கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 15

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

கோவிலூர் கொற்றவாளீசர் திருக்கோயில்


சாலிவாடி என்றும் கழனிவாசல் என்றும் பெயருடைய ஊரில் சிவகுப்தன் என்ற தன வணிகன் இருந்தான்.  அவன் மனைவி சுதன்மை.  இவர்கள் இருவரும் அரன் நாமம் ஓதித் திருபுவனேசுவரரை பக்தி செய்து வந்தார்கள்.  அவர்களுடைய அருமை மகள் அரதனவல்லி.  சுதன்மை திருபுவனேசையிடம் மிகுந்த பக்தியுடையவள்.

அம்பிகையின் திருக்கோவில் அருகில் சிவகுப்தனுடைய வயல் இருந்தது.  உயர்ந்த சாலிவாடி நெல் கதிர் முற்றத் தொடங்கி இருந்தது. அரதனவல்லியைக் காவலுக்கு அனுப்பினார்கள்.  அவள் விளையாட்டுப் பெண்.  கழனிக்கே போகாமல் மலர்ச்சோலையில் சென்று விளையாடிக் கொண்டிருந்தாள்.

கோவிலில் குடி கொண்டிருந்த தேவி சுதன்மையின் பால் அன்பு கொண்டு தானே அரதனவல்லியாக வடிவமெடுத்து வயலுக்குக் காவலாக நின்றாள்.

நடுப்பகலில், 'குழந்தைக்குப் பசிக்குமே' என்று தயிர்சாதம் பிசைந்து எடுத்துக் கொண்டு பெண்ணைத் தேடிச் சென்றாள் சுதன்மை.  பரப்பின் மீது சமர்த்தாக உட்கார்ந்து கொண்டு கொம்பினால் கிளிகளை ஓட்டிக் கொண்டிருந்த மகளைப் பார்த்து மகிழ்ந்தாள்.  வெயிலில் சிரமப்படுகிறாளே என்ற பரிவோடு கையில் தயிர்சாதம் எடுத்துப் போட அரதனவல்லி ருசித்துச் சாப்பிட்டாள்.  கொஞ்ச நேரம் கழித்து அரதனவல்லி வந்து 'அம்மா, பசிக்கிறது' என்றாள்.  "என்னடி இது! இப்போது தானே உனக்குச் சாதம் போட்டுவிட்டு வந்தேன்.  ஆவலாகச் சாப்பிட்டாயே!  அதற்குள் பசியா?" என்று திகைத்தாள் சுதன்மை.

அரதனவல்லி தான் வயல்பக்கமே செல்லவில்லை என்று கூறியதும் சுதன்மை அதிசயத்தில் ஆழ்ந்தாள்.  தேவியின் கருணையே இது என்று உணர்ந்து கொண்டாள்.  சிவகுப்தனும் சுதன்மையும் அன்னம் உண்டு அருள் புரிந்த தேவியை மனமுருகிப் போற்றினார்கள்.

நெல்லைக் காத்த அம்பிகைக்கு திருநெல்லை நாயகி என்றும் சாலிவாடீச்வரி என்றும் பெயர் வந்தது.

சிறுமணிச் சம்பாவைச் சமைத்துக் கட்டித் தயிர் விட்டுக் கலந்து மணக்க மணக்கத் தாளித்துக் கொட்டி வாழைக் குருத்தில் சாப்பிட்டால் அன்னை ததியோன்னப் பிரியையாக இருப்பதில் அதிசயமென்னவென்று தோன்றும்.

கோவிலூர்ப் புராணத்தில் உள்ள பல கதைகளில் இதுவும் ஒன்று.  காரைக்குடிக்குச் சமீபத்திலுள்ள கோவிலூர்.  மதுப்ரிய முனிவர் தவம் செய்த தலம். அவருடைய தவச் சிறப்பால் இந்த ஊர்க்குளத்துக்கு மது புஷ்கரிணி என்றும் அருகில் ஓடும் ஆற்றுக்குத் தேனாறு என்றும் பெயர் விளங்குகிறது.

