"மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்:019" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடுமரபு விக்கி இருந்து
12:20, 16 ஜூலை 2012 இல் நிலவும் திருத்தம்
இந்த மாதிரி ஒரு நாட்டில், சினிமாவே இன்றைய கலாசாரத்தின் குணங்களை நிர்ணயித்துவிடும் போது, 90 சதவிகிதம் தசாவதாரத்தையும், ரோபோவையும் முதல்நாள் முதல் ஆட்டத்தைப் பார்க்கவேண்டும் என்று அலையும் கூட்டமாகவே அந்த ஒரு ஆட்டவெறிக்கு முன்னூறோ ஐந்நூறோ செலவழிக்கத் தயங்குவதில்லை தான். ஆனால் இந்த ஏழு கோடி மக்களின் மந்தைக் கலாசாரத்திலும் தமிழ் நாட்டில் ஒரு சில ஆயிரவராவது World Movies–ம் Lumiere movies –ம் ஆர்வத்தோடு பார்க்கிறவர்கள் இருப்பார்கள் தானே. அவர்களிடமிருந்து இது ஜப்பானியப் படத்தின் காப்பி என்றோ சரி, உங்கள் இஷ்டப்படியே ‘’இன்ஸ்பைரேஷன்’ என்றோ வைத்துக்கொள்ளலாமே, தெரியாமலா போய்விடும். அந்தக் காலத்தில் என்றால், தமிழில் கதைகள் படிக்கத் தொடங்கிய காலம் கல்கி லியனார்ட் மெர்ரிக்கிலிருந்து பிரதி எடுத்தாரா இல்லை வேறு எங்கிருந்து என்பது ஒரு க.நா .சுப்பிரமணியத்துக்குத் தான் தெரிந்திருந்தது. அது ஒரு காலம். ஜாக் லண்டனிடமிருந்தும் தைரியமாக காப்பி அடிக்கலாம் என்று பின்னாலும் சிலர் நினைத்தார்கள். அதுவும் தெரிந்திருந்த ஒரு சிலர் தமிழ் நாட்டில் இருக்க மாட்டார்களா? ஆங்கிலம் தானே. மூலம் என்ன அராபிய மொழியிலா இல்லை ஸ்பானிய மொழியிலா? ஆனால் சினிமாவில் காப்பி அடிப்பது என்பது மரியாதைக்குரியதாக்கிய இயக்குனர் திலகங்கள், இயக்குனர் சிகரங்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இன்றும் ஏதோ பெரிய சகாப்த புருஷர்களாக போற்றித் துதிக்கப்படுகிறார்கள். இதுவும் நான் முன் சொன்ன மந்தைக் கலாசாரத்தின் விகார முகங்கள் தான். ஆக, நிலைமை நாவல் சிறுகதை மாதிரி இல்லை. நகல் எடுத்தாலும் தமிழுக்கான மசாலா சேர்த்தால் எதாவது சிகரம், திலகம் என்று தமிழில் பட்டம் வேறு கிடைத்துவிடும் பாக்கியம் இருக்கிறதே.
சரி உண்மையில் ’இன்ஸ்பைரேஷன்’ என்றால் அது பார்த்ததையே திரும்பச் செய்ததாக இராது அது தன்னுள் ஒரு பயணத்தை மேற்கொள்ளத் தூண்டும். சுற்றித் தமிழ் நாட்டு வாழ்க்கையை, தான் வாழ்ந்த வாழ்க்கையை தன் அனுபவங்களை அசை போடச் சொல்லும். நான் ஜப்பானிய மூலப் படத்தைப் பார்த்ததில்லை. நந்தலாலாவில் எனக்குப் பிடித்த ஒரு காட்சி ஆரம்பத்திலேயே சில நிமிடங்களில் வந்து விடுகிறது. பையனும் பாட்டியும் வீட்டில் தனியே இருக்கிறார்கள். அம்மா இல்லை. “அம்மா எப்போ வருவா?” என்று கேட்கிறான். பாட்டி தெரியாது என்கிறாள். சற்றுக் கழித்து பாட்டியைக் கை பிடித்து கழிவறைக்கு அழைத்துச் செல்கிறான். காத்திருந்து பின் அங்கிருந்து திரும்பப் பாட்டியை அழைத்து வருகிறான். தனித்து விடப்பட்ட பையனுக்கு பொறுப்பு தெரிகிறது. நல்ல காட்சி. தமிழ்ப் படங்களில் வரும் சிறுவர்களைப் போல பெரியவர்களுக்கான நீண்ட புத்திசாலித்தனமான வசனம் ஏதும் பேசுவதில்லை.. ஆனால் ஏன் அந்தப் பையன் தலையைக் குனிந்து கொண்டே அவ்வளவு நேரம் நிற்கிறான் என்ற குடைச்சலுக்கு பதில் அடுத்த படத்தில் யுத்தம் செய் படத்தில் கிடைத்து விடுகிறது. அதில் ரொம்பவும் புத்திசாலியும் சுறுசுறுப்பும் திறமைசாலியும் மேலதிகாரிகள் பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு புலன்விசாரணை செய்யும் அதிகாரியாக வரும் சேரன் ஏன் எப்போதும் என்னமோ தப்புப் பண்ணி தலை நிமிர வெட்கமும் பயமும் கொண்டவர் மாதிரி தலை குனிந்தவாறே இருக்கிறார்.? அவர் என்ன போலீஸ் அதிகாரியா, இல்லை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு வரப்பட்ட பிக் பாக்கெட் கேஸா? படம் முழுதும் மிஷ்கினின் ப்ரோடகனிஸ்ட்கள் எல்லாம், தலை குனிந்தே இருக்க வேண்டிய அவசியம் என்ன? நந்தலாலாவில் அந்தச் சின்னப் பையன் இங்கு யுத்தம் செய் படத்தில் சேரன். இதுதான் மிஷ்கினுடைய இயக்கத்தைக் காட்டும் முத்திரையோ. இது தான் மற்ற தமிழ் சினிமாக்காரர்களிடமிருந்து அவரைத் தனித்துக்காட்டும் பிரயத்தனமோ என்னவோ. ரஜனி ரம்பம் அறுக்கும் சத்தத்தோடு விரலை அசைக்கும் சமாசாரம் போல.. சேரன் ஸ்வபாவத்தில் இந்த ஸ்டைலில் நிற்பவர் இல்லையே.
