மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்:037மரபு விக்கி இருந்து(மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் - 37 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரொம்ப நாளாக எழுதிவந்து விட்டேன். வெகு சாதாரண, எவருடைய பொதுப் புத்திக்குப் புலப்படும் விஷயங்களைத் தான் தேவைக்கு அதிகமாகவே பன்னிப் பன்னி பொதுப்புத்தி உள்ளவர்கள் பொறுமையையே வெகுவாக சோதிக்கும் அளவுக்கு எழுதி வந்திருக்கிறேன் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் மிகுந்த வேதனைக்குரிய விஷயம், இவ்வளவு தூரம் திரும்பத் திரும்ப, நான் சொல்லாமலேயே அவரவர்க்கே புரிந்திருக்க வேண்டிய விஷயங்களைச் சொன்ன பிறகும், இந்த நீண்ட விளக்கங்களால் கொஞ்சம் கூட பாதிப்படையாது, தாம் இருக்கும் பாதுகாப்பான எழுபது வருங்களாக அவரவர் மூளைச் சலவை செய்யப்பட்ட கூண்டுக்குள்ளிருந்து வெளியே எட்டிப் பார்க்க மனமில்லாது இருக்கும் நிலையே நீடிக்கட்டும் அதுவே சுகம் என்றிருப்பது தான். இது மூளைச் சலவையின் பயங்கர வெற்றி எனறு தான் சொல்ல வேண்டும். மூளைச் சலவைக் குள்ளானவர்களுக்கு அவர்கள் மூளை சலவை செய்யுப் பட்டிருப்பது பற்றி பிரக்ஞையே இருக்காது.
நான் சொல்லி வந்த விஷயங்கள் ஏதும் சுலபத்தில் புரியாத அரிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளோ, ஆழ்ந்த தத்துவங்களோ அல்ல. ஏதும் தமிழ் வாழ்க்கைக்கு அந்நியமான வேற்றுலக வாழ்க்கை பற்றியன அல்ல. நான் தமிழ் அல்லாது ஏதும் வேற்று மொழியில் பேசவில்லை. அப்படி இருந்தும் நான் சொல்லும் பொதுப்புத்திக்கு ஏலும் விஷயங்களையே கூட கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கும் மன நிலையில் நம்மில் பெரும்பாலோர் இல்லை. தலையில் சட்டியைக் கவிழ்ந்துக்கொண்டு தெருவில் நடக்கிறவனை, ஏன் இந்த பைத்தியக்காரத்தனம் என்று தான் கேட்கிறேன். அவ்வளவே. ஆனால் இது நம்மவர்ககு ஏற்பதில்லை. ஏன்? இது எப்படி நிகழ்கிறது?, ஏன் நிகழ்ந்து விடுகிறது? என்பது எனக்கு புரிவதும் இல்லை. வருத்தம் தருவதாகவும் இருக்கிறது.
ஒரு காட்சி. முத்துக்கு முத்தாக என்பது படத்தின் பெயர். நான் படம் பார்க்க வில்லை. டாப் டென் மூவீஸ் என்று சன் தொலைக்காட்சியில் வரும் அரை மணி நேர நிகழ்ச்சியில் (மன்னிக்கவும். அரை மணி நேரம் இல்லை. மொத்தம் பதினெட்டு நிமிடமே இருக்கும். பன்னிரண்டு நிமிடம் விளம்பரத்துக்குப் போய் விடும்) அந்த டாப் டென் நிகழ்ச்சி தான் நான் பெரும்பாலான தமிழ்ப் படங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது. படம் முழுதும் பார்க்கும் சுரனையற்ற தடித் தோல் எனக்கு இல்லை. நேரமும் இல்லை. வாழ்க்கையின் கடைசி மணிகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த டாப் டென் நிகழ்ச்சியே எனக்கு அந்த தமிழ்ப் படத்தின் குணத்தை எனக்குச் சொல்லி விடுகிறது. பானைச் சோத்துக்கு ஒரு சோறு பதம் விவகாரம் தான். பானை அடிபிடித்து அடிச்சோறு காந்தியிருந்தால் அந்தக் காந்தலை எட்ட இருந்தே நுகர்ந்து விடுவோம். ஆகவே மறைந்திருக்கும், வெளிப்பார்வைக்குப் தெரிய இயலாத குணமும் கூட தன்னை வெளிக்காட்டிக்கொண்டு விடும்.
