"வறுமைப் புலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
சி ("வறுமைப் புலி" காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite)))
 

05:49, 31 மார்ச் 2010 இல் கடைசித் திருத்தம்

--Dev 05:49, 31 மார்ச் 2010 (UTC)எழுதியவர்: டாக்டர் உ.வே.சாமிநாதய்யர்
தட்டச்சு செய்து அளித்தவர்: திரு வடிவேலு கன்னியப்பன்

_______________________________________________________________________________________________________


மதுரைப் பக்கத்திலுள்ள ஒரு சிற்றூரில் சங்கர சிந்தாமணிப் புலவரென்ற ஒரு கவிஞர் இருந்தார். எளிய நடையிற் செம்பாகமான கவிகளை இயற்றுவதில் அவர் வல்லவர். அவருடைய உள்ளம் கல்வியறிவி னால் உவப்புற்று நிறைவடைந்ததெனினும் அவர் இல்லம் வறுமைக்கு இருப்பிடமாக இருந்தது. தம் தாய் தந்தையர், மனைவி மக்கள், உற்றார் உறவினர் முதலியவர்கள் வறுமையால் மிக்க தளர்ச்சியை அடைந்து துன்பப்படுவதை அறிந்து அந்நிலையை அவர் மாற்ற நினத்தார்.

ஆனாலும்,பிறரிடத்துத் தம் வறிய நிலையை எடுத்துக்கூறி உதவி பெறுவதற்கு அவர்மனம் துணிய வில்லை. அவருடைய நிலையைக் குறிப்பினாலறிந்து உதவிபுரியும் பிரபுக்களும் அவ்வூரிலும் அயலி டங்களிலும் அக்காலத்தில் இல்லை.


எவ்வாறெனும் பசிப்பிணியைப் போக்கிக் கொள்ளத்தானே வேண்டும்? பிறர்பாற் சென்று கேட்பதற்கு அவர் நாணம் கொண்டாரெனினும், உறவினர் படும் பசித்துன்பத்தினைப் பார்க்கையில் உண்டான இரக்கம் அந்நாண வுணர்ச்சியை வென்றது. பிறருடைய நலத்தின் பொருட்டு எத்தகைய முயற்சியையும் செய்யும் நினைவு அவருக்கு உண்டு. அருமை யறியாதவர்களிடம் சென்று துன்புறுதலை அவர் விரும்ப வில்லை. எனவே தமிழ்ப் புலவர்களை உள்ளுவப்போடு பாராட்டி ஆதரிக்கும் உபகாரி யாரென்று விசாரித்து வந்தார்.


போடிநாயக்கனூரில் அக்காலத்தில் இருந்த ஜமீன்தார் தமிழ்பயிற்சியும் தமிழ்ப் புலவர்களை எப்போழுதும் உடனிருக்கச் செய்து அவர்களுடன் சல்லாபம் செய்யும் தன்மையும் உடையவரென்று அவர் கேள்வி யுற்றார். அன்றியும் புலவர்களை உயிர்நண்பர்களாகக் கருதி அளவ ளாவும் இயல்பு அந்த ஜமீன்தார்பால் மிக்கிருந்ததென்று அறிந்தார். அவர்பாற் சென்று தம் வறுமைப்பிணியைப் போக்கிக் கொள்ளலா மென்னும் எண்ணம் புலவருக்கு உண்டாகவே ஒருநாள் புறப்பட்டு அவர் போடிநயக்கனூர் சென்றார்.


அவர் சென்ற அக்காலத்தில் ஜமீன்தார் ஒருபிரார்த்தனையை நிறை வேற்றுவதற்காகப் பழனிக்குத் தம் பரிவாரங்களுடன் சென்றி ருந்தார்.புலவர் தாம் பேரார்வத்தோடு பார்க்கவந்தும் உடனே காணக் கிடையாமைக்கு வருந்தினார். ஜமீன்தாருடைய உயர் குணங்களைப் பின்னும் பலபேர் வாயிலாக அங்கே கேட்டின்புற்றார். அவ்வாறு கேட்க கேட்க அப்பிரபுவை விரைவிற் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு மிக்கது. ஜமீன்தார் பழனியிலிருந்து திரும்பிவரும் காலமாக இருந்தமையின் எதிர் சென்று காணலாம் என்று நினத்தார். அவ்வாறே சென்று, ஜமீன்தார் பரிவாரங்களுடன் திரும்புங் காலத்தில் இடைவழி யில் சந்தித்தார்.

