"ஜெயகாந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடுமரபு விக்கி இருந்து
17:44, 4 ஜனவரி 2010 இல் நிலவும் திருத்தம்தனது நண்பர் ஜெயகாந்தனுடன் கூடிய தனது ஞாபகங்களை கட்டுரையாக தருகிறார் சீதம்மா.
சீதாம்மாவின் குறிப்பேடு - ஜெயகாந்தன்சீதாலட்சுமி - மின்னஞ்சல் முகவரி seethaalakshmi@gmail.com
பகுதி 121-12-2009
பள்ளிப்படிப்பு கூட முடிக்காதாவர். அச்சகத்தில் அச்சு கோர்க்கும் சாதாரண தொழிலாளி.
இவருக்குள் எப்படி இத்தனை சிந்தனைகள் கொட்டிக் கிடக்கின்றன!.வெளியில் சிதறிக் கிடப்பவை, சிந்தியவை இவர் பார்வைக்கு மட்டும் உயிரோட்டமாகத் தெரிகின்றதே!
மனிதர்களின் இதயங்களுக்குள் ஊடுருவிப் பார்க்கும் சக்தி எங்கிருந்து பெற்றார்!?
இவரைப்பற்றி எழுத என் மனம் கட்டளையிட்டுவிட்டது. என் அன்புக்குரிய நண்பர். 40 ஆண்டுகால நண்பர். குடும்ப நண்பர். எத்தனை சந்திப்புகள்! நாங்கள் கழித்த பொழுதுகள் அனைத்தும் அர்த்தமுள்ளவை.ஒருகாலத்தில் எனக்குள் ஒரு ஆசை இருந்தது.
ஜான்சனைப்பற்றி பாஸ்வெல் எழுதியது போல் ஜெயகாந்தனின் உரையாடல்களைத் தொகுத்து எழுத விரும்பினேன். கையிலே டேப் ரிகார்டர் சகிதமாகச் சுற்றியிருக்க வேண்டும். அப்படியிருந்தாலும் பதிவு செய்திருக்க முடியாது. சிறு அசைவும் கூட அவரிடமிருந்து திடீரென்று வெள்ளமென வரும் வார்த்தைகளின் ஓட்டம் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பொழுதே எழுதியிருந்தால் இந்த சமூகத்திற்கு ஓர் அரிய நூல் கிடைத்திருக்கும். இப்பொழுது என் நினைவுப் பெட்டகத்தில் தேடிப் பார்க்கும் வலுக் கூடக் குறைந்து விட்டது. இருப்பினும் தெரிவதையாவது பதிவு செய்ய வேண்டியது என் கடமையெனக் கருதுகின்றேன்.
என் நட்பு வட்டம் மிகப் பெரியது. நான் சந்தித்தவர்களில் உரையாடலில் மிகச் சிறந்தவர் ஜெயகாந்தன். HE IS ONE OF THE BEST CONVERSATIONALISTS IN MY LIFE. என்னைப் பற்றி நன்குணர்ந்த , எங்கள் குடும்ப நண்பர் பேராசிரியர் அரசு அவர்கள் கூறியது. ஜெயகாந்தன் ஒரு எழுத்தாளர். ஜெயகாந்தன் ஒரு பேச்சாளர்.
“இந்த இரண்டினைப் பற்றியும் நிறைய எழுதிவிட்டடர்கள். அவருடன் பேசும் பொழுது அவரிடம் கண்டவைகளை, உணர்ந்தவைகளை அவருடன் பழகியவர்கள் எழுத வேண்டும். சீதாம்மா, அவர் உங்களுக்கு நீண்ட கால நண்பர். நினைவில் இருப்பவைகளைப் பதிவு செய்யுங்கள். ஏற்கனவே நீங்கள் மீண்டும் எழுதத் தாமதித்துவிட்டீர்கள்.
தொடர்ந்து உங்களுடன் பழகிய பல அறிஞர்களைப் பற்றி எழுத வேண்டும். உங்கள் அனுபவங்களையும் பதிவு செய்யுங்கள் “ நான் எழுதும் நினைவலைகள் பிறந்த கதை இதுதான்!
