கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 1

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

தவத்திரு நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள்

கோவிலூர் ஆதீனத்தின் வேதாந்தப் பரம்பரையில் பனிரண்டாவது பட்டத்தில் அருளாட்சி செலுத்தும் தவத்திரு நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள் உலக வரைபடத்தில் கோவிலூருக்கு உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தந்த உத்தமராவார்கள்.  வேதாந்தத்தை யாவருக்கும் பொதுவுடமையாக்கிய புதுமைச் சித்தரான கோவிலூர் ஆண்டவரின் மகன் வழியில் ஆறாவது தலைமுறைப்பேரனான நாச்சியப்ப சுவாமிகள் உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய பெருமான் புகழை உலகெலாம் பரப்பும் உறுதி பூண்டவர்.  வேகமும் விவேகமும் கொண்ட சுவாமிகள் வாழ்க்கை வியக்கத்தக்க நிகழ்ச்சிகளின் தொகுப்பாக விளங்குகிறது.

காரைக்குடிக்கு அருகில் உள்ள மானகிரி என்ற சிற்றூரில் 29--5--1923 இல் கோவிலூர் ஆண்டவரின் குடும்பத்தில் மகன் வழியில் ஆறாவது தலைமுறையில் பேரனாகத் தோன்றினார் நாச்சியப்பர்.  மானகிரியில் திண்ணைப்பள்ளிக்கூடத்திலும் காரைக்குடியில் ஶ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவரர் உயர்நிலைப்பள்ளியிலும் கல்வி கற்றார். அடையாறு பெசன்ட் நினைவுப் பள்ளியில் படித்துப் பள்ளி இறுதித் தேர்வை முடித்து, மாநிலக் கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பை முடித்தார்.  அப்போழுது கிடைத்த அறிவியல் அறிவு அவர் வாழ்க்கை சிறக்க உதவி செய்தது.  உலகம் போற்றும் கலாக்ஷேத்ரா நிறுவனத்தை 1936-இல் தொடங்கி நடனக்கலைக்கும் இசைக்கலைக்கும் பெருந்தொண்டாற்றிப் பாரத நாட்டின் கலை வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற அன்னை ருக்மிணி அருண்டேல் அவர்களின் பேராதரவால் சென்னையில் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் பெற்ற நாச்சியப்பர் மேலை நாடுகளுக்குச் சென்று  கற்று அச்சுக்கலையிலும் நிழற்படக் கலையிலும் நிகரற்றவரானார்.  1957-இல் நியூயார்க்கில் நிழற்படக் கலையைக் கற்று 1963 இல் உலகப் புகழ் பெற்ற கோடக் கம்பெனியில் பணியாற்றினார்.  ஜெர்மனியிலும் லண்டனிலும் நிழற்பட நுட்பங்களைக் கற்றார்.  லண்டன், நியூயார்க், டெட்ராய்ட் ஆகிய நகரங்களில் மேடைக்கலை--அரங்க ஒளியமைப்பு ஆகியவை கற்றுத் தேர்ந்தார்.