முத்துக்கு முத்தாக என்று ஒரு படம். அதில் ஒரு காட்சி. ஒரு எளிய வீட்டுத் திண்ணையில் தாயும் தந்தையும். மகன் கொஞ்ச நாள் விடுப்பில் வந்தவன் திரும்ப வேலையில் சேர வீட்டை விட்டுக் கிளம்பிக்கொண்டிருக்கிறான். தாய் சரண்யா கால் மடித்து உட்கார்ந்திருப்பார். அப்பா இளவரசு உள்ளிருந்து வந்து அவரும் சேர்ந்துகொள்வார். “எல்லாம் ஒழுங்கா பாத்து எடுத்து வச்சுக்கிட்டயாப்பா, ஒண்ணும் மறந்திடலையே” என்பது போன்ற வழக்கமான கேள்விகள். சரண்யா, இளவரசு இரண்டு பேருமே நான் சமீபத்தில் இப்போது பார்க்கும் படத் துணுக்குகளில் இயல்பாக, இயலபான பேச்சுக்களோடு நிறுத்திக்கொண்டு, அதிகம் அலட்டாது நடிப்பதைப் பார்க்கிறேன்.
இது தமிழ் வழக்கத்துக்கு, தமிழ் நடிப்பு என்னும் மரபுக்கு முற்றிலும் விரோதமானது. தமிழ் ரசிகர்களுக்கு, தமிழ் பத்திரிகை விமர்சகர்களுக்கு சிவாஜி கணேசனும், எஸ். வி. சுப்பையாவும் நாகய்யாவும் போல, அனேகமாக எல்லாரையும் தான் சொல்ல வேண்டும். நடிப்பு என்றால் அதிகம் கண்களை உருட்டி கண்ணீர் வடித்து நீண்ட உருக்கமான கடமுட வசனம் பேசி, இந்தக் …. கண்றாவியெல்லாம் செய்தாக வேண்டும். இதில் நம்ம மன்ணைச் சேர்ந்த சிவாஜி கணேசன் என்னும் மக்கள் திலகம் அபத்தத்தின் ஆபாசக்த்தின் உச்சத்தைத் தொட்ட சிகரம். மற்றவர்கள் எல்லாம் சின்ன சின்ன சிகரங்கள். அல்லது மேடுகள். ஆனால் மக்கள் திலகம் என்னும் உச்சம் நமெக்கெல்லாம் குன்றிலிட்ட தீபமாக, வழிகாட்டும் தாரகையாயிற்று. இந்தப் பெருமையும் –பிரதாபங்களும் அதிகமாகவே நடிகர் திலகத்தின் தலைக்கேற அவர் வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடையே கூட சகஜமாகப் பேசுவதில்லை என்றும் நடிகர் திலகமாகவே நடமாடுவார் என்றும், அநாவசியமாக, அதீதமாக கைகால்களை அசைத்து, கண்களை உருட்டி, சாதாரண அன்றாட வார்த்தைகளுக்குக் கூட குரல் ஏற்ற இறக்கங்கள் கொடுத்து ஒரு கட்டபொம்மன், அல்லது கர்ணண் வேடம் தாங்கிய நாடகமாடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சாதாரண விழுப்புரம் கணேசனாக இருப்பது என்ன என்பதே அவருக்கு மறந்துவிட்டது என்று தோன்றிற்று.
இப்படி ஒரு அவல நிலை தமிழ் நாட்டை பன்றிக்காய்ச்சலாகப் பீடித்திருக்கும்போது, எப்போதாவது ஒரு தமிழ்ப் படத்தில் இயல்பான, வாழ்க்கைத் துணுக்கு ஒன்றைக் கண்டு விட்டால் எனக்கு எப்போது இவர்களுக்கும் சுரமோ காக்கவலிப்போ வந்து நடிப்பு என்ற ஆட்டம் போடுவார்கள் என்ற பயம் பிடித்து விடும். இந்த பயம் நான் டாப் டென் மூவீஸ் என்னும் ஐந்து அல்லது ஆறு நிமிட அவஸ்தையில் கூட வந்து தொலைத்துவிடும். அதாவது ஒரு ஐந்து நிமிஷம் கூட தமிழ் சினிமா தன் இயல்பில் இருக்க் சாத்தியமில்லாது போய்விட்டது என்பது தான்.