சீதாம்மாவின் குறிப்பேட்டில் இனி என்னுடன் பழகிய பலரைப்பற்றி எழுத நினைத்துள்ளேன்.
வரிசையில் முதலில் வந்துவிட்டார் ஜெயகாந்தன்.
அபூர்வமான சூழலில் எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. நான் தான் அன்று நிறைய பேசினேன், எங்களிடையே நட்பு வளர்ந்ததற்குக் காரணங்கள் எங்கள் சமுதாயச் சிந்தனைகளும், பாரதியிடம் கொண்டிருந்த ஈடுபாடும் தான்.பல
அவரின் பார்வை குடிசைகளில் விழுந்தது. ஏழைகள் அவரின் உறவினர்கள். மற்றவர்கள் கண்களுக்குக் குறைவாகப் பட்டவைகள், ஏளனமாகக் கருதப் பட்டவைகளின் உள்ளுக்குள் போய்ப் பார்த்து உண்மைகளை சத்தம் போட்டுக் கூறியவர்.
அவர் எண்ணங்கள் எழுத்தில் வந்தன. நான் செயலில் இறங்கினேன். இந்த விஷயத்தில் நாங்கள் ஒரே பார்வை கொண்டிருந்தோம்.கண்ணுக்குத் தெரியும் சாதனை அவருடையது.அவர் எண்னங்கள் எழுத்துக்களில் வெளிப்பட்டன என்னுடைய பணி வாழ்க்கையில் துன்பப்படுபவர்களின் துயர் துடைப்பது மனங்களில் வரைந்த சித்திரம். உணர்வுகள்.
என்னுடைய பணியில் எனக்குக் கிடைத்த குடும்பங்கள் நிறைய இருக்கின்றன. இரத்த சம்பந்த உறவுகளைவிட இதய சம்பந்த உறவுகளிடம் எனக்கு ஒட்டுதல் அதிகம். என் சாதனைகள் என்று கூறவில்லை. இறைவன் கொடுத்த வரம் இது.கடந்த கால நிகழ்வுகளை மனம் அசை போடும் பொழுது ஓர் மகிழ்ச்சி.
எனக்கிருக்கும் வாழ்நாட்கள் குறைவு. இருக்கும் மணித்துளிகளை உங்களுடன் கழிக்க விரும்புகின்றேன். ஆம் இப்பொழுது நான் உங்களுடன் வாழ்கின்றேன்!
பகுதி 223-12-2009
ஜெயகாந்தன்பற்றி எழுதுகின்றேன் என்பதைப் பார்க்கவும் நிலா ரசிகனுக்கு ஒரே குஷி ! அடுத்து ஒரு நிகழ்ச்சியிலும் நிலா உடன் இருந்தான். ஒரு வருடத்திற்கு முன்னால் சென்னைக்கு வந்திருந்தேன். என்னால் தனியாக எங்கும் போக முடியாது. டாக்ஸியில் ஏறவும் இறங்கவும் கூட ஒருவர் என்னைப் பிடித்துக் கொள்ள வேண்டும். என்னுடன் இரு கவிஞர்கள் துணை வந்தனர். ஒருவர் நம் நிலா ரசிகன். இன்னொருவர் கவிஞர் சஹாராத் தென்றல். நிலா எனக்குச் செல்லப்பிள்ளை ; சஹாரா எனக்குச் செல்லப்பொண்ணு. என்னைக் கவனித்துக் கொள்வதில் இருவருக்கும் போட்டி எனக்கு அடுத்திருந்தது ஒருசாய்வு நாற்காலி. அதில் வந்து உட்கார்ந்தார் ஜெயகாந்தன். மற்றவர்கள் எதிரே அமர்ந்தனர். அவர் மனைவியார் வந்து நலம் விசாரித்துவிட்டுக் காபி எடுத்துவரச் சென்றார்கள். அவர் வீட்டிற்குச் செல்லும் பொழுது நானும் அவர் மனைவியும் சமயலறையருகில் உட்கார்ந்து பேசுவோம்; பின்னர்தான் ஜெயகாந்தன் இருக்கும் இடம் சென்று பேசுவேன். ஆனால் நாங்கள் சென்ற அன்று ஒரே அறையில் உட்கார்ந்து இருந்தோம். கவுசல்யா