புலவர்களோடு நட்புமுறையிற் பழகிவருபவரென்று ஜமீன்தாரைப் பற்றிக் கேள்வியுற்றிருந்தாராகலின், தம்முடைய வறுமைநிலையைச் சாதுரியமாகத் தெரிவிக்கவேண்டுமென்று நினைத்து, ஜமீன்தார்முன் ஓடிச்சென்று “கூ, கூ, புலிதுரத்தி வருகிறது” என்று கூவினார். அவருடைய செயலைக்கண்டு திடுக்கிட்ட ஜமீன்தார் “என்னையா பயமுறுத்துகிறீர்? நீர் யார்? புலி எங்கே இருக்கிறது?” என்று கேட்டார்.புலவர், ”ஐயோ! பாழும்புலி துரத்துகின்றது. அதைக் கொன்று என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று மீண்டும் ஓலமிட்டு விட்டு,

“பையா டரவணி சொக்கேசர் கூடற் பதியைவிட்டு
வையா புரிக்கு வரும்வழி யேவழி தான்மறித்து
மெய்யா வறுமைப் புலிதான் மிகவும் வெருட்டுகின்ற
தையாதென் போடை யதிபா புலவர்க் கருணிதியே”

என்ற பாடலைக் கூறினார். ஜமீன்தார் தமது சாதுர்யத்திற்குத் தக்க பரிசும் உபசாரமும் அளிப்பாரென்று புலவர் நம்பினார்.

ஜமீன்தார் ஒருகணப்பொழுது பேசாமல் இருந்தார்; பின்பு அருகில் இருந்த ஒரு வேலையாளை அழைத்து அதிகாரத் தொனியில், “இந்த மனுஷரை அழைத்துச் சென்று பந்தோபஸ்தில் வைத்திருந்து நாம் ஊர் வந்து சொல்லியனுப்பும்போது நம்மிடம் அழைத்து வா ” என்று கட்டளையிட்டார். புலவர் அவ்வாறே அழைத்துச் செல்லப்பட்டார். அவருடைய மனநிலை அப்பொழுது எவ்வாறிருக்கும்!


ஐயோ! வஞ்சகர்கள் இந்த ஜமீன்தாரைப் பற்றி இல்லாத குணங்களை யெல்லாம் ஏற்றிக்கூறி நம்மை ஏமாற்றிவிட்டார்களே! இவர் நமது செய்யுளைக்கேட்டுச் சந்தோஷிக்கக் கூடுமன்றல்லவோ சொன்னோம். கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போலவன்றோ ஆயிற்று! இவர் சிறந்த அறிவாளியென்றும் குறிப்ப றிந்து கொடுப்பவரென்றும் நம்மிடத்திற் சிலர் சொன்னார்களே. அந்த இயல்பு இவரிடத்திற் சிறிதும் காணப்படவில்லையே. நம்முடைய செய்யுளைக் கவனிக்கவில்லையே. முகமலர்ச்சியையும் காணோம்; இன்சொல்லையும் காணோம். முன்பின் தெரியாமல் இவரிடம் வந்து அகப்பட்டுக் கொண்டோமே. நம்முடைய வறுமைக்குப் பயந்து இவரிடம் வந்தது தேளுக்குப் பயந்து பாம்பின் வளையிற்கையிட்டது போலாயிற்றே! நமக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் நம் தாய் தந்தையர் முதலியவர்களென்ன செய் வார்களோ தெரியவில்லை. கடவுளுடைய சித்தம் எப்படியோ என்று நினைத்து  ஏங்கினார்.