1944-இல் கலாக்ஷேத்ராவில் தம்மை வளர்த்த ருக்மிணி அருண்டேல் அம்மையாரிடம் நேர்முக உதவியாளராகச் சேர்ந்தார்.  1946-இல்  கலாக்ஷேத்ரா பதிப்பகம் தொடங்கி மரியா மாண்டிசோரி அம்மையாரின் குழந்தைக்கல்வித் திட்டத்துக்கான புத்தகங்களை வெளியிடத் தொடங்கினார்.  1947--இல் கலாக்ஷேத்ராவில் அரங்க நிர்வாகப் பொறுப்பேற்றார்.  ஒளியமைப்பில் புதுமை செய்து புகழ் பெற்றார்.  1953--இல் தம்முடைய 30 ஆவது வயதில் வண்ணப் புகைப்படங்கள் சம்பந்தப்பட்ட பெரிய சோதனைச் சாலையை உருவாக்கிப்புகைப்படக் கலையின் மூலம் விளம்பரக் கலையும்  வளர உதவினார்.  1955 முதல் 1972 முடிய கலாக்ஷேத்ராவின் நிர்வாகக் குழுவில் பெரும்பணி ஆற்றினார்.  குவாலியரில் குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகம், தில்லியில் குமாரசம்பவம், அயல்நாடுகளில் பரதநாட்டியம் என்று உலகம் முழுவதும் கலைப்பணியாற்றச் சென்ற ருக்மிணி அருண்டேல் அவர்கள் குழுவுடன் மேடை நிர்வாகியாகவும், பயண அமைப்பாளராகவும், ஒளியமைப்பு வல்லுநராகவும் சென்று பணியாற்றினார்.  கிழக்கு ஐரோப்பா, இந்தோனேஷியா, காம்போடியா, ஜாவா, பெஜியம், இத்தாலி, சுவிட்சர்லாந்து, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ்,  ஸ்பெயின் என்று உலக நாடுகளில் இவர் கால்படாத இடமில்லை என்று கூறுமாறு கலாக்ஷேத்ராப் பணி செய்தார்.  1979 முதல்1984 முடிய நியூயார்க்கில் அச்சுக்கலை, நிழற்படக் கலை ஆகியவற்றில் வல்லுநர்களாகத் திகழ்ந்த திறமையாளர்களுடன் இணைந்து பணியாற்றி உலகப் புகழ் பெற்றார்.  கலாக்ஷேத்ராவின் மதிப்பு மிக்க தூண்களில் குறிப்பிடத்தக்கவராக விளங்கி, அங்கே மாணவராகவும், உதவியாளராகவும், கலைஞராகவும், அச்சக உரிமையாளராகவும், மேடை நிர்வாகியாகவும், அறக்கட்டளைச் செயலாளராகவும், ஒல்லும்வாரெல்லாம் அறவீனை ஓவாது சொல்லும் வாயெல்லாம் செயவல்லவராகத் திகழ்ந்து , அந்த நிறுவனத்தில் புகழ்க்கொடி பட்டொளி வீசிப் பறக்கச் செய்தார்.

இவ்வாறு சேர்த்த திறமையும் அதிகம்.  சேர்த்த செல்வமும் அதிகம்.  தேடி வந்த புகழும் அதிகம் என்று வாழ்ந்து வந்த சித. நாச்சியப்பரை தவத்திரு நாச்சியப்ப ஞான தேசிகராக்கிக் கோவிலூர் ஆதீனத்துக்குக் கொண்டு வர வேண்டுமென்று அன்னை திருநெல்லையம்மை திருவுள்ளம் கொண்டாள்.  இது இவருடைய வாழ்க்கையின் இரண்டாம் பாகம்.  பொன்னைக் கொடுத்த இறைவன் மெய்ப்பொருளும் கொடுக்க நினைத்தான்.  இந்த ஞான வாழ்க்கைக்குப் பன்றிமலை சுவாமிகள் குறிப்புக் காட்டினார்.

1975 ஆம் ஆண்டில் ஆன்மிகச் செல்வர் டி.எஸ்.பாலகிருஷ்ண சாஸ்திரிகள் நாச்சியப்பரைக் காஞ்சி மாமுனிவரிடம் அறிமுகப் படுத்தினார்.  காஞ்சி முனிவர், "நீ நகரத்தார் இல்லையோ!  கோவிலூரார் குடும்பம் என்கிறாய்.  கோவிலூர் மடத்துடன் சம்பந்தம் வைத்துக் கொள்." என்றார்.  அந்த வாக்கு இருபதாண்டுகளில் பலித்தது.