மறுபடியும் எனக்கு மிஷ்கினுக்கு இன்ஸ்பைரேஷன் தந்த ஜப்பானிய படத்தைப் பார்த்தது கிடையாது. நந்தலாலா நகல் தான் என்பதை அந்தப்படத்தின் பெரும்பகுதி எனக்குச் சொன்னது.
தினமும் பறங்கிக்காயையே குழம்பில் போட்டு ஹிம்சை படுத்திக் கொண்டிருந்த ஹோட்டல் ஒரு நாள் கத்தரிக்காயைக் குழம்பில் போட்டால் ஒரு பரவசப் புத்துணர்ச்சி பரவும் இல்லையா?. அது போகட்டும். இந்த ஸ்ரீதருக்கு பிரியமான வின்சென்ட், ‘பார்வையாளர் மத்தியில் பெரும் பரவச அலையைப் பெருக்கியவர். “மன்னன் தான்யா இந்த ஆளு, வின்சென்டு. என்னமா காமிராவை வச்சிக்கிட்டு பூந்து வெள்ளாட்றான் பாருய்யா” என்று ஆரவார கரகோஷம் வாங்கியவர். அவர் செய்த புதுமை சாவித்துவாரம் வழியாகக் காட்சி அமைப்பது. மேஜைக்குக் கீழே காமிராவை வைத்துப் படமெடுப்பது என்று. அது எதற்கு இந்த மாதிரி சர்க்கஸ் வித்தையெல்லாம் என்பதை வின்சென்ட்டும் சொல்லவில்லை. பார்வையாளரும் வாயைப் பிளந்தே வைத்திருந்ததால் கேட்கவும் வாய்ப்பில்லாமல் போயிற்று. உலகிற்கே காமெரா தரும் ஜப்பானில் யோஷிஜிரோ ஓஷூ என்றொரு சினிமா இயக்குனர் இருக்கிறார். அகிரா குரஸவாவுக்கு இணையாகப் பேசப்படுபவர். அவர் திடுக்கிடும் புதுமைகள் ஏதும் செய்வதில்லை. ரொம்ப அமைதியான, சம்பிரதாயங்கள் வழுவிய மனிதர். அவர் படங்கள் எதிலும் காமிரா இருந்த இடத்தை விட்டு நகர்வதில்லை. நடிப்பிடத்திற்கு எதிரே ட்ரைபாடில் காமிராவை வைத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து பின் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு வரும் வழக்கமோ என்று தோன்றும். காமிரா நகரவே நகராது. ஆனால் அவர் சொல்ல வந்த கதை முழுதும் மிக நேர்த்தியாக சொல்லப்பட்டு விடும். காமிரா நகரவே இல்லை என்பது பற்றிய பிரக்ஞையே நமக்கு வராது. நான் முன்னாலேயே சொன்னபடி நமக்குக் காமிரா, நடிப்பு, செட்டிங் பற்றியெல்லாம் நினைப்பே வராதவாறு கதையைச் சொல்லிவிடும் திறன் தான் திறன். மற்றதெல்லாம் கோமாளித்தனமான பாவனைகள் தான். புலியைப் பார்த்துச் சூடு போட்டுக்கொள்ளும் சமாசாரம் தான்.
சில பெரிய இயக்குனர்களின் சில படங்களிலும் டான்ஸும் பாட்டும் இடம்பெற்றிருக்கின்றன தான். ஷ்யாம் பெனெகல், பூமிகா என்ற படத்தில் கடந்த காலத்திய ஹம்ஸா வாடேகர் என்ற ஒரு மராத்தி நடிகையின் வாழ்க்கையைப் படமாக எடுத்திருக்கிறார். அதில் அந்நடிகை நடித்த காலத்திய பாணி சினிமா பாடல்களும் நடனங்களும் இடம்பெற்றிருக்கும். முழுதும் அல்ல. துணுக்குகளாக. லதாமங்கேஷ்கர்/ஆஷா போன்ஸ்லேயை மாதிரியாகக் கொண்டு இரண்டு சகோதரிகளின் கதையை ஒரு படத்தில் சொல்லியிருப்பார். அதிலும் பாட்டுக்கள் இடம் பெற்றுள்ளன. சத்யஜித்ரேயின் ஜல்ஸாகர் என்ற படத்தில் ஹிந்துஸ்தானி சாஸ்திரீய சங்கீதக் கச்சேரியே நடக்கும். கச்சேரிக்காக அல்ல. அழிந்து வரும் பிரபுத்துவ வாழ்க்கைச் சூழலைச் சொல்வதற்காக. மாறிய காலச் சூழலில், கடந்த கால பிரபுத்துவ எச்சமாக வாழும் ஒரு பிரபுவின் வாழ்க்கையில் பண்பும் நாகரீகமும், பண்பட்ட கலை வாழ்வும் இருந்தது. அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள புதுப் பணக்காரனின் பாமரத்தனத்தையும் பணத்திமிரையும் அங்கு நாம் காண்போம்.
-வெங்கட் சாமிநாதன் --Ksubashini 22:04, 11 நவம்பர் 2011 (UTC) |