"மணி ஐயர் தொடர்ச்சி 5 உ.வே.சா." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 119: வரிசை 119:
 
<br>  
 
<br>  
  
--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 20:59, 11 ஜனவரி 2012 (UTC)  
+
--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 20:59, 11 ஜனவரி 2012 (UTC)<br>
  
<br>
 
  
Category:உ.வே.சா
+
 
 +
<br>
 +
 
 +
[[Category:உ.வே.சா]]

16:28, 12 ஜனவரி 2012 இல் கடைசித் திருத்தம்

உ.வே.சா. நினைவு மஞ்சரி

முதல் பாகம்

9. மணி ஐயர்--- இறுதிப் பகுதி!


மணி ஐயரை நான் உண்மையிலே சில விஷயங்களில் என் தந்தையாரைப் போலவே எண்ணியிருந்தேன். என்னுடைய தமிழாராய்ச்சி விஷயத்திலும் அபிவிருத்தி விஷயத்திலும் அவருக்கிருந்த பேரன்பே அதற்குக் காரணம். நான் கும்பகோணத்தில் வேலை பார்த்து வந்தபோது தமிழ் நூற்பதிப்பின் பொருட்டு விடுமுறைக்காலங்களில் சென்னைக்கு வந்து சில நாட்கள் தங்கியிருப்பேன். அக்காலங்களில் ஒவ்வொரு முறையும் மணி ஐயரைப் பார்த்துச் செல்வேன். போகும்போதெல்லாம் அவர் கூறும் வார்த்தைகளால் என் காது குளிரும். அலைச்சலினாலும் உழைப்பினாலும் சரியான வேளையில் ஆகாரமில்லாமல், ஏதோ கிடைத்ததை உண்டுவிட்டுக் காரியத்திலே கண்ணாயிருப்பேன். என் நிலையை அவர் நன்கு உணர்ந்தவர். ஆதலின் நான் போனால் ஸ்நானம் செய்யச் சொல்லித் தம்மோடு சாப்பிடச் சொல்வார்; தம் சமையற்காரனை அழைத்து, “அடே, அவர் இரவும் பகலும் உழைத்துக் கஷ்டப்படுகிறார். நிறைய நெய் விடு. தேங்காய்ப்பால் காய்ச்சிக் கொடு. பாலிலே கற்கண்டு போட்டுக் காய்ச்சிக் கொடு.” என்று உத்தரவு செய்வார். அந்த உபசாரத்தினாலும் உணவினாலும் என் வயிறு குளிரும். அக்காலங்களில் அவரை என் தாய் போலக் கருதினேன். எனக்கு இன்னது வேண்டுமென்று அறிந்து உதவும் அவரை, “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிவுடையவர்.” என்றே கூற வேண்டும்.


இவ்வாறு பெற்றோர்களின் ஸ்தானத்தில் வைத்து மதித்திருந்த என் கருத்துக்கு இணங்க மணி ஐயர் அந்த நிலவொளியில் கூறிய வார்த்தைகள் உடலில் அமுத தாரைபோலப் பாய்ந்தன. அன்று முதல் சில நாட்கள் வரையில் அவ்வார்த்தைகளினால் உண்டான இன்ப உணர்ச்சி என் நெஞ்சத்தினின்றும் நீங்காமல் இருந்தது. 


மயிலாப்பூரில் பென்னாத்தூர் சுப்பிரமணிய ஐயர் ஹைஸ்கூலை மணி ஐயர் 1905-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 13-ம்௳ திறந்து வைத்தார். அன்று அங்கே பெருங்கூட்டம் கூடியது. அந்தப் பள்ளிக்கூட விஷயமாகச் சில செய்யுட்கள் இயற்றிப் படிக்க வேண்டுமென்று அதன் காரியதரிசி விரும்பினார்; அங்ஙனமே நான் நான்கு செய்யுட்களை எழுதிக்கொண்டு போயிருந்தேன்.


