"மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்:025" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடுமரபு விக்கி இருந்து
14:09, 11 ஆகஸ்ட் 2012 இல் கடைசித் திருத்தம்நாம் தள்ளப்பட்டுள்ள எந்த நிலையிலும், வேறு வழி இல்லாது சுற்றிக் காணும் நாம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள எந்தச் சூழலிலும் வாழ, பின் அதை ரசிக்க, விரும்பக் கற்றுக் கொண்டுவிடுகிறோம் என்று தோன்றுகிறது. ஒரு பழமொழி உண்டு. ”பாம்பு திங்கிற ஊரிலே நடுக்கண்டம் எனக்கு” என்று. அது நிர்பந்தம். என்ன செய்வது? வாழவேண்டுமே. சின்ன வயசில், உலகப் போர் முடிந்த இரண்டு மூன்று வருடங்கள் வாழ்க்கை மிகச் சிரமப் படுத்துவதாய் இருந்தது. முதன் முதலாக கோதுமையும், பன்னும், மக்காச் சோளமும் தின்று வாழக் கற்றுக் கொண்டோம். இதையெல்லாம் விடப் பரிதாபம், ஏழை மக்கள் புளியங்கொட்டையை வேகவைத்துச் சாப்பிடுவதாகவும் செய்திகள் வந்தன. இவையும் நிர்ப்பந்தங்கள் தான். நிலைமை மாற, முன்னர் கம்பும் கேழ்வரகும் சோளமும் சாப்பிட்டு வந்தவர்கள் இப்போது அரிசிக்குத் தாவி விட்டார்கள். இது வசதிப் பெருக்கத்தால் விளையும் மாற்றம். உணவுப் பழக்க மாற்றத்தால் சமூகத்தில் மேல்தட்டிற்குச் சென்று விட்டதான பிரமைகள். இப்போது கேழ்வரகும் மக்காச் சோளமும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பொருள்களாகிவிட்டன. கார்களில் வருபவர்கள் வாங்கிச் செல்கிறார்கள். சிறு வயதில் நிலக்கோட்டையைச் சுற்றி இருந்த வானம் பார்த்த பூமியில் கண்ட சோளக் கொல்லைகளை இப்போது பார்ப்பதற்கில்லை. 200 அடி 300 அடி ஆழத்துக்கு மோட்டார் போட்டு நீர் இறைத்து நெல் அல்லது கரும்பு பயிரிடுகிறார்கள். இன்னமும் அது வானம் பார்த்த பூமி தான். ஆகையால் நிலத்தடி நீர் இனி எவ்வளவு நாளைக்குத் தாங்குமோ தெரியாது. முப்பாட்டன் வழி வந்த சொத்து பேராண்டியால் ஊதாரித்தனமாகவே செலவிடப்படும்.
ஆரம்ப காலத்திலிருந்து பார்த்து வந்தவர்களுக்கு சினிமா. நம் மண்ணுக்கு வருவதற்குச் சற்று முன்னர் வரை நாடகங்கள் தான் மகிழ்வூட்டும் சாதனமாக இருந்தது. அதிலும் இசையே மேலோங்கியிருந்தது. பாடத் தெரிந்தவர் சூப்பர் ஸ்டார் ஆனார். நிறையப் பாட்டுக்கள். பாடினால், புராணக் கதைகள். சொன்னால் போதும். மக்கள் ரசித்தனர். தாமும் திரும்பத் திரும்பக் கேட்க விரும்பினர். இன்று போல் அன்றும் ஹோட்டல்களில், சாயாக்கடைகளில், தெருவில், அந்தப் பாட்டுக்கள் கேட்டன. பின்னர் பாட்டுக்கள் குறைந்தன. சமூகக் கதைகள், வரலாற்றுக் கதைகள் இடம்பிடிக்கத் தொடங்கின. வசனம் மக்கள் ரசனையை ஈர்க்கத் தொடங்கியது. இளங்கோவன் வசனம் என்றாலே அதற்குப் பெருமதிப்பு இருந்தது. ஆனால் சினிமா தான் மகிழ்வூட்டும் நாடகமாகவே இருந்தது. திரையில் ஓடிய நாடகம். ஒரே வித்தியாசம், “ஒன்ஸ் மோர்” என்று திரையைக் கேட்க முடியாது. வேறு எந்த வித்தியாசமும் இல்லை.