வந்து அமர்ந்தார். எங்கள் உரையாடல் அக்காலத்திற்குச் சென்றது. அவ்வளவுதான் அதற்குப் பிறகு அவர்தான் பேசினார். இரு கவிஞர்களிடம் எங்கள் சந்திப்புகள், நாங்கள் ஊர்கள் சுற்றியது எல்லாம் விளக்கமாக அவர் கூறிவந்தார். எங்கள் சந்திப்பு, எங்கள் சுற்றுலாவிற்குப் பின்னர் அவர் என்னென்ன கதைகள் எழுதினார் என்பதைக் கவுசல்யா விளக்கிவந்தார். சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்த உரையாடல் அவர் மகன் வரவும் மாறியது. என் முகக் கலக்கத்தைப் பார்த்து ஒரு சின்ன முறுவல். “பரவாயில்லை” என்று அந்த முறுவலில் புரிந்து கொண்டேன். திடீரென்று என்னை நோக்கி, “நாம் இருவரும் சேர்ந்து போய் கலைஞரைப் பார்க்கலாமா?” என்று கேட்டார். இப்பொழுது அவர் கேட்கக் கூடாத கேள்வி கேட்டு விட்டார். துடித்துப் போனேன்.
பகுதி 325-12-2009
கற்பனையில் காணும் காட்சிகள் சில விஷயங்களில் கற்பனையாகவே இருந்துவிடுதல் நலம்.என் இயலாமையைத் தெரிவித்துவிட்டு எழுந்து விட்டேன்.நிலாவின் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாகக் காரை நோக்கி நடந்தேன். ஜெயகாந்தனும் உடன் மெதுவாக வந்தார். இருவரும் ஒன்றும் பேசவில்லை. மவுனம் சக்தி வாய்ந்த மொழி; அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. “ஏன் இப்படி இங்கு வந்து உட்கார்ந்திருக்கின்றீர்கள்?” “அம்மா, அவர் திடீரென்று பேச ஆரம்பிப்பார். அவர் பேச்சைக் கேட்கத்தான் காத்திருக்கின்றோம்” அவர்கள் பைத்தியக்காரர்களா? ஆமாம், அறிவுப் பைத்தியம். ஜெயகாந்தனிடம் வெட்டி அரட்டையை எதிர்பார்க்க முடியுமா? இப்பொழுது அப்படிப்பட்ட காட்சிகள் கிடையாது. அவர் வீட்டின் மாடியில் கூரை வேய்ந்த இடம் இருக்கின்றது. அங்கே சந்திப்புகள் நடக்கின்றன; கலந்துரையாடல்களும் இங்கேதான்; ஆனால் அந்தக் காலத்து அதிரடிக் கச்சேரிகள் இப்பொழுது கிடையாது. (தொடரும்)
பகுதி 404-01-2010
அக்கினிப் பிரவேசம்
எத்தனைவிதமான மனிதர்கள்! எத்தனை சூழ்நிலைகள்! அலை அலையாய் வந்து போகும் மனிதனின் அவல உணர்வுகள். கங்காவின் பஸ் பயணத்தில் அவள் அனுபவிக்கும் உரசல்களும் இடிகளும் புதிதல்ல. ஆனால் ஒரு பெண்படும் அவஸ்தையை அப்படியே நம்மையும் உணர வைத்திருப்பார். அக்காட்சியைப் படிக்கும் பொழுது எனக்கே உடலில் பூரான் ஓடுவது போன்று ஓர் அறுவறுப்பான தாக்கம். வக்கிர குணத்திற்கு அப்பனும் உடன் பிறந்தானும் கூட விதிவிலக்கில்லை.
இப்படிக் கூறுவதற்காக என்னை மன்னிக்கவும்; இது பொதுவானதன்று. ஆனால் இது போன்ற பல புகார்கள் என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. நான் பார்த்த வேலை அத்தகையது.