அன்று நான் அங்கே போகும்போது அந்தக் கட்டிடத்தின் உள்ளும் புறமும் ஜனங்கள் மொய்த்திருந்தனர். வாசலில் போய் நின்றேன். அந்தக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே செல்ல என்னால் முடியவில்லை. வாழ்த்துச் செய்யுட்களை வாசிக்க நான் உள்ளே செல்ல வேண்டும். கூட்டத்தினரோ சிறிதேனும் வழி விடவில்லை. நின்றவர்களும் என்னை அழைத்துச் செல்லவில்லை. நான் ஒன்றும் தெரியாமல் மயங்கி நின்றேன். அப்பொழுது உள்ளே இருந்த மணி ஐயர் என் தலையைக் கண்டு விட்டார்; நான் உள்ளே புக முடியாமல் தவிப்பதைக் கூட அவர் உணர்ந்திருத்தல் கூடும். அங்கிருந்தபடியே, “ஸ்வாமிநாதையரவாள்! வாருங்கோ! இப்படி வரவேண்டும்.” என்று பலத்த தொனியோடு அழைத்தனர். அடுத்த நிமிஷமே எல்லோரும் என் பக்கம் பார்க்கத் தொடங்கினர். கூட்டம் வழிவிட்டது. என் கையைப் பிடித்து இருவர் உள்ளே அழைத்துச் சென்றனர். பெரிய பெரிய உத்தியோகஸ்தர்களெல்லாம் ஆளுக்கு ஒரு நாற்காலியை எடுத்து எனக்கும் போட ஆரம்பித்தனர். நான் சிரித்துக்கொண்டே மணி ஐயருக்கு அருகில் போய் அமர்ந்தேன்.


செய்யுட்களைப் படித்துக் காட்டுவதற்கு முன் சபைத் தலைவரைப் பற்றிச் சில விஷயங்கள் சொல்லும்போது உள்ளே புகுவதர்கு நான் பட்ட கஷ்டத்தையும் எடுத்துச் சொன்னேன்; “இவர்கள் என்னைக் கூப்பிடாவிட்டால் நான் உள்ளே வந்திருக்க முடியாது. இவர்களுடைய அழைப்பு இவ்வளவு பேரையும் என் பக்கம் திருப்பி விட்டது. அந்தச் சமயத்தில் நான் பெறாத உபசாரங்களைப் பெற்றேன். எனக்கு முன்பு பழக்கமில்லாதவர்களும், என்னைக் கண்டு பராமுகமாக இருந்தவர்களும் என்னைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இவர்கள் பார்வை விழுந்ததன் விசேஷம் அது. எனக்குத் தனியே ஒரு கெளரவம் இல்லை.


மாகஞ்சிறுகக் குவித்து நிதிக்குவை
ஈகையினேக்கழுத்த மிக்குடைய—மாகொல்
பகை முகத்த வென்வேலான் பார்வையிற்றீட்டும்
நகை முகத்த நன்கு மதிப்பு.”


என்று பழைய காலத்திலே ஒரு பெரியார் சொல்லி யிருக்கிறார். பெரிய மனிதர்கள் தங்கள் பார்வை மூலமாக உண்டாக்கும் மதிப்பானது, பலகோடி திரவியங்களைக் காட்டிலும் சிறப்புடையதென்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் இப்போது தெளிவாக விளங்கியது.” என்று பேசினேன்.


அதைக் கேட்ட மணி ஐயர், “கூட்டம் அதிகம். உங்கள் அருமையை அவர்கள் அறிவார்களா? நான் ஜட்ஜ்; அதனால் மதிப்பு.” என்று சொல்லிச் சிரித்தார். அன்று நான் இயற்றிய செய்யுட்களைப் படித்தேன். மணி ஐயர் கேட்டு மகிழ்ச்சியுற்றார்.