கோவிலூர் இன்னும் பல காரணங்களால் பெருமை பெற்றிருக்கிறது.  கோவிலை வைத்துத் தோன்றிய ஊர் இது.  திரிசிரபுரம் மகாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் தெள்ளு தமிழில் தலபுராணம் பாடிய ஊர்.  வேதாந்த வடமொழி நூல்களை வடமொழி அறியாதாரும் பயிலத் தமிழாக்கம் செய்து தமிழில் பாடம் சொல்லும் முறையைத் தொடங்கிய ஊர்.  ஆண்டவர் என்ற மகான் வேதாந்த மடம் நிறுவிய ஊர்.  ஞான மார்க்கத்தை, ஆதிசங்கர பகவத் பாதருடைய அத்வைத தத்துவத்தை உணர்ந்த ஞானியர் மடத் தலைவர்களாக விளங்கிய ஊர்.

ஞான மார்க்கத்தில் ஈடுபடுவதற்கு மனப்பக்குவமே தகுதி: பிறப்பு ஒரு தடையல்ல என்பதை நிலைநாட்டினார் கோவிலூர் ஆண்டவர்.  சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்குடியில் நகரத்தார் குடியில் தோன்றிய முக்திராமலிங்கம் சிறு வயதில் சிக்கல் க்ஷேத்திரத்தில் பெற்றோருடன் வசித்து வந்தார்.  அருகில் பொருள்வைத்த சேரி என்ற சிற்றூரில் உகந்தலிங்க சுவாமிகள் என்ற ஞானி இருந்தார்.  அவர் நெசவுத்தொழில் செய்பவர். சங்கரருடைய வேதாந்த சாரத்தை அறிந்த பெரியார், அவரிடம் முத்துராமலிங்கத்திற்குப் பக்தி உண்டாயிற்று.  உகந்தலிங்க சுவாமிகள் அவருக்கு வேதாந்த நூல்களைப் பாடம் கூறி வந்தார்.

ஒரு சமயம் இளைஞனாக இருந்த முத்துராமலிங்கத்தைப் பார்த்த வடநாட்டு யோகி ஒருவர், "இவன் உலகத்துக்கே உபதேசிக்கப் பிறந்தவன்" என்றாராம்.  அதுமுதல் அனைவரும் அவரை ஆண்டவர் என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

வேதாந்த நூல்கள் பல கற்றபின் கடைசியாக ஞான வாசிட்டம் படித்துப் பூர்த்தி செய்வது முறை.  வசிஷ்ட முனிவர் ஶ்ரீராமபிரானுக்கு உபதேசித்ததன் சாரம் இந்த நூல்.  வாசிட்டம் படித்த பின்னர் குருவுக்கு தக்ஷிணை கொடுத்து மரியாதை செய்து அவர் அனுக்ரஹம் பெற வேண்டும்.  ஆண்டவர் தம் தந்தையிடம் குரு தக்ஷிணைக்குப் பொருள் கேட்டார்.  தகப்பனார்  காதில் விழாத மாதிரி இருந்தார்.  கோபம் கொண்ட ஆண்டவர், "காது செவிடாகி விட்டதா?" என்று கேட்டார்.  அந்த விநாடி முதல் தந்தைக்குக் காது கேட்கவில்லை. பிறகு உகந்தலிங்க சுவாமிகள் கூறியபடி ஆண்டவர் திருநீறு கொடுக்கவே மறுபடியும் காது கேட்க ஆரம்பித்தது.

இப்படி இறைவன் அருளைப் பெற்ற ஆண்டவர் காரைக்குடியிலிருந்த போது கழனிவாசல் தலத்திலுள்ள அருள்மிகு நெல்லையம்மை, கொற்றவாளீசர் இருவரையும் வழிபடுவது வழக்கம்.  ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தப் பகுதியில் ஏழகப் பெருந்தெரு என்ற வணிகப் பெருமக்களின் குடியிருப்பும் அவர்களுக்குப் பாதுகாப்பாக ஒரு படையும் இருந்தது.  இந்தப் பகுதியில் பல ஆலயங்கள் இருந்தன.  அவற்றுள் ஒன்று கொற்றவாளீசர் கோவில்.  வீரசேகர பாண்டியன் என்ற அரசன் இப்பகுதியில் ஆண்டு வந்தான்.  வேட்டையாடச் சென்றபோது அவனுடைய வாள் தொலைந்து போய் விட்டது.  தேடிப் பார்த்தபோது ஒரு சிவலிங்கத்தின் அருகில் அது கிடைத்தது.  மனம் மகிழ்ந்த பாண்டியன் ஈசனுக்குக் கோவில் எழுப்பினான். ராஜகட்கபரமேசுவரர் என்றும் கொற்றவாளீசுவரர் என்றும் அவருக்குப் பெயர் உண்டாயிற்று.