கங்காவின் மாமாவின் செய்கைகளை வேறு யார் இப்படி எழுதியிருக்கமுடியும்? ஆனால் ஜானகிராமன் எழுதிய மோகமுள் நினைவிற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
மோக முள் - அடிமனத்தில் ஒளிந்திருக்கும் உணர்வைக் கொக்கி போட்டு வெளியே இழுத்து , அந்தத் தவிப்பை வெளிக்காட்டிய விதம் இன்றும் கதை உலகில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கின்றது. உளவியல் கதைகளுக்கு ஆயுள் அதிகம். படிப்பவனுக்கு அவஸ்தை கொடுத்தாலும் உண்மைகள் உறங்காமல் என்றாவது கண் விழிப்பதைப் பார்க்கும் பொழுது வியக்காமல் இருக்க முடியாது. அந்தரங்கத்தைச் சுண்டி இழுப்பவை. ஜெயகாந்தனின் கதைகள் எல்லாவற்றிலும் மனிதனின் அந்தரங்கத்தைத் தோலுரித்துக் காட்டுவதைப் பார்க்கலாம். அவர் அதில் சமரசம் செய்துகொள்ளமாட்டார்.
பெண்களுக்கு மத்தியில் ஒன்று பேசப்படுவதைக் கேட்டிருக்கின்றேன் -“சின்னப் பசங்களைக் கூட நம்பி வெளியில் போகலாம். ஆனால் கிழங்களை நம்ப முடியாது “ எல்லோரும் அப்படியல்ல; ஆனாலும் பெண் மனத்தில் அப்படி எண்ணம் வந்துவிட்டதற்கு அவள் சின்னப் பெண்ணாக இருக்கும் பொழுது வயதானவர்கள் யாராவது சில்மிஷம் செய்திருக்கலாம், அல்லது அவள் சிநேகிதிக்கு இத்தகைய அனுபவம் ஏற்பட்டிருக்கலாம், அது மனத்தில் தங்கி இப்படி ஒரு கருத்தை அவள் சுமந்து கொண்டிருக்கலாம்.
“சில நேரங்களில் சில மனிதர்கள்” தலைப்பே தனித்துவம் கொண்டது. இது திரைப்படமாக வந்தபொழுது , அதில் அத்தனை பாத்திரங்களும் உயிர் பெற்று நடமாடினர். குறிப்பாக லட்சுமி, கங்காவாகவே மாறிவிட்டார். பொதுவாகப் பிரபலமான கதைகள் திரைப்படமாகும் பொழுது ஒரு விமர்சனம் வரும். “கதை மாதிரி சினிமா இல்லே” ஆனால் இந்தப் படம் மட்டும் சிறப்பாக வந்திருந்தது.
கங்கா எங்கே போகின்றாள் இது பெற்ற சிறப்பைப் பெறவில்லை. ஆங்கிலத்திலும் இப்படித் தொடர் நிலையில் கதைகள் வரும்பொழுது மூன்றாவதில் தொய்வு காணலாம்.
கல்கியின் நினைவு இங்கே வருகின்றது. பார்த்திபன் கனவு எழுதினார். அதில் அவர் காட்டும் சிற்பக்கூடத்தில் பிறந்தது சிவகாமியின் சபதம். ஓவியக் கூடத்தில் பிறந்தது பொன்னியின் செல்வன். அவரே பொன்னியின் புதல்வர். நாட்டிய மங்கைக்கு உயிர் கொடுக்கவும், நரசிம்ம வர்மனை இளைஞனாக்கிக் காதலனாக்கவும் ஆசை வந்துவிட்டது. அதே போல் பார்த்திபன் வரைந்தஓவியங்களில் சோழர் காலத்துப் பெருமைகளைக் கண்டார். அவருக்குத் தெரிந்த செய்திகள் அனைத்தையும் யார் வாயிலாகவாவது பேச வைத்தார்.
