தத் தந்தையார் காலிலிருந்து செருப்பைக் கழட்டினாலும் கழட்டலாம்.


இது தான் விஷயம்.” ஒரு நல்ல சாப்பாடு எதுன்னு,ஒரு நல்ல நண்பன் யாருன்னு, அடையாளம் காட்டிச் சொல்லுங்களேன். சாப்பிடறதுக்கு நல்ல ஐட்டமா ஒரு பத்து சொன்னா நாங்க புரிஞ்சுக்குவோம் ஒரு நல்ல நண்பன் யாரென்று தெரிந்து கொள்ள ஒரு பத்து குணங்கள் அடங்கிய பட்டியல் கொடுங்கள் என்று யாரும் கேட்பதில்லை. சிவாஜி கணேசன் மாதிரி வயிற்றை எக்கிக்கொண்டு, முழி பிதுங்க உங்கள் முன் வந்து யாராவது வசனம் பேசினால், அவனைப் பார்த்துச் சிரிக்காமல் நீங்கள் வேறு என்ன செய்ய முடியும்?. “என்னா கலைஞன் அய்யா இவன். திடீர்னு நடிகர் திலகம் ஆயிட்டானே” என்று நீங்கள் வாயைப் பிளக்கப் போவதில்லை.. இந்த சாதாரண பொதுப் புத்தி போதும்.


நான் இது வரைக்கும் ஒரு சினிமாவில் என்ன இருக்க வேண்டும் என்று சொன்னதைப் புரிந்து கொள்ள ஏதும் நுண்மாண் நுழைபுலம் வேண்டியதில்லை. கலைக்கல்லூரியில் மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ் படித்து செர்ட்டிபிகேட்டோடு சினிமா ஹாலுக்குப் போகவேண்டியதில்லை. பூனே ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்டிலோ, இல்லை, தரமணி திரைப்படக் கல்லூரியிலோ போய்ப் பட்டம் வாங்கியிருக்க வேண்டியதில்லை. தரமணி கல்லுரிக்குள் போய் வந்தவர்கள் யாரையும் நான் பொதுப் புத்தியோடு செயல்பட்டு பார்த்ததில்லை. அவர்கள் எல்லாம் உடனே கோடம்பாக்கத்துக்குத் தான் குடிபெயர்கிறார்கள். நமக்கு சாதாரண பொதுப் புத்தி போதும். அதை என்றும் எக்காலத்தும் இழக்கக் கூடாது. எந்த மேதையானாலும் அதாவது தமிழ் நாட்டில் மேதை, சிகரம், திலகம், என்று இந்த மாதிரி பட்டம் பெற்ற யாராக இருந்தாலும் சரி, அவர்கள் சம்பந்தப் பட்ட படம் எதாக இருந்தாலும் சரி, அது என்னவாக புகழப்பட்டாலும், வெள்ளி விழா கொண்டாடியதா, 300 கோடி வசூல் பார்த்ததா, உலகமெங்கும் 2000 தியேட்டரில் ஒரே சமயத்தில் திரையிடப்பட்டதா, கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் நடந்ததா, காவடி எடுத்தார்களா, அல்லது வந்த மறு நாளே பெட்டிக்குள் சுருட்டி வைக்கப்பட்டதா என்பதெல்லாம் பற்றி கவலைப் படாமல், திரையோடும் முதல் நிமிடத்திலேயே, நாம் காண்பது நம் பொதுப் புத்திக்கு ஏற்கிறதா, இல்லை, ஊமத்தம் பூவைத் தின்று வரக் கட்டாயப்படுத்துகிறதா, என்ற ஒரு அளவு கோல் போதும். அது நல்ல படம் எது என்பதை நிச்சயிக்கும். வேறு யாரிடமும் பட்டியல் கேட்டுக் காத்திருக்கத் தேவையில்லை. நாம் ஒவ்வொருவரும் பார்த்து நமக்குள் தீர்மானித்துக்கொள்ள வேண்டிய விஷயம் இது. ஆரம்பத்திலிருந்தே தான். சி.என். அண்ணாதுரையின் வேலைக்காரி, கருணாநிதியின் பராசக்தி யிலிருந்து ஆரம்பித்து இன்றைய தசாவதாரம், யந்திரன், வரை, யுத்தம் செய் நந்த லாலா வரை, இந்தப் பார்வையை, பொதுப் புத்திக்கு முதலில் இவை ஏற்கின்றனவா என்று பார்த்தால் போதும். அவ்வளவும் பொட்டு பொட்டென உதிர்ந்து போகும். அன்றிலிருந்து இன்று வரை.