”வேலை செய்யற இடத்திலே எல்லாம் சவுகரியமா இருக்காடாலே,” என்று சரண்யா கேட்கிறாள். இது இயல்பாக இருந்தாலும் ஒரு தாய் இதை தன் மகன் விடுமுறையில் வந்த உடன் கேட்பாளே தவிர அவன் விடுமுறை முடிந்து வேலைக்குப் போய்ச் சேரும் போது கேட்க மாட்டாள். அதுக்கு அவன் தன் வேலையில் இருக்கும் சுகத்தை பதவிசைப் பற்றி அளப்பான். எந்த பிபிஓ விலும் இருக்கும் சூழலைச் சொன்னால் கிராமத்து அம்மாவுக்கு அதிசயமாகத் தான் இருக்கும். அந்த பதிலும் அம்மாவின் வியப்பும் சரி. இயல்பு தான்.இது எப்படி தமிழில் நீடிக்க இயலும்? உடனே பன்றிக்காய்ச்சல் வரவேண்டுமே. “ அம்மா இரும்மா,” என்று சொல்லி அவன் உடனே விடுக்கென எழுந்து வெளியில் கொடியில் காயப்போட்டிருக்கும் புடவையை இழுத்துக்கொண்டு வருவான். வந்து அந்தப் புடவையை தன் மேல் போர்த்தி அதை வருடிக்கொண்டு உடனே, அம்மா, நீ என்னைச் சின்னப் புள்ளேலே இந்தப் புடவையை போத்தித்தானே தூங்க வைப்பேம்மா, “ என்று கதறிக்கொண்டே சொல்லி அழ ஆரம்பித்துவிடுவான். “ஆகா என்னா உணர்ச்சி பாருங்க, என்னா அம்மா பாசம்” என்று நம் ரசிகர்களும் கண்ணீர் மல்க, ஒரே ரகளை தான். நன்றாக, இயல்பாக, ஒரு இரண்டு நிமிடம் கூட நீடிக்கமால, உடனே ஒரு ஆரவார, அபத்த ஆபாசத்துக்குத் தாவி விடுகிறார்கள் நம் சினிமாக் காரர்களும், வஜனம் எழுதுபவர்களும்.
முத்துக்கு முத்தாக என்ற படத்தைப் பற்றி நான் இவ்வளவு தான் எழுத முடியும். ஏனெனில் அவ்வ்ளவு தான் சன் டிவி யில் டாப் டென் துணுக்கில் நான் பார்த்தது. படத்தில் மிக உணர்ச்சி கரமான கட்டத்தைத் தானே விளம்பரத்துக்கு டாப் டென்னில் தேர்ந்தெடுத்துக் காட்டுவார்கள். ஆக, படம் முழுதும் இந்த அழகில் தான் இருக்குமா என்பது எனக்குத் தெரியாது. இப்படி ஒரு இயல்பான அமைதியான சித்திரமும் அடுத்து சில நிமிடங்களில் ஒரு அபத்தமான ஆபாச ஆரவாரம் எப்படி உடன் இணைகின்றன என்பது எனக்கு ஆச்சர்யம்.