ஒரு முறை நான் காலேஜுக்குப் போய்க் கொண்டிருந்தேன். என் பின்னால் கோச்சு வண்டியில் வந்து கொண்டிருந்த மணி ஐயருடைய பேரராகிய சங்கரையர் என்னைக் கண்டதும் கீழே இறங்கித் தம் வண்டியில் ஏற்றிக் கொண்டு காலேஜில் விட்டார். அவர் அக்காலேஜில் அப்போது படித்து வந்தார். அன்று மாலையில் நான் மணி ஐயரைச் சந்தித்தபொழுது, “தங்கள் உயர்ந்த குணங்கள் தங்கள் சந்ததியாரிடத்தும் விளங்குவதை இன்று கண்டேன்.” என்று சொன்னேன்.


“என்ன சமாசாரம்?” என்று அவர் கேட்டார். நான் விஷயத்தைக் கூறினேன். அவர் மகிழ்ச்சியடைந்ததோடு உடனே சங்கரையரைக் கூப்பிட்டனுப்பினார்; நீ காலையில் இவர்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு காலேஜில் விட்டாயாமே. அப்படித்தான் செய்ய வேண்டும். ஸந்தோஷம். இப்படியே எப்போதும் மற்றவர்களுக்கு உபகாரம் செய்து வரவேண்டும்,” என்று அவரைப் பாராட்டினார்.


என்னுடைய தமிழாராய்ச்சிக்கு மணி ஐயர் செய்த உதவிகளுள் ஒன்று முக்கியமானது. எனக்குத் துரைத்தனத்தார் ஒரு சமயம் தமிழ் நூல் வெளியீடுகளுக்காக ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள். அதற்குக் காரணராக இருந்தவர்கள் மணி ஐயரும், பிரஸிடென்ஸி காலேஜ் பிரின்ஸிபாலாக இருந்த ஶ்ரீமான் பில்டெர்பெக் துரையுமேயாவார்.


இயல்புகள்
விடியற்காலையில் தவறாமல் எழுந்து நீராடுவது மணி ஐயர் வழக்கம். பிறகு ஜபம் செய்வார். மந்திர ஜபத்தில் அவருக்கு மிக்க நம்பிக்கை உண்டு. ஸ்காந்தபுராணக் கீர்த்தனம் இயற்றிய பெருங்கரை ஶ்ரீ கவிகுஞ்சரபாரதியாரிடத்தில் அவர் பஞ்சாக்ஷர உபதேசம் பெற்றார். பாரதியாருடைய குடும்பத்தினருக்கு அவர் பல சமயங்களில் உதவி புரிந்திருக்கிறார்.


அவருடைய உபாஸனாமூர்த்தி ஶ்ரீவேணுகோபாலர்; அம் மூர்த்தியினுடைய மந்திர ஜபத்தை நெடுநேரம் இருந்து செய்வார். பகவத்கீதை ஆராய்ச்சியில் அவர் மனம் பெரிதும் ஈடுபட்டது. தேவார, திருவாசகப் பாடல்களைக்கேட்டு உருகிப் போவார். திருநெல்வேலி ஹிந்து காலேஜில் ஆசிரியராக இருந்தவரும், எட்டயபுரம் ஜமீனில் சிலகாலம் மானேஜராக இருந்தவரும், என் நண்பருமாகிய மஹாலிங்கையரென்பவரை அழைத்துக்கொண்டு ஒருநாள் மணி ஐயரிடம் சென்றேன். மஹாலிங்கையர் இனிய சரீரவளம் படைத்தவர். தேவார திருவாசகங்களையும் திருப்புகழையும் பொருள் புலப்படும்படி இசையுடன் நன்றாகச் சொல்வார்.


மணி ஐயரோடு பேசிக்கொண்டிருந்தோம். மஹாலிங்கையர் சில பாட்டுக்களைப் பாடினார்; திருத்தாண்டகம் சிலவற்றை இசையுடன் சொன்னார். கேட்டு மணி ஐயர் உருகினார். மஹாலிங்கையர் திருவையாற்றுத் திருத்தாண்டகத்தை ஆரம்பித்தார்:


“ஓசை யொலியெலாமானாய் நீயே
உலகுக்கொரு சுடராய் நின்றாய் நீயே.”

