"நடுகற்கள், கல்வெட்டு காட்டும் வரலாறு பகுதி 1" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
(புதிய பக்கம்: '''நடுகற்கள் கல்வெட்டு காட்டும் மக்கள் வரலாறு மக்கள் மொழி''' <br> …)
 

11:06, 5 ஜூலை 2012 இல் கடைசித் திருத்தம்

நடுகற்கள் கல்வெட்டு காட்டும் மக்கள் வரலாறு மக்கள் மொழி

எளிய மக்கள் வரலாறு மக்கள் மொழி என்பவை பற்றிய நோக்கில் நடுகல் கல்வெட்டுகள் உணர்த்தும் செய்திகளை விளங்கச் செய்வதே இக்கட்டுரை வரையப்பட்டதன் நோக்கம். நடுகற்கள் குறித்த அறிமுக உரை 'தமிழ்ப் பெயர்கள் ஏந்திய நடுகற்கள் ' என்ற தலைப்பில் ஏற்கெனவே ஒரு கட்டுரையாக வரையப்பட்டுவிட்டது. அதன் இரண்டாம் பகுதியே இக்கட்டுரை. தமிழ் முன்னோரே மேலை நாகரிகங்களையும், கீழை நாகரிகங்களையும் ஏற்படுத்தினர் என்பதற்குச் சான்றாக நடுகல் கல்வெட்டுத் தமிழ்ப் பெயர்களுடன் ஒத்து உள்ள பிற நாகரிக மன்னர்ப் பெயர்களும் இதில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளன.


நடுகல் கல்வெட்டுகளில் சிறப்பாக ஆளப்பட்டு உள்ள மருமக்கள் > மருமகன், மக்கள் > மகன், சேவகன், அடியான் ஆகிய சொற்கள் வெவ்வேறு நிலைகளில் உள்ள படைவீரர்களைக் குறிக்கின்றன. ஒரு வேந்தனுக்கு அவன் தனியாகப் பேணுகிற நிலைப் படை (Reserve Army) தவிர படை உதவிகள் அவனுக்கு அடங்கிய மாமன்னர், மன்னர் ஆகியோரிடம் இருந்தே வந்தன. ஆதலால் ஒரு வேந்தனுக்கு மன்னன் எனபவன் படைத்தலைவன் ஆவதால் மருமகன், மகன், சேவகன் எனக் குறிக்கப்பட்டான். அவ்வாறே ஒரு மன்னனின் மேலாதிக்கத்தை ஏற்ற பல சிற்றரசர் அவனுக்கு படைத் தலைவர் ஆவதால் மருமகன், மகன், சேவகன் எனக் குறிக்கப்பட்டனர். ஒரு சிற்றரசனுக்குக் கீழ் இருந்த வேள், கிழான் எனும் ஊர்த்
தலைவன் படைத்தலைவன் ஆவதால் மகன், சேவகன் எனப்பட்டான். ஈண்டு, வேந்தன்
குலோத்துங்கனுக்கு பல்லவன் கருணாகரத் தொண்டைமான் படைத் தலைவனாய் இருந்ததை
எண்ணுக.


ஒரு வேந்தனுடைய வெற்றியைத் தீர்மானிக்க அவன் உடைய நிலைப்படை மட்டும் அல்லாது
மன்னர், சிற்றரசர், வேள், கிழார்கள் நல்கும் துணைப்படை உதவியும் இன்றியமையாத இடம் பெற்று இருந்தது. இதனால் வேந்தனுடைய ஆட்சிப் பரப்பில் அடங்கிய நிலம் ஊர், நாடு, கோட்டம், மண்டலம் எனப் பிரிக்கப்பட்டு முறையே கிழார்கள், வேள், சிற்றரசர், மன்னர் அல்லது மாமன்னர் என்போரால் ஆளப்பட்டன. இவர்கள் தத்தம் நிலைக்குத் தக்கவாறு தம் படைக்கு ஆள் சேர்த்து பயிற்சி அளித்தும், படையை ஒழுங்கமைத்தும், பேணியும் வரவேண்டும் என்பது பொறுப்பு. இப்பொறுப்பிற்காக இவர்களுக்கு வேந்தனோ மாமன்னனோ பணம் ஒதுக்குவதில்லை மாறாக இவர்கள் ஆளும் பகுதியில் வரி திரட்டி அதில் ஒரு பங்கைத் தம் படைப் பேணலுக்குச் செலவிட்டு இன்னொரு பங்கைக் கப்பமாகத்
தன் மேல்ஆட்சியாளனுக்கு செலுத்த வேண்டும் என்பது ஒரு வழிவழி உடன்பாடு.