சினிமா என்ற புதிய சமாசாரம் கைவரவில்லை. அதைப் பற்றிய நினைப்பில்லை. முன்னாலேயே மார்க்கெட்டைக் கைப்பற்றியிருந்த நாடகத்திலிருந்து கதையை எடுத்துக்கொண்டார்கள். பாட்டுக்களை எடுத்துக்கொண்டார்கள். பாடியவர்களை நடிகர் நடிகைகளாக எடுத்துக்கொண்டார்கள். காமிரா இருந்தது புகைப்படம் எடுத்தார்கள். செலவு செய்யப் பணம் இருந்தவர்கள் முதலீடு செய்ய சினிமா தயாரித்தார்கள். இன்னொரு வியாபாரம். சினிமா தொழில் என்றே அன்று அறியப்பட்டது. பேசப்பட்டது. திராவிடக் கழகம் சினிமாவில் நுழைந்த பிறகே சினிமா அன்று வரை தொழிலாக இருந்ததைக் கலை என்றார்கள். நடிப்பு என்ற தொழில் செய்தவர்கள் கலைஞர்கள் ஆனார்கள். எப்படி யாரும் சிந்தனைச் சிற்பிகள், பேரறிஞர்கள், கலைஞர்கள். ஆனார்களோ அப்படியே சினிமாவும் கலை ஆயிற்று. ஆறுபக்கம் வசனம் மூச்சிறைக்காமல் பேசினாலும் அது சினிமாவாயிற்று.
இதில் யாரும் ஒருவரை மாத்திரம் சொல்லிப் பயனில்லை. இது ஒரு வியாபாரக் கேலிக் கூத்தாட்டம் ஆயிற்று. பணபலம், அரசியல் பலம் மக்களிடையே பிராபல்யம் என ஒன்றை ஒன்று பிறப்பித்து அசுர வடிவம் பெற்றது. அரசியலும் பிரசார வசன மழையும் பிராபல்யம் பெறும் காலம் மற்றவற்றைப் போல ஒரு கட்டம் வரையில் தான். சின்னச் சின்ன வசனங்கள், அதன் ஆங்கில மொழிபெயர்ப்போடு, “நான் என்ன சொல்றேன்னா, வாட் ஐயாம் டெல்லிங் யு இஸ் என்று சேர்த்துச் சேர்த்து வசனம் பேசுவது கலைஞராக மெத்தப் படித்த மேதைக்கு அழகாகக் கருதப்பட்டது. ஏனென்றால் அவர் படித்தவர். உலக சினிமாவெல்லாம் பார்க்கிறவர். அல்லது பார்க்கிறவர் ஒருத்தர் அவருடைய நண்பர் அவருக்குச் சொல்வார். என்ன கதை எந்த சீன் நல்லா வந்திருக்கு என்று. நம் மேதையும் புதுமைகளைப் புகுத்துவார். உடனே அவரும் ஒரு சிகரமானார். கண்றாவி என்னவென்றால் அவரும் மற்றவர்களைப் போல சினிமாவோடு எந்த உறவும் அற்றவர் தான். அது நாடகம். அதிலும் அபத்தமான நாடகம். என்னிக்கய்யா நீ நாடகத்தைத் திரையில் காட்டறதை நிறுத்தி சினிமா எடுக்கப் போறே என்று கேட்டுவிட்டார் ஒருத்தர். நம்மூர் சிகரத்தையெல்லாம் இப்படி கேட்கலாமா? உடனே ஒரு படை விரைந்தது பத்திரிகை அலுவலகத்துக்கு. கேள்வி கேட்ட மனிதர் வாய் மூடப்பட்டது.