கல்கியின் திருமகளார் ஆனந்தி ராமச்சந்திரன் அவர்கள் கூறியது போல விதி மாற்றியமைக்கப்பட்டு விட்டது.  கோபால கிருஷ்ண பாரதி பாடியபடி

விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு-- முன்னம்
விட்டகுறை வந்து தொட்டாச்சு

அன்று நந்தனுக்கு நடந்தது இன்று நாச்சியப்பருக்கு நடந்து விட்டது. அதனால் தானே நாச்சியப்ப சுவாமிகள் அமெரிக்காவில் நடராசருக்குக் கோயில் கட்ட எண்ணினார்?  

மக்கள் பிணி தீர்க்கும் இயற்கை மருத்துவராகவும் சிலகாலம் பணியாற்றிய நாச்சியப்பர் மனப்பிணி தீர்க்கும் மருத்துவரானார்.

ஆண்டவர் மரபில் பிறந்த புண்ணியத்தால் மீண்டும் பிரம்ம சபையில் ஆண்டவரே வந்து உட்கார்ந்து விட்டார்.

1995- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் நாள் சிதம்பர செட்டியார் சீதாலக்ஷ்மி ஆச்சியின் திருமகன், ஆண்டவரின் அருட்பேரனாக, வேதாந்த பீடத்தில் வித்தகத் தலைமையேற்று தவத்திரு நாச்சியப்ப ஞான தேசிகராக, மக்கள் போற்ற மனத்துறவும் தவத்துறவும் கொண்டார்.  கோவிலூர் மடத்தின் பொற்காலம் கொற்றவாளீஸரால் எழுதப் பட்டு விட்டது.

"எதிலும் விருப்பமின்றி எவரிடத்தும் பகையில்லாமல், சமநோக்குடன் இருந்துவரும் மகாத்மாவின் பின்னே, அவருடைய பாதத்தின் தூசி என் மீது விழுந்து நான் உய்ய மாட்டேனா என்று ஆவலில் நான் போய்க் கொண்டிருக்கிறேன்." என்று பாகவதத்தில் கண்ணன் கூறியபடி பாரதநாட்டுக்கு இன்னொரு துறவு--தமிழகத்துக்கு ஒரு விவேகானந்தர்-- கிடைத்துவிட்டார்.  சனாதன தர்ம உலகப் பல்கலைக் கழகம் தமிழகத்தில் நிறுவப்பட வேண்டும் என்று இறைவன் தீர்மானித்துவிட்டான்.  கோவிலூர் ஆண்டவர் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் (Koviluur Andavar Deemed University) தமிழகக் கோயிற்கலைகளையும் பண்பாட்டையும் சிவநெறியையும் வளர்க்கும் வகையில் தோன்ற இருக்கிறது.

இவர்கள் ஆற்றி வரும் பணிகள் விளக்கமாக எழுதப்பட்டுள்ளன.

கோவிலூர் ஆதீனம் குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் நாச்சியப்ப ஞானதேசிகர் தெளிவான சிந்தனையோடும் தொலைநோக்குடனும் திட்டங்களை வகுத்துச் செய்து வருகிறார்கள்.

தாம் பட்டத்திற்கு வந்ததும் முதற்காரியமாக, குழந்தைகள் பள்ளி தொடங்கினார்கள்.  சிறு வயது முதலே குழந்தைகள் நல்ல கல்வி கற்க வேண்டும்.  குழந்தைகளே சமுதாயத்தின் பெருமைக்குரிய சொத்து--மூலதனம்--தூண்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையும் குழந்தைகள் பால் பேரன்பும் கொண்டவர்கள்.  ஆதலால் கல்விப் பணியைத் தலையாய பணியாகக் கருதுகிறார்கள்.  ஆகவே தான் இளைஞர்கள் உயர்கல்வி பெற்று உயர்ந்தால் சமூகமும் தானே உயர்ந்து நன்னிலை அடையும் என்பதனால் பெரும் தொகை ஒதுக்கி உதவுகிறார்கள்.