இந்தக் கோவில் நாளாவட்டத்தில் சிதிலமடைந்து மக்கிய கீத்துக்களால் கூரை வேயப்பட்டிருந்தது.  ஒருநாள் ஆண்டவர் அங்கே இருந்தபோது இடி மழையுடன் காற்று வீசவே கூரை விழுந்துவிட்டது. அப்போதே அவர் நெல்லையம்மனுக்கும் கொற்றவாளீசர்க்கும் கருங்கல் திருப்பணி செய்யச் சங்கல்பம் செய்து கொண்டிருக்க வேண்டும்.  இந்த எண்ணத்தை மிக உன்னதமான முறையில் அவர் நிறைவேற்றினார்.

கோவிலருகிலேயே வேதாந்த மடம் நிறுவி சாதுக்கள் எந்தவித விசாரமும் இன்றி வேதாந்த  பாடங்கள் கேட்டுப் பயனடையவும் தமிழ்நாடெங்கும் ஆதி சங்கரரின் அத்வைதக் கொள்கை பரவவும் வகை செய்தார்.

ஒருவருக்குப் பின் ஒருவராகக் கோவிலூர் மடத்துப் பீடாதிபதிகளாக விளங்கிய ஐந்து மடாதிபதிகள் காலத்தில் திருப்பணிகள் நடைபெற்று இந்தக் கோவில் மிகவும் அழகாக விளங்குகிறது.  திருக்குளம், நீராழி மண்டபம், மாட வீதிகள், பாடசாலை, குடியிருப்பு வீடுகள், ஆண்டவர் பின் வந்தவர்களுடைய அதிஷ்டானக் கோவில்கள் என்று விரிவடைந்து பொலிவு பெற்றது கோவிலூர்.

கோவிலூரில் ஐந்தாவது பட்டத்தில் விளங்கிய திருக்களர் ஆண்டவர் காலத்தைப் பொற்காலமென்று பாராட்டிப் புகழ்கிறார்கள்.  ஆண்டவர் தொடங்கிய திருப்பணிகளை நிறைவேற்றியது இந்த மகானே என்றும் கூறுகிறார்கள்.  மலாயா நாட்டில் வாழ்ந்த நகரத்தார் பெருமக்கள் இவருடைய காலத்தில் கோவிலுக்குப் பொருளை வாரி வழங்கினார்கள்.  நித்திய பூஜைகளும், ஆடிப் பூர உற்சவமும் குறைவின்றி நடைபெறச் செய்ததோடு 1908 ஆம் ஆண்டில் கும்பாபிஷேஹமும் செய்து வைத்தார்.  அப்போது சிருங்கேரி பீடத்தை அலங்கரித்த ஜகத்குரு ஶ்ரீ சச்சிதானந்த சிவ அபிநவ நரசிம்ம பாரதி அவர்கள் தாமே நேரில் வந்திருந்தார்கள்.

கோவிலூரை நெருங்கும்போதே இரு உயரமான ரதம் போன்ற மண்டபங்கள் தெரிகின்றன.  அங்கிருந்து பார்த்தாலே தூரத்தில் கோபுர தரிசனமாகிறது. அருகில் செல்லச் செல்ல மற்ற கோபுரங்களும் புலனாகின்றன.  கோவிலெதிரே எட்டுப்பட்டை வடிவத்துடன் கூடிய நீராழி மண்டபமும் தெப்பக் குளமும் சில சிறுவர்கள் நீந்தி விளையாடுகிறார்கள்.  குளத்தின் தெற்கு வீதியில் கோவிலூர் மடம்.  வடக்கில் வீடுகள்.  கிழக்கில் தென்னை மரங்கள்.  அமைதி நிலவுகிறது.  ஞானத் தேட்டமுடைய தபோதனர் உறையுமிடம் அல்லவா?

சுதன்மையின் மகளாக வந்து தயிர் சாதம் விரும்பி உண்ட பெருமாட்டியான நெல்லையம்மன் சந்நிதியில் நிற்கிறோம்.  கோவிலூர்ப் புராணம் இந்தத் தேவியை சத்திய ஞானானந்த ரூபி என்றும், அத்வைத சொரூபி என்றும் புகழ்கிறது.