ஒரு இஞ்ச் கூட நாம் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததாகத் தெரியவில்லை. 1960களில் ஒரு படத்தில் சிவாஜி கணேசனும், ஜெமினி கணேசனும் ஒருவரை ஒருவர் சுட்டுத் தள்ள துப்பாக்கியை நீட்டிக்கொண்டு வசனம் பேசுவார்கள் பேசிக்கொண்டே கோப மழை பொழிவார்கள். அவ்வளவு பகைமை. கொன்று தீர்க்கும் ஆத்திரம். துப்பாக்கியும் குறிபார்த்து நீண்டிருக்கும். இருப்பினும் சுடமாட்டார்கள். வசனம் தான் பேசுவார்கள். சுட்டுத் தள்ளி விட்டால், ரசிகர்களுக்குச் சப்பென்று போகுமே. 15 நிமிடமாவது காரசாரமான சொற்போர் வேண்டாமா? சமீபத்தில் தானே பராசக்தி வந்து சக்கைப் போடு போட்டது. அதே சிவாஜி கணேசன், அதே கனல் கக்கும் வசனம் போட்டாத் தானே நல்லாருக்கும். என்ற 1960 களின் சிந்தனை இன்னும் ஜீவித்திருக்கிறது என்பதை சமீபத்தில் தொலைக்காட்சி ஏதோ ஒன்று காட்டிய ஒரு படத் துணுக்கில், அது சன் டிவியின் டாப் டென் ஆக இருக்கலாம். அல்லது அந்த வகையில் இன்னொரு தொலைக்காட்சி நிறுவனத்தின் இன்னொன்று. அதே துப்பாக்கி. அதே எதிரும் புதிருமாக சுட்டுத்தள்ளிவிட்டுத் தான் மறு காரியம் என்று துப்பாக்கியைக் குறி வைத்து நிற்கும் இருவர். இருவர் இடையே மூன்றடி தூரமே இருக்க இருவரும் ஒருவரை ஒருவர் கனல் கக்கும் இரண்டு தனித் தனி குற்றப் பத்திரிகையை ஆளுக்கொன்றாக மாறி மாறி ஒப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சுட்டுத் தொலைத்துக் காட்சியையும் அவர்கள் எண்ணத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவர கட்டாயமாக மறுக்கிறார்கள். இடையில் நிற்பது வசனகர்த்தா கொடுத்த பத்துப் பக்க வசனம். தீப்பொறி பறக்கும் தமிழில். ரசிகப் பெருமக்களுக்குத் தமிழ் அறிவும் புகட்டியாயிற்று. கருணாநிதி-சிவாஜி கணேசன் பின் இரண்டு கணேசர்களும் இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன் ஸ்தாபித்த கலை மரபையும் பேணிக் காத்து வளர்த்து இந்தத் தலைமுறைக்குக் கொடுத்தும் ஆயிற்று. இதைத் தான் பன்முனை வளர்ச்சி என்று இன்னொரு துறையில் சொல்வார்கள். .

வெங்கட் சாமிநாதன்
--Ksubashini 18:08, 26 நவம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini, Geetha Sambasivam மற்றும் Na.Kannan