எனவே நிலமும் கப்பத் தொகையும் படைப் பேணலுக்கு ஒரு முகாமையான பங்கைப் பெற்றிருந்தன என்பது தெளிவு. இதில் முரண் ஏற்படும் போது மேலாட்சியாளன் தூண்டுதலில் கீழ் உள்ள இரு அதிகார நிலையினர் இடையே போர் மூளுகின்றது. அதே நேரம் வெளியே இருந்தும் பிற வேந்தரால் போர் திணிக்கப்படுவதும் உண்டு. நிலக்கட்டுப்பாடு ஆதிக்கமே பெரும்பால் போருக்கு வழிகோலின எனலாம். ஏனெனில் அதுவே படைக்கு வேண்டிய செல்வத்தை உண்டாக்க வல்லது. இதனால் படைத் தொடர்பான
ஆள்திரட்டல், பேணல் ஆகிய தகுதிகளை நோக்கியே சிற்றரசர் (அரைசர்), வேள், கிழார் என்போர் மன்னர்களாலும், வேந்தர்களாலும் அப்பதவியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டனர். பலவேளைகளில் புதிதாக அப்பொறுப்புகளில் அவர்கள் அம்ர்த்தப்பட்டனர் என்றே கொள்ளலாம். இந்த தகுதி கருதியே வேட்டுவர், புலையர், வணிகர் பரவர் எனக் குமுகத்தின் எல்லாத் தரப்பினரில் இருந்தும் தக்கவர் இப்பதவிகளில் இருந்ததை நடுகல் கல்வெட்டுகள் பதிவு செய்கின்றன. தீண்டாமையும், குமுக ஒடுக்குமுறையும் விசயநகர ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் வரை ஆழமாக வேர் கொள்ளவில்லை எனத் தெரிகின்றது.


நாடுபிடிச் சண்டைக்கு ஆநிரைப் போர் ஒரு தொடக்கச் சடங்காக வழிவழி மரபாக மேற்கொள்ளப்பட்டு வந்து உள்ளது. தொறு கவரும் வெட்சிப் போர் தரப்பினரிலும், தொறு மீட்கும் கரந்தைப் போர் தரப்பினரிலும் பல வீரர்கள் மாண்டனர். இப்போர்களில் வீரச் சாவடைந்த மறவர்களை சிறப்பித்தும் தெய்வமெனத் தொழவும் அது பொருட்டு மாண்ட வீரரின் உறவினர்களால் அல்லது ஆண்டைகளால் அவர் நினைவில் நிறுத்தப்பட்டவையே நினைவு கற்கள் எனும் நடுகற்கள். மாண்டவர்க்கான இந்த
சிறப்புச் செய்கையானது அடுத்து வரும் தலைமுறையினரை படையின் பால், போரின் பால்
ஈர்க்க உதவுவதற்கே எனப் புரிந்து கொள்ளலாம். மாண்ட மறவருக்கு நெய்த்தோர் பட்டி எனும் நிலக்கொடையும் வழங்கப்பட்டன. இந்நடுகற்களில் ஒரு நடைமுறைக்காவே (formality) வேந்தனின் பெயரும் அவன் ஆட்சி ஆண்டும் குறிக்கப்பட்டன.  பெரும்பாலும் வேந்தனுக்கு இதில் நேரடித் தொடர்பு கிடையாது. நடுகல்லின் ஏனைய செய்திகள் யாவும் எளிய வீரனைப் பற்றியவை. இக் கல்வெட்டுகள் நிகழ்ந்த போரின் காட்சிகளை உள்ளபடியே நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துபவை. இதில்
விவரிக்கப்படும் வரலாற்று நிகழ்வு எளியோருடைது, படிக்கப் படிக்க தீஞ்சுவை ஊட்டுவது.