பளபளவென்று இழைத்த கருங்கற்களால் கட்டப்பட்ட கருவறைகள் அதைச் சுற்றி நீர் நிரப்புவதற்காக ஓடை, வேனில் காலத்தில் அம்மை அப்பன் இருவருக்கும் குளிர்ச்சியாக இருக்க நீர் நிரப்புவார்களாம்.  தளத்தில் இத்தாலி தேசத்து மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன.

ஆடிப்பூர உற்சவத்தின் கடைசி நாள். திருக்கல்யாண மகோத்சவம் நடக்கப் போகிறது.  தேவிக்கு அலங்காரம் நடைபெறுகிறது.  மடத்திலிருந்து மரப்பெட்டியொன்று வருகிறது  திரு செல்லமணி குருக்கள் அதைத் திறக்கிறார்.  அம்பாளுடைய கவசம்.  குமுத மலர்க்கரமும், திருவடிகளும் சாத்தி, கண்டமாலை ஒட்டியாணம் அணிவித்து, புருவத்தில் சந்தனம் இட்டு, மூக்குத்தி புனைந்து மலர் மாலைகளைச் சூட்டியதும் புது மணப்பெண்ணாகவே திகழ்கிறாள்.  குத்துவிளக்குச் சுடர் விட அருட்சுடராக அவள் நிற்கும் அழகு இதயத்தை மலரச் செய்ட்கிறது.

உற்சவமூர்த்திகள் மகா மண்டபத்தில் வீற்றிருக்கிறார்கள்.  முதல் நாள் கைலாச வாகனத்தில் தவமிருந்து இறைவன் தரிசனம் பெற்ற ஆடிப்பூர அம்மனுக்கு அலங்காரம் தொடங்குகிறது.  நீலப்புடவையும் முழுக்கை ரவிக்கையும் அணிந்து அம்மன் காத்திருக்கிறாள்.

புருவமெழுதி சிரத்தில் முடியமைத்தாயிற்று.  முழங்காலை அணைத்துக் கொண்டு அமர்ந்திருக்கும் அம்மன்.  ஆபரணப் பெட்டி வருகிறது.  ஆகா!  திவ்ய ஆபரணங்கள் ஜொலிக்கின்றன.  மடத்துத் துறவி ஒருவர் ஒவ்வொன்றாக எடுத்துத் தருகிறார்.  அவற்றை அணிவித்துத் தலை கிரீடம் சூட்டியதும் ஆஹா! மணப்பெண் களை வந்துவிட்டது! கடைசியில் பொற்கிளிகளைக் கரத்திலும் புயத்திலும் அமர்த்துகிறார்.  அடடா! இந்தக் கிளிகளின் அழகை விவரிக்கவே முடியாது.  அலகிலிருந்து மரகத மணி ஊஞ்சலாடுகிறது.

மணவாளரான ஸோமாஸ்கந்தனைப் பார்ப்போம்.  பொன் இழையால் கரை போட்ட பட்டு அணிந்து  மான் மழுவேந்தி அமர்ந்திருக்கிறார்.  சிரத்தில் கறுப்புத் துணி சுற்றி, கொம்பினால் இழைத்த திருமுடியைச் சூட்டுகிறார்.  தேவாதி தேவன் அணியும் மகுடம்.  என்ன கனம்!

அரிய வேலைப்பாடமைந்த மாங்காய் மாலை.  பச்சை மரகதம் ஒளி சிதற பலத்த வைரமிழைத்த பதக்கம்.  காசு மாலை, பாகம் பிரியாளான உமையும் காசுமாலை பதக்கங்கள் அணிந்த பொன்னாடை புனைந்தவளாய் ரத்தினத் திருமுடி இலங்க மெல்லிய புன்னகையுடன் அருகே அமர்ந்திருக்கிறார்.

சீர் வரிசைகள் வந்தாயிற்று.  பருப்புத் தேங்காய் வைத்தாயிற்று.  வைரத் திருமாங்கல்யத்தைக் காட்டினார்கள்.  உலகநாயகி அணியும் மங்கல ஆபரணம் காண இன்று நம் கண்கள் கொடுத்து வைத்திருக்கின்றன.

வேதம் முழங்க மறையோர் அக்னி வளர்க்க மணியோசைகள் ஒலிக்க, மேளம் முழங்க திருமாங்கல்ய தாரணம் ஆகிவிட்டது.  ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம்.