ஆனால் அரசியலிலிருந்தும் மேடைச் சொற்பொழிவிலிருந்தும் மெதுவாக விடுதலை கிடைத்தது. அவரிடமிருந்தும் விடுதலை கிடைத்தது தான். அது தொலைக் காட்சிப் பெட்டியில் ஹாலிவுட் சினிமாவின் சண்டைப் படங்களும் தந்திரக் காட்சிகளும் பார்த்து அதுவே நமக்கு சினிமாவாகியது. ஹிந்தி சினிமாவிலிருந்து ஐடம் டான்ஸ், நினைத்த இடத்தில் 40 பேர் ஆடுவது எல்லாம் வந்து சேர்ந்தது. நடிகர் என்றால் அவருக்கு டான்ஸ் ஆடத்தெரியவேண்டும் என்ற நியதி வந்தது. முன்னால் பாடத் தெரிந்தால் தான் சினிமாவில் சான்ஸ் என்பது போல. அதோடு அவர் ஜிம்முக்குப் போய் உடம்பை சிக்ஸ் பாக் உடம்பாக்கிக் கொள்ள வேண்டும். அது சல்மானுக்கும் ஷாருக்குக்கும் அமீருக்கும் தான் சாத்தியம் என்றாகவே நம்மூர்த் தொப்பைகளுக்கு அது சரி வரவில்லை. இருப்பினும் டான்ஸ் மாஸ்டர் எப்படி அத்தியாவசியமானாரோ அப்படி ஸ்டண்ட் மாஸ்டரும் அத்தியாவசியத் தேவையானார். டான்ஸ் கிட்டத்தட்ட ட்ரில் மாதிரி ஆயிற்று. ஐடம் கேர்லுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த குத்துப் பாட்டு எல்லாரிடமும் எதிர்பார்க்கப் பட்டது.
தனுஷ் கூட பத்து குண்டர்களை ஒரு குத்து விட்டால் ஆகாயத்தில் மிக அழகாகச் சுருண்டு விழச் செய்தார் கார் சேசிங் இல்லாது சண்டைக் காட்சிகள் இல்லாது, டான்ஸ் பண்ண வெளிநாடு போகாது ஒரு சினிமா இருக்கக் கூடும், என்று மணிரத்னம் கூடக் கற்பனை செய்ய முடியாது என்ற பைத்தியக்கார நிலைக்கு தமிழ் சினிமா தள்ளப்பட்டு விட்டது. ஒரு பாக்கியராஜ் ஒரு நடிகைக்குச் சேலையை உடுத்தி, நடிகருக்கு வேட்டியைக் கொடுத்துக் கட்டச் சொன்னால் உடனே கிராமத்துக் கதைகள் பெருகும். இப்போது அனேகமாக எல்லாப் படங்களும் மதுரைக்கும் உசிலம்பட்டிக்கும் வாடிப்பட்டிக்கும் போவதைப் போல. பேச்சும் மதுரைப் பேச்சென அடையாளப் படுத்தப் படுகிறது. மதுரைப் பேச்சனாலும் உசிலம்பட்டியானாலும் விருதுநகரானாலும் அதில் சண்டைக்காட்சியும் டான்ஸும் கட்டாயம் மசாலா சேர்த்தாகணும்.