என்று பாடினார். “உலகுக் கொரு சுடராய் நின்றாய் நீயே” என்ற பகுதியைக் கேட்டபோது மணி ஐயர், “ஹா! ஹா!” என்று கூறிக்கொண்டு எழுந்து நின்று தலைமேல் கைகளைக் குவித்துக்கொண்டார்: உலகுக்கு ஒரு சுடராய் நின்றாய் நீயே, உலகுக்கு ஒரு சுடராய் நின்றாய் நீயே.” என்று திருப்பித் திருப்பிச் சொன்னார்; அவர் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் பாய்ந்தது; “ஹா!ஹா! என்ன வாக்கு! என்ன உண்மை!” என்று அவர் ஆனந்த சாகரத்தில் மூழ்கிக் களித்துக் குதூகலத்துடன் ஆரவாரித்தார். அந்த ஆனந்தம் அடங்கச் சிறிது நேரம் ஆயிற்று, அப்பால் அமைதி பெற்று, “ நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு பரமோபகாரம் செய்திருக்கிறார்கள். என்ன பாடல்! என்ன பண்! இரண்டும் இசையும்போது மனத்தை எப்படி உருக்குகின்றன! எவ்வளவு உயர்ந்த பாடங்கள் தமிழிலே இருக்கின்றன!” என்று கூறினார்.


மணி ஐயருக்குச் சங்கீதத்திலே மிக்க விருப்பம் உண்டு. ஒவ்வொரு ராகத்திற்கும் ஒவ்வொரு மலரை அடையாளமாகக் கூறுவார்கள். சில ராகங்களைப் பாடும்போது சில மலர்களின் வாசனை உண்டாகுமென்றும் சொல்வார்கள். சில ராகங்களால் சில மலர்கள் மலருமென்றும் சொல்வதுண்டு.


ஒருநாள் அவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது பழைய தமிழ்நூல்களிலுள்ள அரிய செய்திகள் சிலவற்றைச் சொல்லிக் கொண்டே வந்தேன்; “வண்டுகள் பாடுவதனால் காட்டிலுள்ள மலர்கள் மலருமென்று சில செய்யுட்களில் ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது” என்று சொன்னேன். “ஆமாம்; அவ்விஷயம் உண்மையாகத் தான் இருக்கும். ராகத்திற்கும் புஷ்பங்களுக்கும் சம்பந்தம் உண்டென்பதை நான் ஆராய்ந்து அறிந்திருக்கிறேன். ஒரு சமயம் புஷ்பங்களிலுள்ள மகரந்தப் பொடிகளை ஒரு தட்டில் வைத்து அருகில் இருந்த ஒரு வித்துவானைப் பாடச் சொன்னேன். பல இடங்களில் சிதறுண்டிருந்த அந்தப் பொடிகள் தாமாகவே சேர்ந்து கொண்டன. சிருஷ்டியில் எத்தனையோ ரகசியங்களைப் பகவான் அமைத்திருக்கிறார். அவைகளை மனிதன் எங்கே அறிய முயல்கிறான்.!” என்று எனக்கு ஒரு புதிய விஷயத்தை அவர் எடுத்துரைத்தார்.


கட்டிடங்களை அழகாகக் கட்டி அவைகளில் பல பூஞ்செடிகளை வைக்க வேண்டுமென்பது அவர் விருப்பம். மதுரையிலும், கோடைக்கானலிலும், சென்னையிலும், வேறு சில இடங்களிலும் அவர் பங்களாக்கள் கட்டினார். அங்கங்கே சண்பகம், ரோஜா முதலிய புஷ்பச் செடிகளையும் வில்வம் முதலியவற்றையும் வைக்கச் செய்தார்.