சகல கல்யாண குணங்களும் நிரம்பப் பெற்று மஹாதேவனுக்கும் நித்ய கல்யாணிக்கும் நடைபெறும் திருமணம் சகல ஜீவராசிகளுடைய திருக்கல்யாணமும் இதில் அடங்கும்.

இந்த ஆனந்தத்தில் நாம் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும்போதே தீபாராதனை தொடங்குகிறது.  அலங்கார தீபக் கால்கள் கலையழகுடன் செய்யப்பட்டவை.  அடுக்கு தீபமும், நாக தீபமும், ரிஷப தீபமும்,கலச தீபமும் எந்தக் காலத்திலோ வெள்ளியில் கழங்கு கழங்காகச் செய்யப்பட்டவை. ஒவ்வொன்றாக ஏற்றி தீபாராதனை செய்யும்போது இறைவனும், இறைவியும் நேரில் காட்சி தருவதாகவே பிரமை ஏற்படுகிறது.

கேரளத்தில் ஒரு கோவிலுக்குச் சென்றிருந்த போது அன்பர் ஒருவர் உங்கள் தமிழ்நாட்டுக் கோவில்கள் எல்லாம் பொருட்காட்சி சாலை மாதிரி இருக்கிறது.  கலை அம்சங்களில் கவனம் ஈர்க்கப் படுகிறது.  எங்கள் கோவில்கள் எளிமையாக இருக்கின்'றன.  இங்கே சுவாமி தான் முக்கியம்.  அமைதி தவழும் சூழ்நிலை தியானம் செய்வதற்கு உதவும்." என்றார்.

தமிழ்நாட்டில் கோவிலை அழகு மயமாகச் செய்வதற்கும், தங்கள் கைவண்ணங்களை ஒவ்வொரு துறையிலும் கலைஞர்கள் காட்டுவதற்கும் ஒரு முக்கியமான காரணம் இருப்பதாகப் படுகிறது.  கோடிக்கணக்கான அழகுப் பொருட்களைப் படைத்த ஈசுவரனுக்கு நமது முயற்சியில் எது தலை சிறந்ததோ அதை அர்ப்பணிக்க வேண்டும் என்ற ஆவல் எழுவது இயல்பே அல்லவா?  இந்த ஆசையே கலைச்சிறப்பு மிக்க கோவில்களைக் கட்டவும், திவ்விய ஆபரணங்களைச் செய்து சாத்தவும் இசையை அர்ப்பணிக்கவும் நிருத்யம் செய்து காட்டவும் உந்தியிருக்க வேண்டும்.

இறைவனுடைய சிருஷ்டியில் உயர்ந்த நீரையும், நெருப்பையும் மலரையும், மணத்தையும் அவனுக்கே அர்ப்பணிப்பது போல மனிதனின் படைப்பில் தலை சிறந்தவற்றையும் கோவில்களில் ஈசுவரார்ப்பணம் செய்வதில் பெருமிதமடைந்திருக்க வேண்டும்.  இல்லாவிட்டால் தமிழ் நாடெங்கிலும் காணப்படும் சிற்பக் கலையழகு மிளிரும் கோவில்களைக் கட்டி விழாக்கள் நடத்தும் வழிமுறைகளை வகுத்திருக்கவே முடியாது. 

காரைக்குடியில் மகர் நோன்புத் திடலில் நடக்கும் அம்பு போடும் பெருவிழாவைக் காண இரு கண்கள் போதாது.  கோவிலூரிலிருந்து கொற்றவாளீசர் ரிஷப வாகனத்தில் முதல் நாளிரவே புறப்பட்டுக் காரைக்குடி செல்லுவார்.

"பவனி வந்தனரே--மழுவிடை-- பவனை வந்தனரே!
தடுப்பதொரு கரம் கொடுப்பதொரு கரம்
தரித்த சடர் மழு விரித்ததொரு கரம்
எடுத்த சிறு மறி பிடித்ததொரு கரம்
இலங்கும் அணி பணி துவலங்கவே!
அடுத்த ஒரு புல கொடுத்த சோமனும்
ஆனை கொடுத்த விதானச் சேலையும்
உடுத்த திருமருங்கசைய மலரயன்
கொடுத்த பரி கலம் இசையவே!
பவனி வந்தனரே!

என்ற திரிகூட ராசப்பகவிராயரின் திருவுலா வருணனை அப்படியே பொருந்தியிருப்பதைக் காண்கிறோம்.