அவரை அழைத்துச் சென்றவர் அவரைத்தனியாக ஓரிடத்தில் இருக் கச்செய்து சரியான வேளைகளில் உணவு அளித்து வந்தார். ஒருவரும் அவரோடு பேசவில்லை. அவர் தூக்குத் தண்டனையை எதிர்பார்த்து நிற்கும் குற்றவாளியைப் போல் உயிர், உடம்பு, உள்ளம் எல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தார்.

ஜமீன்தார் தம் அரண்மனை வந்து சேர்ந்தார். கவனிக்க வேண்டிய காரியங்களைக் கவனித்துவிட்டு ஆஸ்தான மண்டபத்தில் வந்து அமர்ந்தார். பின்பு புலவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார். சிறிது நேரத்தில் வாடிய முகமும், நடுங்கிய உடம்பும் கந்தைத்துணியும் கொண்ட வறுமைத் திருக்கோலத்தோடு புலவர் ஜமீன்தார் முன்னே நிறுத்தப்பட்டார். அவர்தம் கண்களால் ஒருமுறை அந்த ஆஸ்தான மண்ட பத்தினைப் பார்த்தார். ஜமீன்தாரின் இருபக்கத்திலும் கத்தி, தடி, துப்பாக்கி முதலிய ஆயுதங்க ளையுடைய சேவர்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். யாவரும் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றனர். ஜமீன்தாரோ மீசையை முறுக்கிக் கொண்டிருந்தார். அவருடைய முகத்திற் கோபக்குறிப்புத் தாண்டவ மாடியது. இவற்றையெல்லாம் பார்த்த புலவருக்குச் சிறிதளவு இருந்த தைரியமும் போய்விட்டது. உடம்பெல்லாம் அச்சத்தால் வேர்த்து விட்டது.

ஜமீன்தார் ஒரு கனைப்புக் கனைத்தார்.அருகிலிருந்த உத்தியோ கஸ்தரைப் பார்த்து, “நாம் பழனிக்குப் போய்விட்டு வருகையில் நமக்கும், பிறருக்கும் பயமுண்டாகும்படி வழிமறித்துக் கூ கூ வென்று சத்தம் சத்தம் போட்ட மனுஷ்யர் இவரல்லவா?”என்றார். இவர் “ஆம்” என்றார். “ஓய்! நீர் அப்படிச் செய்யலாமா? ”என்று புலவரை நோக்கி ஜமீன்தார் கேட்கவே புலவருக்கு நாஎழவில்லை. தம்முடைய கருத்தைச் சொல்ல ஆரம்பிக்கையில் வார்த்தைகள் குழறி வந்தன. கடைசியில் ஒருவாறு துணிந்து குழறிக் கொண்டே, “நீங்கள் வேட்டையாடித் துஷ்ட மிருகங்களைக் கொன்று ஜனங்களைக் காப்பாற்றும் மகாவீரராதலின் இந்தப் புலியையும் கொல்லவேண்டுமென்று விண்ணப்பித்துக் கொண்டேன். வறுமையைப் புலியாக உருவகப்படுத்தித் தமிழருமை யறிந்த துரையவர்கள் சந்தோஷிக்கச் சமற்காரமாகச் சொன்னேனே யொழிய யாவருக்கும் அச்சமுண்டாக்க வேண்டுமென்பது என்கருத் தன்று. இவ்வாறு உருவகம் செய்து கூறுதல் முன்னோருடைய வழக்கம். அப்படி ஏதாவது நான் செய்தது பிழையாகத் தோன்றினால் அதனைப் பொறுத்தருள வேண்டும்” என்றார்.