ஒரு நாள் அவரோடு நான் பேசிக் கொண்டிருந்தபோது கோடைக்கானலைப் பற்றிய பேச்சு வந்தது. “சங்க நூலாகிய புறநானூற்றில் கோடைக்கானலைப் பற்றி ஒரு பாட்டு இருக்கிறது. அங்கே கடிய நெடுவேட்டுவன் என்ற உபகாரி ஒருவன் வாழ்ந்திருந்தானாம்.” என்றேன்.


“அப்படியா? இன்னும் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?” என்று ஆவலுடன் கேட்டார்.


“அங்கே வேலிகளிலெல்லாம் முல்லைக்கொடிகள் படர்ந்து பூத்திருக்குமாம். “வெள்வீ வேலிக்கோடை” என்று புலவர் அதைப் பாராட்டியிருக்கிறார்.


“அடே! இயற்கையழகை அவர்கள் நன்றாகச் சொல்கிறார்களே! நம்முடைய பங்களாவில் முல்லைக்கொடி வைக்கச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் வந்து பாருங்கள்.” என்று அவர் கூறி மகிழ்ந்தார்.


அவருடைய ஸெளலப்ய குணத்தையும் நன்றியறிவையும் நான் என்றும் மறவேன். ஓர் இந்திய கனவானால் அடைய முடியாத உயர்ந்த பதவியை அவர் அடைந்திருந்தார். ஆனாலும் எளியவர்கட்கு எளியராகி உபகரித்த அவருடைய இயல்பு மிகவும் சிறந்தது. மதுரையில் அவருக்கு ஒரு முகம்மதியக் கிழவன் கோச்சு வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான். சென்னைக்கு அவர் வந்தபோது அவனையும் இந்நகரத்துக்கு வருவித்துக்கொண்டார். இங்கும் அவன் அவருக்கு அந்த வேலை புரிந்து வந்தான். இறுதிக்காலம் வரையில் அக்கிழவனை அவர் பாதுகாத்து வந்தார். தம்மோடு பழகியவர்கள், தம்பால் வந்து ஆதரவு தேடினவர்கள், தம் சுற்றத்தார், தம் சுற்றத்தாருக்கு உதவி புரிந்தோர் முதலிய யாவருக்கும் தம்மால் இயன்ற உபகாரங்களை அவர் செய்து வந்தார்.


சில சமயங்களில் நல்ல காரியங்களுக்குத் தாமே வலிய முன்வந்து உதவி புரிவது அவர் இயல்பு. தபால் இலாகாவில் பெரிய உத்தியோகத்திலிருந்த வி. கனகசபைப் பிள்ளை யென்பவர், “1800 வருஷத்திற்கு முந்திய தமிழர் நிலை” என்னும் புத்தகமொன்றைத் தாம் எழுதி வெளியிடப் போவதாக ஓரிடத்திற் பிரசங்கம் செய்தார். மணி ஐயர் அச்செய்தியைப் பத்திரிகையிற் கண்டு, அப்புத்தகத்தை வெளியிடும் செலவைத் தாமே ஏற்றுக்கொள்வதாக வலிந்து கடிதம் எழுதி ஊக்கமூட்டினார். அங்ஙனமே உதவி புரிந்தார்.


பழமை மறவாது பாராட்டும் சிறந்த குணம் அவர்பால் விளங்கி வந்தது. இராமநாதபுரம் ஶ்ரீ பா. இராஜராஜேசுவர சேதுபதியவர்கள் ஒருமுறை மணி ஐயரிடம் ஒரு காரியத்தை உத்தேசித்துச் சென்றிருந்தார். நானும் உடன் சென்றேன். அவரைக் கண்டவுடன் மணி ஐயர் வரவேற்றுத் தம் ஆஸனத்தை விட உயர்ந்த ஆஸனமொன்றை அளித்து உட்காரச் சொன்னார். சேதுபதி சிறிது தயங்கி நின்றார். “ஒன்றும் யோசிக்காதீர்கள். தகப்பனார் உங்கள் ஸமஸ்தான உத்தியோகத்தில் இருந்தவர்கள். அவருடைய பிள்ளையாகிய நான் உங்களுக்கு மரியாதை செய்வது என் கடமை. உட்காருங்கள்.” என்று சொல்லி அவ்வாஸனத்தில் இருக்கச் செய்தார். மணி ஐயருடைய நன்றியறிவையும் பழமை பாராட்டும் குணத்தையும் அன்று நன்றாக உணர்ந்து வியந்தேன்.


