மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்:018மரபு விக்கி இருந்து(மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் - 018 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திரும்பத் திரும்ப நான் எழுதத் தொடங்கிய சமயத்தில் அவர்கள் கேட்ட கேள்விகளையே திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள் என்றால், இங்கு சொல்லப்படுவது எதையும் எதிர்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை என்றே சொல்ல வேண்டும்.
நல்ல படம் எது என்று சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். இது வரை கண்டதெல்லாம் பிதற்றலாக இருக்கிறதே, இதையே நாம் ஆரம்ப காலத்திலிருந்தே செய்து வருவது மட்டுமல்ல அந்த விஷச் செடியையே இப்போது ஒரு பிரம்மாண்டமான விருக்ஷமாக வளர்த்திருக்கிறோமே என்ற நினைப்பே தோன்றாது கேட்கப் படும் கேள்வி இது.
இது ஒரு பிரச்சினை என்றால், இன்னொன்று மொழி பற்றியது. சினிமாவையும் சினிமா அல்லாதவற்றையும் பிரித்துக் காண வேண்டிய அவசியமும் இருக்கிறது. சினிமாவைத் தமிழில் திரைப் படம் என்று சொல்லுகிறோம். வம்பற்ற பாடு. திரையில் ஓடும், படம். சினிமா என்பது புதிதாகக் கிடைத்துள்ள ஒரு வெளியீட்டுச் சாதனத்துக்குரிய பெயர். அதற்கும் முன்னால் ஃபில்ம் என்ற வார்த்தை வந்துவிட்டது. அதற்குப் பின் வந்த வளர்ச்சி, கலையாகப் பரிணமித்த வளர்ச்சியை சினிமா என்று சொல்கிறோம். ஃபில்ம் என்பது ஒரு தொழில் நுட்ப வளர்ச்சி கண்ட சாதனம். அந்தத் தொழில் நுட்பம் கலையாகும் போது தான் அது சினிமா என்று பெயர் சொல்லப்படவேண்டும். இது காறும் சுமார் 80 வருடங்களுக்கு மேலாக நாம் வளர்த்துள்ளதை தமிழ்த் திரைப்படங்கள் என்று சொல்லலாம் தான். தவறில்லை. தமிழ் ஃபில்ம் என்றும் சொல்லலாம். ஆனால் இந்த 80 வருடங்களில் நாம் தயாரித்து வெளியிட்டுள்ள லக்ஷக்கணக்கான திரைப்படங்களில் சினிமா என்று சொல்லத் தக்கதற்கான முயற்சிகளை நாம் ஒரு சிலவற்றில் பார்க்கலாம். முன்னரே சொன்னேன் பாலு மகேந்திராவின் வீடு படத்தை. அது சினிமா. ஏனெனில் காட்சி பூர்வமாகவே அது ஒரு வாழ்க்கைத் துணுக்கை, தமிழ் வாழ்க்கைத் துணுக்கை நம் முன்னே விரித்து நிகழ்வித்தது
என்னமோ உலகத்தரப் படங்களையெல்லாம் பார்த்து அவற்றால் இன்ஸ்பையராகியுள்ளதாகச் சொல்லிக் கொள்ளும் மிஷ்கினாக இருந்தாலும் சரிதான். கலை தானே தன்னை ஸ்தாபித்துக்கொல்ளும். அதுதான் அதன் நிரூபணமே. அது ஒன்றும் மேள தாளங்களோடு, படைகள் அனைத்தும் முன் செல்ல பின்னால் கட்டியம் கூறிக்கொண்டு பராக் பராக் என்று எட்டுக் குதிரைகள் பூட்டிய ரதத்தில் அது நகர் வலம் வராது. அமெரிக்க ஜனாதிபதியோ, ஜெர்மன் சான்ஸ்லரோ ஏகே 47 –ஐக் கையிலே ஏந்தி நான்கு கருப்புப் பூனைப் படை சூழ்ந்திருக்க 16 அம்பாஸடார் கார் முன்னும் பின்னும் வருவது தன் அந்தஸ்தைப் பறை சாற்றும் என்று ஊர்வலம் வரும் இன்றைய அரசியல் பிரமுகர்களின் கோமாளித்தனம் போன்றது தான், இதோ பார் நான் என்னென்னவெல்லாம் செய்து காட்டுகிறேன் பார், நான் என்னென்ன படமெல்லாம் பார்த்திருக்கிறேன் பார் என்று