ஆச்சரியப்பட வேண்டியதில்லை தான். இது சாதாரண ரசிகர் கூட்டம் பார்க்கும் துணுக்கு, கட்டம் என்றும் அதற்கு ஏற்ப தயாரிப்பாளர், நடிகர், வஜனகர்த்தா எல்லாரும் ஆட்டம் போடு கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், இந்த சூழலை விட்டு வெளியேறி மிக சீரியஸாக சினிமா இன்ஸ்டிட்யூட் பிரபலங்கள் பேசிக்கொள்வது எப்படி இருக்கும்? மிக உயர்ந்த தளத்தில், தரை மகா ஜங்களின் பாமரத்தனத்தை மீறிய ஒரு உச்சத்தில் இருக்கும் என நம்பலாமா? அது தான் இல்லை. அங்கும் இதே இரட்டை முகம் தான். புத்தி பூர்வமாகப் பேசிக்கொண்டே இருக்கும் போதே தலையில் கவித்துக்கொள்ள சட்டியும் தயாராக மடியில் இருக்கும்.. அர்த்தமும் ஆப்பாசமும் அடுத்தடுத்து வரும் நிலை தான் அங்கும். ஒரே ஆளுமையின் இரு முகங்களாக ,இதைக் காண்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இருமுகங்கள் இரு நேர் எதிரான ரசனைகள் கொண்டிருந்த அவருக்கு எந்த சங்கடமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
அவர் எப்போதும் தொலைக் காட்சியில் தமிழ் சினிமாவின் ஏதோ ஒரு படத்தை எடுத்துக்கொண்டு அதன் கதை, இயக்கம், நடிப்பு, என்று அதன் பல்வேறு குணங்களை, சிறப்புக்களைச் சொல்லி அதை தராசில் எடைபோட்டு எது எந்த விஷயத்தில் எடை கூடுகிறது, எது எந்த விஷயத்தில் எடை குறைகிறது என்று ஏதோ தட்டாசாரியார் குண்டு மணி குண்டு மணியாக அவரது தராசில் போட்டு துல்லியமாக நிறுத்து எடை கூறுவது போல இவரது அலசல் கடைசியில் எடை போடும். தமிழ் சினிமாவை தொலைக் காட்சியில் எடை போடும் யாரும் அதன் அபத்தங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசி விட முடியாது. தமிழ் நாட்டின் கலையே, தமிழ் நாட்டின் பத்திரிகை, தொலைகாட்சி என்ற சமாசாரங்கள் எல்லாமே எந்த தமிழ்ப் படத்தைப் பற்றியும், தமிழ் நடிக நடிகைகளைப் பற்றியும், இயக்குனர், இத்யாதிகளைப் பற்றியும் பாதகமான அபிப்ராயம் சொல்லித் தப்பித்து விட முடியாது. தமிழ் தொலைக்காட்சிகளின் விளம்பர வாழ்வே தமிழ் சினிமா தரும் வரும் வருமானத்தில், பார்வையாளர் பெருக்கத்தில், அது திரும்பவும் சினிமாவின் ஆதாரத்தில், தான் தீர்மானிக்கப் படுகிறது.
அப்படியிருக்க ஒரு அகில இந்தியப் புகழ்பெற்ற இயக்குனரைச் சார்ந்தவர், சினிமா இன்ஸ்டிட்யூட்டில் சினிமாத் துறைக் கல்வி கற்றவர், தானும் ஒரு இயக்குனர், பல உலகத் திரைப்பட விழாக்களுக்கு ஒரு சிறந்த சினிமாக் கலை நிபுணராக அழைப்புப் பெறுபவர், அட என்னவாகத் தான் இருந்தாலும், எந்த தமிழ் சினிமா நடிகரைப் பற்றியுமோ, படத்தைப் பற்றியுமோ, இயக்குனரைப் பற்றியுமோ பாதகமான அபிப்ராயத்தைச் சொல்லிவிட முடியாது. சொன்னால் அவருக்கு அந்தத் தொலைக்காட்சியில் கிடைக்கும் இடம் கிடைக்காது. தமிழ் சினிமாவில் இனி அவர் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளவோ அதைச் சார்ந்து வாழ்தலோ அசாத்தியமானது.
அததகைய சூழலில் தமிழ் சினிமா பற்றி தமிழ்த் தொலைக் காட்சியில் தராசில் குண்டுமணி போட்டு எடை போடுவது போல நுன்ணிய விமர்சனம் செய்யும் பாவனைகள் என்னதான் இருந்தாலும், கடைசியில் எந்த அபத்தத்தையும் பற்றிய உண்மையான,அதாவது பாதகமான அபிப்ராயத்தை அவர் சொல்லி விடமுடியாது.
சொல்லி விட முடியாதா, சொல்லத் தூண்டும் ரசனை உணர்வு கிடையாதா? சினிமா கலைக்கூடத்தில் என்ன சொல்லிக் கொடுத்தார்கள்? என்ன கற்றார் இவர்? இவரைத் தனித்துப் பேசுவதில் எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. அவருக்கு நான் நியாயம் செய்யவில்லை. ஏனெனில், சினிமா இன்ஸ்ட்டிட்யூட்டில் கற்று வரும் எவரும் அங்கு கற்றதை தூர எறிந்து விட்டுத் தான், தமிழ் ஸ்டுடியோக்குள் நுழைய வேண்டும். அவையெல்லாம் கவைக்குதவாத ஏட்டுச் சுரைக்காய். நம் தமிழ் சினிமாவின் கலை மரபுகளைப் புதிதாக, நடிகர், இயக்குனர்களுடனான அன்றாட உறவாடலில் கற்க வேண்டும்.