பிற்காலத்தில் மணி ஐயர் பெரும்பாலும் உலகுக்கு உபகாரமான செயல்களைச் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். காங்கிரஸ், பிரும்மஞானசபை, முதலியவற்றில் தொடர்புடையவராக இருந்தார். தர்ம ஸம்ரக்ஷண சபை என்று ஒன்றை ஏற்படுத்திக் கோயில்களின் நிர்வாகத்தில் பலவகையான திருத்தங்கள் செய்ய வேண்டுமென்று முயன்றார்.


ஓய்வில்லாத வேலைத்தொல்லைகளினால் அவருடைய தேக செளக்கியம் குறைவுற்றது. கண்ணொளியும் குறைந்தது. அஜீர்ணம் ஏற்பட்டது. தினந்தோறும் உலாத்துவார். பழத்தின் ரசம், காய்களை வேகவைத்து இறுத்துப் பண்ணிய ரசம் ஆகிய இவற்றை உண்பார். ஆனாலும் இடையிடையே வயிற்று வலி வந்துவிடும். 1924-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் அவர் இவ்வுலக வாழ்வை நீத்தார்.


அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் நான் அவரைச் சந்தித்தேன். அக்காலத்தில் நான் சிதம்பரம் மீனாட்சி தமிழ்க் காலேஜில் இருந்தேன். சென்னைக்கு வந்திருந்தபோது அவரைக் கண்டேன். அவர் உடம்பில் முதுமை இருந்ததேயன்றி வெடுக்கு வெடுக்கென்று பேசும் அவர் பேச்சிலே அதன் அடையாளம் சிறிதும் இல்லை. “இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று தமிழாராய்ச்சியைப் பற்றி வினாவினார். “நீங்கள் விடாமல் இந்த வேலையைச் செய்து வாருங்கள். உலகத்தார் ஆதரவு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் உங்கள் ஊக்கத்தைத் தளரவிடாதீர்கள்” என்று உத்ஸாகப் படுத்தினார். அதுவே நான் அவரிடம் பெறும் கடைசி உபதேசம் என்பதை அப்பொழுது உணரவில்லை. சிதம்பரத்திற்குச் சென்றேன். ஒரு வாரத்திற்குப் பின் மணி ஐயருடைய மரணச் செய்தி கிடைத்தது; திடுக்கிட்டேன். ஊக்கந்தரும் அவருடைய உபதேசங்களை மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டே இருக்கிறேன்.


அவருடைய பெருமையைத் தமிழ்நாட்டார் மறக்கவில்லை. அவர் பெயரால் ஒரு மண்டபம் (மணி ஐயர், ஹால்) திருவல்லிக்கேணியில் இருக்கிறது. அவருடைய கம்பீரமான உருவச்சிலை பழைய செனட் மண்டபத்தை அடுத்து விளங்குகின்றது. அவருடைய சரித்திரத்தைப் பலர் எழுதியிருக்கிறார்கள்.


இந்த நாட்டின் அறிவு நிலையும் பெருமையும் இத்தகையான வென்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால் சிலருடைய வாழ்க்கை வரலாறுகள் உதாரணமாக விளங்கும். அவற்றுள் மணி ஐயருடையதும் ஒன்றென்பதைக் கூசாமல் சொல்லலாம். செந்தமிழ் நாட்டின் பெருமை மணி ஐயர் பிறந்ததனால் ஓரளவு உயர்ந்ததென்பதில் சிறிதும் ஐயமே இல்லை.


--Geetha Sambasivam 20:59, 11 ஜனவரி 2012 (UTC)



பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 12 ஜனவரி 2012, 16:28 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,076 முறைகள் அணுகப்பட்டது.