மறுநாள் தசமியன்று மாலை காரைக்குடி நகரச் சிவன் கோவில் சுவாமி, கொப்புடையம்மன் கோவிலில் குடியிருக்கும் நாயகி, பெருமாள் கோவிலிலிருந்து திருமால் எல்லோரும் தலைப்பாகையும் இடுப்பில் உடைவாளும் அணிந்து கையில் வில்லேந்திப் பகைவர்களை அழிக்கக் குதிரை வாகனத்தில் புறப்படுவார்கள்.  நான்கு சுவாமியும் மகர் நோன்புத் திடலுக்கு வந்ததும் அம்பு போடும் நிகழ்ச்சி நடக்கும்.  குதிரைகள் சுற்றிச் சுற்றி வருவதும் பெட்ரோமாக்ஸ் விளக்கொளியில் ஜனங்கள் அங்குமிங்கும் ஓடுவதும் யுத்தம் நடப்பது போலவே பிரமை தட்டும்.  கடைசியாக எல்லா சுவாமியும் வரிசையாக நிற்கும்போது ஒரே சமயத்தில் தீபாராதனை செய்வார்கள்.  பதினாயிரக் கணக்கான மக்கள் கன்னத்தில் போட்டுக் கொள்வதைப் பார்ப்பதே  ஒரு அனுபவம்.

தற்போது கோவிலூர் ஆதீனகர்த்தராக ஶ்ரீலஶ்ரீ ராமநாத ஞான தேசிக சுவாமிகள் இனிய இயல்புகள் அமையப் பெற்றவர்.  காளையார் கோவில் ஶ்ரீ அருணாசல சுவாமிகளிடம் பயின்றவர்.  காளையார் கோவில் மடம், சிதம்பரம் கோ.சித.மடாலயம், மதுரை குட்டைய சுவாமிகள் மடாலயம் முதலியவற்றுக்கு ஆதீனகர்த்தாவாக இருந்து நிர்வாக்த் திறன் பெற்றவர்.  காசி யாத்திரை செய்ததோடு பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களையும் தரிசித்தவர்.  இவர்களுடைய ஆளுகையில் கோவிலூர் இன்னும் பெருமிதமுற்றுத் திகழும் என எதிர்பார்க்கலாம்.

கோவிலூரில் நெல்லையம்மன் சந்நிதி எதிரேயுள்ள மகா மண்டபம் சிற்ப விசித்திரங்களுடன் கூடியது.  ஒரே கல்லில் செய்த தூண்களில் அதிசயிக்கும்படியான சிற்பங்களைக் காண்கிறோம்.

ஒரு தூணில் சரஸ்வதி தேவி வீணை வாசிக்க வருகிறாள்.  இன்னொரு தூணில் சாரதை அலங்கார பூஷிதையாக தரிசனம் தருகிறாள்.  ஊர்த்தாண்டவ நடராஜா, அவர் பாதங்களுக்கருகே காரைக்கால் அம்மையார், குடமுழா வாசித்துக் கொண்டே கரங்குவித்த நிலையில் பிரும்மா, மீனாட்சி கல்யாண சிற்பம்.

எல்லாவற்றையும் விட நமது கருத்தைக் கவர்ந்தது, மனத்தை உருக்குவது ஶ்ரீமத் ஆண்டவர் அம்பாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யும் நிலையிலுள்ள சிற்பந்தான்.  வருபவர்களுக்கெல்லாம் சரணாகதி தத்துவத்தை விளக்கும் சிற்பமாக இது விளங்குகிறது.  ஞானத்தை விட பக்தியே எளிது.  பக்தி செய்தாலே முக்தி பெறலாம் என்று நம்மைப் போன்றவர்களுக்கு ஊக்கம் தருவதாக அமைந்திருக்கிறது!  ஆதி சங்கரர் பகவத் பாதாளும் பக்தியினால் இன்னும் எளிதில் ஈசுவர அனுக்கிரகத்தைப் பெறலாம் என்று தானே போதித்தார்.  சாத்திரங்களையெல்லாம் படித்து ஞானக் கடலாக விளங்கினாலும் பக்தியில் தான் இந்தப் பிறவியிலேயே சுகம் இருக்கிறது என்று கூறாமல் கூறுகிறார் ஆண்டவர்.

ஆனந்தி. 


--Geetha Sambasivam (பேச்சு) 08:58, 30 ஜனவரி 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 30 ஜனவரி 2014, 08:59 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,395 முறைகள் அணுகப்பட்டது.