இந்த சினிமா தான் தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் அரசியல் தலைவர்கள் பாராட்டு விழாக்களிலும் பூதாகாரமாகக் கவிகின்றது. இந்த சினிமா தான் நம் வாழ்க்கையும், கற்பனையும் சிந்தனையும், ஆயிற்றே ஒழிய, உண்மையான ரத்தமும் சதையுமான உயிர்ப்புள்ள தமிழ் வாழ்க்கை, தமிழ் மனிதர்கள், தமிழனின் அன்றாட நடப்பு எங்காவது தமிழ் சினிமாவுக்கான பொருளாயிருக்கிறதா என்றால் இல்லை.. இந்த 70-80 வருட தமிழ் சினிமா வரலாறு ஒரு குப்பை மேடாகத் தான் குவிந்து கிடக்கிறது. தமிழ் சினிமாவுக்கான பொருள் இல்லையென்றால், தமிழ் சினிமா, அதன் அர்த்தத்தில் சினிமா என்ற ஊடகத்தைக் கலைச் சாதனத்தை அறிந்திருப்பது பிறகு தான்.
இது நமக்குப் பழக்கமாகிவிட்டது. வேறு எதையும் நம்மால் சிந்தித்துக் கூடப் பார்க்க முடிவதில்லை. இந்தப் பிதற்றலும் அபத்தமும் தான் நாள் தோறும், 24 மணி நேரமும் நம்மைத் தாக்கிக்கொண்டே இருக்கின்றன. நாம் இதிலிருந்து பிரிந்திருக்கும் கணங்கள் ஏதும் உண்டா தெரியவில்லை. அரசியல் மேடையாகட்டும், 24 மணி நேர தொலைக்காட்சியாகட்டும், பத்திரிகைகளாகட்டும், வேட்டி, சேலை, மசாலாப் பொடி, புதிதாக ஒரு ஷோ ரூம், கடை திறப்பு, எல்.ஐ.சி விளம்பரம், என எந்தக் கண்றாவியானாலும் அதில் ஒரு சினிமா பிரதிநிதி, ஒரு க்ரூப் டான்ஸ் இல்லாமல் விளம்பரம் கூட வருவது சாத்தியமில்லாமல் போய்விட்டது.
தமிழினத் தலைவர் கூட தன் கால பராசக்தி சமாசாரங்கள் காலம் கழிந்து இப்போது புதிய சமாசாரங்கள் சினிமாவில் புகுந்துவிட்டது தெரியாது, 1950 கால சினிமாவை விட்டு வர முடியாமல் தவிக்கிறார் என்றால், அவர் கலைப்படைப்பு ஒவ்வொன்றையும் என்ன பலவந்தமாகத் திணித்தாலும் ஒரு வாரம் கூட திரையில் தங்குவதில்லை பெட்டிக்குள் போய் அடைந்து கொள்கிறது. “திரைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம் புதுத் திரைப்படம்” என ஒரு தனி ஸ்டைலில் தமிழ் பேசிச் சத்தமிட்டு விளம்பரம் செய்யும் அவர் குடும்பத் தொலைக்காட்சி கூடத் தொடுவதில்லை. ஆக, தமிழினத் தலைவர் சிந்தனையே கூட 1952 பராசக்தி காலத்தை விட்டு நகர மறுக்கிறது என்றால், குத்தாட்டமும், கார் துரத்தலும், ஆகாயத்தில் சுருண்டு விழும் ஸ்டண்ட் காட்சிகளும் பார்த்துப் பார்த்து வாய் பிளக்கும் மக்கள் என்ன சுலபத்திலா மாறுவார்கள். அடிக்கடி மாறும் மசாலாக்கள். புதிது புதிதாக அவர்களுக்கு மசாலாக்கள் வேண்டியிருக்கிறது. ஆனால் தேவை மசாலாக்கள் தான். சினிமா அல்ல.
இங்கு தான் இவ்வளவு காலமாக இந்தப் பேத்தல்களை எவ்வளவு தான் எழுதிவந்த பிறகும் ஒரு அன்பர் கேட்கிறார், ஆமாய்யா, பின்னே வாழ்க்கை என்றால் அடுத்த வீட்டுக்குப் போய் அங்கு என்ன நடக்கிறது என்றா பார்க்க முடியும்? என்று கேட்டார்.
-வெங்கட் சாமிநாதன் --Ksubashini 09:29, 30 டிசம்பர் 2011 (UTC) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||