தமிழ்நாட்டில் களப்பிரர் ஆட்சி தொடங்கி அடுத்தடுத்து வந்த அரசர்கள், சமணர், பௌத்தர், பிராமணர், நாடு பெயரும் வணிகர் என 3% அளவேயான மக்கள் தமிழுடன் பிராகிருத சமற்கிருத சொற்களைக் கலந்து செயற்கையான ஒரு மொழியை உண்டாக்கி மற்ற 97% அளவுள்ள மக்களுக்கு விளங்காத அந்தச் செயற்கை மொழியில்தான் செப்பேடுகள், கல்வெட்டுகள், ஓலை ஒப்பந்தங்கள் என எல்லா ஆவணங்களையும் வெளியிட்டனர். அம்மொழியிலேயே மத புராண இலக்கியங்களையும் உண்டாக்கினர். இந்த செயற்கை மொழி இன்னும் கீழ்மட்டத்தில் உள்ளோரின் வழக்கு மொழியாகப் பரவுவதற்கு சில நூற்றாண்டுகள் ஆயின. அதுவரை அந்த 97% மக்கள் தம்முன்னோர் பேசிய பேச்சு வழக்கு மொழியையும் அதன் இலக்கிய நடையையுமே கைக்கொண்டனர். ஆயினும் மக்கள் மொழியின்
தன்மை, நிலை குறித்து அறிய அம்மக்கள் நிறுத்திய நடுகல் கல்வெட்டுகள் மட்டுமே சான்றாக உள்ளன. இவ்வாறான கல்வெட்டுகள் எண்ணிக்கையில் மிகச் சிலவே ஆகும் (2%). மாறாக அறிஞர்கள் கருத்தில் கொள்ளும் செயற்கை மொழியில் அமைந்த 98% உள்ள கல்வெட்டுகளும், செப்பேடுகளும் 3% அளவே உள்ள மக்களால் ஆக்கப்பட்டவை என்பதை அறிஞர்கள் உணரவில்லை. இதனால் அறிஞர்கள் மக்கள் மொழி குறித்து அறிவிக்கும் முடிவுகள் யாவும் தவறானவையாக உள்ளன. காட்டாக, தொடக்கக் கால மலையாள இலக்கியங்கள் நம்பூதிரி பிராமணர் மற்றும் அரசரால் செயற்கைக் கலவை மொழியில்
ஆக்கப்பட்டன. ஆனால் மக்கள் மொழி என்னவோ இதனினும் வேறுபட்ட வட்டார வழக்குத் தமிழாய் இருந்தது என்பதே உண்மை. இப்படித் தான் ஆந்திரத்திலும், கருநாடகத்திலும் மக்கள் மொழி அரைத் தமிழாய் இருந்து உள்ளது. ஆனால் அரசருடைய கல்வெட்டு, செப்பேட்டு மொழி செயற்கைக் கலவை மொழியில் அமைந்திருந்தது என்பதற்கு அங்கத்து நடுகல் கல்வெட்டுகளே சான்று.


தமிழ்நாட்டில் பல்லவர் கால நடுகற்களில் நல்ல தமிழ்ச் சொற்களும், மக்கள் பேச்சு வழக்குச் சொற்களும் உள்ளன. அவற்றில் ஒரு சமற்கிருதச் சொல்லோ, கிரந்த எழுத்தோ தொடக்கக்கால பல்லவர் நடுகல் கல்வெட்டில் இல்லை. மாறாக சமற்கிருத பெயர்களில் உள்ள சமற்கிருத எழுத்துகளை நீக்கித் தமிழ் மரபிற்குத் தக்கவாறு அவை தமிழ்ப்படுத்தி எழுதப்பட்டு உள்ளன. நடுகல்லில் உள்ள மொழி வழக்கு சங்ககாலத்தின் இடையறாத தொடர்ச்சியே எனலாம். ஆந்திரம் கருநாடகம் போல தமிழகத்தில் இதுவரை பிராகிருத, சமற்கிருத நடுகல் கல்வெட்டு ஒன்று கூட அறியப்படவில்லை. இதற்குக் காரணம் தமிழகத்தில் நடுகல் கல்வெட்டுகளை மக்களே, மாண்ட வீரரின் உறவினரே பொறித்தனர். மன்னர், வேந்தர் எவரும் நடுகல் பொறித்திடவில்லை. அவருக்கும் நடுகல் பொறிக்கப்படவில்லை. அப்படிப் பொறித்திருந்தால் அதை செயற்கைக் கலவை மொழியிலேயே பொறித்திருப்பர் எனலாம். ஒரிரு சமற்கிருத சொல் கொண்ட நடுகல் ஒன்றிரண்டு சிற்றரசர்களுடையன ஆகும். இரண்டாம் நந்தி வர்மப் பல்லவனுக்குப் பிறகு தமிழ் எழுத்திலும் நடுகற்கள் வெட்டப்பட்டு உள்ளன. தந்தி வர்மன் காலம் வரை நடுகல் கல்வெட்டுகள் சுருக்கமாகவே இருந்து உள்ளன. இதன் பின் பல்லவர் கால நடுகற்கள் சற்றே விரிவாக உள்ளன. தந்திவர்மனுக்கு முற்பட்ட நடுகற்களில் ஆண்டு எண்கள் எழுத்துகளிலேயே குறிக்கப்பட்டன. சோழர் கால நடுகல் கல்வெட்டுகளில் மொழி ஆளுமையும் சொல் ஆளுமையும் மாறுபட்டிருப்பதை உணர முடிகின்றது. சமய எழுச்சி காரணமாக தமிழகத்தில் சோழர் ஆட்சியில் நடுகல் வழக்கம் குன்றி விட்டது. ஆனால் அடித்தட்டு மக்களிடம் நடுகல் ஒரு வழிபாடாக இன்றும் நிலவி வருகின்றது. இனி, மக்கள் வரலாற்றை, மக்கள் மொழியை நேரடியாக கல்வெட்டு பொறிப்பில் அதன்
விளக்கத்தோடு காணலாம்.


--Geetha Sambasivam 11:06, 5 ஜூலை 2012 (UTC)


பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 5 ஜூலை 2012, 11:06 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,550 முறைகள் அணுகப்பட்டது.