சமீ[பத்தில் வாய்ப்பு தவறிவிட்ட ஒரு இயக்குனர் சோகித்து உட்கார்ந்திருக்க ஒரு வாய்ப்பு திடீரென் வரவே அவர் சந்தோஷப்பட்டார். அதன் ஹீரோ அதிர்ஷ்டத்தில் கிடைத்த இந்தப் படத்தின் ஷூட்டிங்கை அமெரிக்காவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றாராம். முதலில் டான்ஸே பேத்தல். அதற்கு அவசியமில்லை. இந்த அபத்தத்துக்கும் மேற்சென்று இந்த டான்ஸ் ஷூட்டிஙகை அமெரிக்காவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற இன்னொரு அபத்தத்தை இந்த ஹீரோ சுமத்துகிறார் என்றால்……. கேட்டுக்கொள்ளத் தான் வேண்டி யிருந்ததாம். கேட்டுக்கொண்டாராம். தயாரிப்பாளரும் தலையிலடித்துக்கொண்டு, “சரி பேய்க்கு வாக்குப்பட்டாச்சு, முருங்கை மரத்தில் ஏறுவதென்ன, அங்கேயே வாசம் செய் என்றாலும் செய்து தான் ஆக்வேண்டும்” என்று சலித்துக் கொண்டாராம். இது தமிழ் சினிமா.
சரி, பைத்தியமாக இருந்தால் பைத்தியமாக நடந்து கொள்வதில் கஷ்டமில்லை. பைத்தியம் வேண்டாத இடத்தில் ஒரு தனி ரக தமிழ் சினிமா பைத்தியமாக ஆக வேண்டும் என்று ஒரு ஸ்திர புத்திக்காரனுக்கு தலை விதியென்றால்…… அப்படித்தான், என் பொட்டில் அறைந்த மாதிரி ஒரு அனுபவம்.
மீண்டும் தொலைக்காட்சிக்கே வருகிறேன். அந்த சினிமா எடை போடும் குண்டுமணி தராசு சமாசாரத்துக்கே வருகிறேன். இவரும், இன்னொருவரும் பேசிக்கொள்கிறார்கள். தமிழ் சினிமாவைப் பற்றிப் பேசும் முன் கொஞ்சம் உலகத் திரைப் பட விழாக்கள் போய் வந்தது பற்றியும் அதில் பார்த்த பிரமாதமான படங்கள் பற்றியும் பேசுவார் அவர். இல்லையென்றால் சென்னையில் சமீபத்தில் வெளியான ஆங்கில அல்லது வேறு வெளி நாட்டுப் படங்கள் பற்றி. பேசுவார்கள். அது வேறு வகுப்பு வேறு பாடம். ஆக வேறு மாதிரித் தான் இருக்கும்.
இந்த முறை அவருடன் சம்பாஷணையில் ஈடுபட்டவரும் ஒரு சினிமா இன்ஸ்டிட்யூட் நடத்துபவர் தான். இன்ஸ்டிட்யூட்டில் படித்தவர்தான். அனேகமா, ஒருவரும் ஒரே இன்ஸ்டிட்யூட்டில் ஒரே காலத்தில் சினிமா கற்ற நட்பின் நீடிப்பில் இந்த கலந்துரையாடல் என்று கொள்ளலாம்.