ஜமீன்தார், “செய்ததைச் செய்துவிட்டுப் பொறுத்தருள வேண்டுமென்றால் முடியுமா? திடீரென்று புலி துரத்துகிறதென்றால் எல்லாரும் என்ன நினைப்பார்கள்? உமக்குச் சிறிதேனும் சமய சந்தர்ப்பம் தெரியவிலையே. நமது சமூகத்தில் இன்னபடி பேசவேண்டுமென்பது தெரியாதா?” என்று கடுமையான குரலில் கூறிவிட்டு அருகில் நின்ற ஒருவரிடம், “இந்த மனுஷருடைய மேல் துணியைப்பிடுங்கி என்னெதிரே வை” என்றார். அவர், பல தையல்களோடும் முடிப்புகளோடும், அழுக்கோடும் புலவரது வறுமைநிலையை புலப்படுத்திக் கொண்டிருந்த அந்தத் துணியை வாங்கிச்சுருட்டி எதிரே இருந்த ஒரு மேஜையின்மேல் வைத்தார். ஜமீன்தார் மருந்திட்டு வைத்திருந்த துப்பாக்கியொன்றைக் கையிலெ டுத்துக் கொண்டார். “அந்த மனுஷரை இப்படி நேரே கொண்டுவந்து நிறுத்துங்கள்” என்றார். புலவர் தமக்கு இனி ஆயுள் முடிந்துவிட்ட தென்றே நிச்சயித்துக் கொண்டார். இந்த வறுமையினால் துன்புறுவதைக் காட்டிலும் இறந்துபோவது ஒரு வகையில் நல்லதென்று எண்ணினார், தமது முதிய தாய் தந்தையர் களையும், இளைய மனைவி மக்களையும் பிற உறவினர்களையும் நினைத்துக் கண்ணீர் வடித்தார்.


துப்பாக்கியுடன் இருந்த ஜமீன்தார், “ஓய்! உம்மைப் புலியா துரத்துகிறது? அந்தப் புலியை இதோ சுட்டுக் கொன்றுவிடுகிறேன் பாரும்” என்று சொல்லிக்கொண்டே, தம் எதிரில் இருந்த கந்தைத்துணியை நோக்கிச் சுட்டார். படீரென்று சத்தம் கேட்டது; அந்தக் கந்தைத் துணியில் குண்டு பாய்ந்து அதை எரித்து விட்டது; உடனே புலவர் ஒன்றும் தோன்றாமல் சிறிது நேரம் மயக்கத்தில் ஆழ்ந்தார்.

ஜமீன்தார் புலவர் அருகிற்சென்று அவர் முதுகைத்தட்டிக் கொடுத்து, “இதோ உம்மைத் துரத்திய புலி இறந்துவிட்டது. இனி அந்தப் புலி உம்மைத் துரத்தாது” என்று சொல்லி ஒரு ஆசனத்தில் இருக்கச்செய்து நல்ல ஆடைகளை வருவித்து அணிந்துகொள்ளச் செய்தார். பின்பு அவருள்ளம் பூரிக்கும்படி உயர்ந்த உபசாரங்களையெல்லாம் செய்தார்.


வறுமைப்புலியின் அச்சம் நீங்கிய புலவர் சிலகாலம் அங்கேயிருந்து புதிய புதிய செய்யுட்களைப் பாடி ஜமீந்தாரை உவப்பித்தும் பலவகை உபசாரங்களைப் பெற்று உவந்தும் வந்தார். பின்னர் தம் ஊரிலுள்ள உறவினர்கள் தம் நிலையறியாமல் வருந்துவார்களென்பதைக் கூறி ஜமீன்தாரிடம் விடைபெற்றுப் பலமாதங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களும், தக்க ஸம்மானங்களும் வழங்கப் பெற்றுத் தம்மூர் வந்து சேர்ந்து கவலையின்றி வாழ்ந்து வருவாராயினார். அக்காலத்துக்குப் பின்பும் அடிக்கடி ஜமீன்தாரிடம் சென்று அளவளாவி இருந்துவிட்டு வருதல் அவரது வழக்கமாக இருந்தது.  இந்நிகழ்ச்சியை அறிந்தவர்கள் அந்தப் பிரபுவினது பெருந்தன்மையை மிகப் பாராட்டினார்கள்.


இந்த சரிதத்தையும் பாடலையும் சொன்னவர் ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குமுன் ஊற்றுமலை ஹிருதாலய மருதப்ப தேவருடைய ஆஸ்தான வித்வான் நால்வருள் ஒருவராகிய புளியங்குடி முத்துப் புலவர் என்பவர்.



பங்களிப்பாளர்கள்

Dev

"https://marabuwiki.org/index.php?title=வறுமைப்_புலி&oldid=2022" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 31 மார்ச் 2010, 05:49 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,198 முறைகள் அணுகப்பட்டது.