எண்ணங்களைச் சுமக்கும் பொழுது எழுத்தாளன் பிரசவ வேதனையில் தவிப்பான். கோலைப் பிடித்துவிட்டால் வார்த்தைகள் குதித்தோடி வெள்ளமென வடிந்தோடும். மனித உணர்வுகளை அப்படியே ஓவியமாக்குவதில் சிறந்தவர் ஜெயகாந்தன். ஒரு கதை, இரு கதை என்று மற்றவர் எழுதியிருக்கலாம்ம். ஆனால் ஜெயகாந்தனின் கதைகளை அனைத்தும் உளவியலும், சிந்தனைத் திறனும் கலந்தவை. ஒரு மனிதரின் உணர்வுகளின் தாக்கமே ”ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்”.
அவர் எழுதிய பல கதைகள் பிறந்தவிதம் பற்றி என்னுடன் மனம் விட்டுப் பேசி இருக்கின்றார். எங்கள் இருவருக்கிடையில் ஒளிவு மறைவாக எந்த நிகழ்வும் கிடையாது. அந்தரங்கம் புனிதமானது. ஆனாலும் தகுந்த நண்பர்கள் இருந்தால் அந்த அறையைத் திறந்து காட்டுதல் சரியே.
கௌசல்யா ஒரு படித்த பெண்மணி. வானொலி நாடகங்களிலும் மேடை நாடகங்களும் நடித்துவந்தார். மிகச் சிறந்த நடிகை. சேஷாத்ரி குழுவில் இருந்தார். இவர் நடித்த தனிக்குடித்தனம் பின்னால் கே. ஆர். விஜயா நடித்த திரைப் படமாகியது. படம் வந்த காலத்தில் கௌசல்யாவைப் போல் விஜயா அந்த அளவு சிறப்பாக நடிக்கவில்லை என்பர்.
ஜெயகாந்தனிடம் செயலாளராகப் பணியில் சேர்ந்தார் கௌசல்யா. நடிப்பையும் விடவில்லை. இரு அறிவு ஜீவிகளின் சங்கமம். ஜெயகாந்தனின் துணைவியானார். அப்பொழுதும் சில நாட்கள் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அவரை அழைத்துச் செல்லும் ஜெயகாந்தன் சபாக்களின் வெளியிலேயே இறக்கிவிட்டு வந்து விடுவார். நாடகங்கள் பார்க்க மாட்டார். கௌசல்யா புத்திசாலிப் பெண்மணி. அவராகவே நடிப்பதை நிறுத்திவிட்டார். ஜெயகாந்தன் அவர் நடிப்பதைத் தடுக்கவில்லை.
சில உணர்வுகள் அவர் கதையில் காணலாம்.பிறருக்கு அறிவுரை கூறுவதை விரும்ப மாட்டார் ஜெயகாந்தன். அந்த சொல்லே அவருக்குப் பிடிக்காது. பிறர் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லையென்றால் அவர் பேச்சில் அவரின் மறுப்பு இருக்கும். ஒவ்வொரு விஷயத்திலும் அவரது அணுகு முறை மிகவும் வித்தியாசமாக இருக்கும். கேட்பவர் முதலில் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், சிந்தித்துப் பார்க்கும் பொழுது பின்னர் அதன் யதார்த்தம் புரிந்துவிடும். அவரிடம் போலித்தனம் கிடையாது. முரட்டுத்தனம் உண்டு. நுனிப்புல் மேய்வதைப் போன்று படிப்பவர்களுக்கு அவர் காட்டும் பல அரிய செய்திகள் புலப்படாது. ஒவ்வொரு வரியையும் வார்த்தையையும் ஆழ்ந்து பார்க்க வேண்டும்.சில சமயங்களில் மனித உணர்வுகளின் அரிச்சுவடி ஜெயகாந்தன். பல சமயங்களில் வாழ்வியலின், சமூக இயலின் அகராதி.
சில நிகழ்வுகளைக் கூறுவேன். அவரின் பார்வையையும் விளக்குவேன். புரிந்து கொள்வீர்கள். அதற்குமுன் இன்னும் கொஞ்சம் அவர் கதையைப் பற்றிப் பேச வேண்டியிருக்கின்றது.
ஒரு நாள் நானும் என் நண்பர் நிருபர் நாராயணனும் ஜெமினி கணேசனைப் பார்க்கச் சென்றிருந்தோம். அங்கே நம் ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது.
(அதுபற்றி அடுத்து வரும்) |