வழக்கமாக சினிமா பற்றி தொலைகாட்சியில் பேசுபவர் சொல்கிறார்: இந்த முறை ஆஸ்கருக்கு வந்த படங்களைப் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். கடைசித் தேர்வுக்கு வந்த படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பைக் கொண்டிருந்தன என்றாலும் நம்மிடையே எந்த படம் ஆஸ்கர் பரிசுகளை நிறையப் பெற்று முதலிடம் பெறும் எது சிறந்த படமாக, சிறந்த இயக்குனருக்கான பரிசைப் பெற்றுத் தரும் என்பதில் நம்மிடையே இரு வேறு அபிப்ராயங்கள் இருந்தன. நீங்கள் சொன்னீர்கள் “அவதார்” படம் தான் சிறந்த படம் என ஆஸ்கரி பரிசு பெறும் என்று. எனக்கு என்னவோ ஹர்ட் லாக்கர் தான் சிறந்த படம் என்று. அது தான் சிறந்த படத்தின் பரிசைப் பெறவேண்டும், பெறும் என்று. நான் நினைத்த படியே சிறந்த படம் பரிசு பெற்றது ஹர்ட் லாக்கர்”: எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று. சொன்னார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுகாறும் வருஷக் கணக்கில் ஒவ்வொரு வாரமும் இவர் அபத்தமும், அருவருப்பும் நிறைந்த தமிழ் படங்களையெல்லாம் துல்லிய விமர்சன்ம் செய்வதான பாவனையில் அபத்தமான அபிப்ராயங்களையும் ரசனையையும் ஒரு வாரம் விடாது கொட்டிக்கொண்டிருந்தவருக்கு இப்படி ஒரு ரசனையா என்று.
அவதார்,மாயா ஜாலக் காட்சீகள் நிறைந்த, கற்பனையான சினிமா எதிர்கால விஞ்ஞான கற்பனை. தொழில் நுட்பத்தை வைத்தே ஜகஜ்ஜாலம் செய்து ஒரு கற்பனை உலகில் மயக்கத்தில் ஆழ்த்தும் படம். அதற்கு எதிராக, ஹர்ட் லாக்கர், இராக் போக்களத்தில் பயங்கர சுரங்க வெடிகளை அதன் திரியை அகற்றி செயலிழக்கச் செய்யும் பாதுகாக்கும் பணியில் இருப்பவனையும் அவனைச் சுற்றி இருப்போரின் அவரவர் பயங்கர நிலைகளையும் அவர்கள்தேர்ந்து கொள்ளும் வாழ்க்கையைப் பற்றியுமான, படம். போர்க்கள் சூழலில், அதில் பணிசெய்யும் ஒவ்வொருவரின் அந்தந்த கணத்தில் நிலையற்ற நிச்சயமற்ற பயங்கரத்தையும் இருப்பினும் அதில் தன்னை ஆழ்த்திக்கொண்டு கணத்துகுக் கணம் வாழும் நிலை பற்றியுமான படம். முன்னர் ஒரு தடவை தனக்கு சினிமா ட்விடி விற்ற பையன் இப்போது வெடிகளைத் தன்னைச் சுற்றிக் கட்டிக்கொண்டு இங்கு உடல் சிதறிக்கிடப்பதைக் காணும் வாழ்க்கை நிதர்சனம். வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகள், அர்த்தங்கள், நம் தேர்வுகள் பற்றிக் கேள்வி எழுப்பும் படம். உண்மையிலேயே சிறந்த படம். ஆஸ்கர் தேர்வுகள் எப்போதும் இப்படி இருப்பதில்லை. எதிர்பார்ப்பு, கலந்துரையாடலில் பங்கு கொண்ட மற்றவர் சொன்ன படியே அவதார் படத்துக்ககத் தான் இருந்திருக்கும். இதெல்லாம் போகட்டும். இப்போது நம்மைச் சூழ்ந்துள்ள சங்கடமான விஷயம்
தமிழ் சினிமா என்னும் வைக்கோலையும் சுவைத்துச் சுவைத்து துல்லிய எடைபோடு நுண்ணிய விமர்சனம் செய்யும் நபர், ஹர்ட் லாக்கரைச் சிறந்த படமாக என்ணும், நுண்ணிய கலை ரசனையையும் எப்படிப் பெற்றார்?. மேஜையில் ஒரு தட்டில் கராச்சி அல்வா வும் இன்னொரு தட்டில் வைகோலையும் ஒரு சேர சுவைக்கும் ரசனை என்ன ரசனை? அந்த ஆளுமை என்ன ஆளுமை? இதை வளர்க்கும் பண்பாடு என்ன பண்பாடு? இப்படிப் பட்ட மனிதரைத் தான் தமிழ் சினிமா வளர்த்து வருகிறது. தமிழ் சினிமா என்ன, தமிழ் பத்திரிகை உலகம், தமிழ் அரசியல் உலகம் எல்லாமே தான்.
--Ksubashini 06:30, 30 ஜூன் 2012 (UTC) |