பாவனை செய்பவர்தான். அவர் இதற்காகப் படும் அவஸ்தையெல்லாம் பார்த்தால் மிகப் பரிதாபமாக இருக்கிறது. அடிப்பது காப்பி ஆனால் சொல்லிக் கொள்வது இன்ஸ்பைரேஷன். இதற்கெல்லாம் அதிக தூரம் போக வேண்டியதில்லை. அதிகம் அவரது படங்களை ஏதும் அலசி ஆராயவேண்டியதில்லை. சங்கீதம் தெரிந்தவனா, இல்லை தானும் ஒரு பாட்டுக்காரன் தான் என்று நம்மிடம் பீத்திக் கொள்ள வந்திருக்கிறானா என்பது ஒருவனது குரல் எழுந்தவுடனேயே தெரிய வந்துவிடும். அவனிடம் ”செர்டிபிகேட்டைக் காட்டுய்யா முதல்லே” என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை ஏதும். மிகச் சாதாரண விஷயம். மிஷ்கினின் நந்தலாலா தொடங்கியவுடனேயே அது பல்லிலிளிக்கத் தொடங்கி விடுகிறது. படம் ஆரம்பிக்கத் தொடங்கியதுமே நாம் பார்க்கும் முதல் காட்சி, அந்தச் சிறுவன் முகம் மாத்திரம் தலை குனிந்த வாறே நிற்கும் காட்சிதான். அவன் எதற்காக அவ்வளவு நேரம் அப்படி தலை குனிந்தவாறே நமக்குக் காட்சி தருகிறான். மிஷ்கின் சொல்ல வந்தது என்ன?
ஒரு தொழிற்சாலையில் ஒரு லேத்தின் முன் ஒரு நாற்பத்தைந்து வயது பெண் உட்கார்ந்திருக்கிறாள். அவள் தயாரிப்பது வெறும் நட். ஒவ்வொன்றாகத் தயாராகும் நட் ஒவ்வொன்றையும் எடுத்து ஒரு இரும்புத் தட்டில் போட்டுக்கொண்டே இருக்கிறாள். அது அவள் வேலை. இதைச் சொல்ல எவ்வளவு நேரம் அந்தக் காட்சியைக் காட்டுவது? குறைந்தது மூன்று நான்கு நிமிஷம் அந்தக் காட்சி தொடர்கிறது. காமிரா அசைவதில்லை இந்தச் செய்தியைச் சொல்ல எவ்வளவு நேரம் அந்தக் காட்சி நம் முன் காணப்படவேண்டும். பத்து செகண்ட், தாங்காது அதற்கு மேல். என் ஞாபகத்தில் அந்தக் காட்சி சுமார் மூன்று அல்லது நான்கு நிமிட நேரம் காட்டப்படுகிறது. நமக்கு அலுப்புத் தட்டி வெறுப்பு ஏற்படும் வரை. அவள் நட்டு தயாரிக்கும் வேலையில் இருக்கிறாள் என்பதல்ல செய்தி. தினம் எட்டு மணி நேரம் அவள் இருந்த இடத்தை விட்டு அசையாது அந்த வேலையைச் செய்கிறாள். மாதம் முப்பது நாளும். வருடம் 12 மாதங்களும். இது காறும் 20 வருடங்கள் அந்தக் காரியத்தைச் செய்து வந்திருக்கிறாள். இன்னும் இருபது வருடங்களோ என்னவோ அவள் இதே காரியத்தைத் தான் செய்யப் போகிறாள். நமக்கு அதைப் பத்து செகண்டுக்கு மேல் பார்க்க போரடிக்கிறது. இது தான் அவள் வாழ்க்கை. இதில் தான் அவள் குழந்தைகள் குடும்பம் உயிர் பிழைத்திருக்கிறது. அவள் வாழ்நாள் முழுதும் இப்படித் தான் கழிந்து வருகிறது. இனியும் இறுதி மூச்சு வரை இப்படித் தான் கழியப் போகிறது. இந்தக் கொடுமையை அந்தப் படம் நமக்கு மூன்று நிமிடம் வெறுப்பூட்டும் அலுப்பில் சொல்லி விடுகிறது. 10 செகண்ட் காண்பித்தால் இந்த செய்தி நமக்கு சொல்லப்பட்டிராது. சொல்லப்பட்டது அவள் நட் செய்யும் லேத்தில் வேலை செய்கிறாள் என்பது. சொல்லப்படாது உணர்த்தப் படுவது அவள் வாழ்க்கை பூராவும் இப்படிப் பட்ட ஒரு கொடுமையில் பாழாவது இன்றைய வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத ஒரு அம்சம் என்பது.
-வெங்கட் சாமிநாதன் --Ksubashini 22:06, 11 நவம்பர் 2011 (UTC) |