எந்த நாகரிகத்துக்கும் பண்பாட்டிற்கும் அது சார்ந்து நிற்கும் மரபுகளும் கோவில்களும்தான் அடிப்படை.  எல்லா அறங்களும் கலைகளும் கோவிலிற்தான் நடத்தப்பட்டன.  எனவே கோவிலைக் காப்பாற்ற வேண்டும்.  அது சார்ந்த கலைகளைக் காப்பாற்ற வேண்டும்.  கோவில்கள் நடைபெற வேண்டும் எனில் அதற்குரிய சிப்பந்திகளூம் சடங்குகளை நிறைவேற்றுகிற கலைஞர்களும் தேவை என்பதால் நசிந்து வரும் அனைத்துக் கலைகட்கும் புத்துயிர் ஊட்டி வளர்ப்பதற்காகவே கோவிலூரில் கலைகளுக்கான கல்லூரிகள், பெரும் பொருட்செலவில் நடத்தி வருகிறார்கள்.  அவற்றை ஒருங்கிணைத்து ஒரு பல்கலைக் கழகமாக நிறுவ வேண்டும் என்ற கனவும் சாமிகட்கு உண்டு.  அது நிறைவேறும் நாள் அதிக தூரத்தில் இல்லை.

உணவின்றி யாரும் துயர்படக் கூடாது என்ற மனித நேய உள்ளத்தால் ஆதரவில்லாத அனைவர்க்கும் உதவி வருகிறார்கள்.  நமது பெண்கள் திருமணம் ஆகாமல் இருந்தால் சமுதாயமே நசிந்துவிடும் என்ற உனர்வால் பெண்கள் திருமணத்திற்கு தாராளமாக உதவுகிறார்கள்.

கோவிலூர் சார்ந்த எல்லா மடங்களும் தற்சார்புடையதாக, சொந்தக்காலில் நிற்கக் கூடியதாக காலகாலத்திற்கும் வளர்ந்து உயரக்கூடிய நிலையில் இருக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தினால் எல்லா மடங்களிலும் திருமண மண்டபமோ, கடைகளோ கட்டி நிரந்தர வருவாய்க்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

எல்லா மடங்கட்கும் வருகின்ற அன்பர்கள் தங்கித் தரிசிக்கவும் உணவு உண்ணவும் வசதியான தங்கும் அறைகள் கட்டி எல்லா மடங்களிலும் அன்னதானம் நடைபெறவும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

மடத்தைச் சார்ந்த, மடத்தின் பொறுப்பில் உள்ள கோவில்கள், அதிஷ்டானங்கள் யாவற்றையும் ஒவ்வொன்றாகச் செப்பனிட்டு புதிய மெருகுடன் வசதிகளையும் கூட்டிக் கும்பாபிஷேஹங்கள் செய்து வருகிறார்கள்.  ஒவ்வொரு கோவிலும் பனிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறைஅ பழுது நீக்கவும் கும்பாபிஷேஹங்கள் நடத்தவும் வேண்டுமென அருள் ஆணை இட்டுள்ளார்கள்.

கோவிலூரை ஒரு கல்வி நகரமாக ஆக்கப் பெரிதும் விருப்பம் கொண்டுள்ளார்கள்.  செய்யும் எதனையும் செம்மையாகச் செய்ய வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ளவர்கள் ஆதலால், தரமான கல்வி தந்து இளைஞர்கட்கு ஏற்றம் தர வேண்டும் என்பதில் மிகவும் குறியாக உள்ளார்கள்.  அவர்கள் கனவுகள் மிகவும் பெரியவை, சிறந்தவை, அவை யாவும் நிறைவேற ஆண்டவர் அருள் பாலிக்க வேண்டும்.

சீர் வளர் சீர் நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள் பொருள் உதவியால் நடைபெற்று வரும் பணிகள் தொடர்ந்து தரப்பட்டுள்ளன.                        


--Geetha Sambasivam (பேச்சு) 10:48, 16 டிசம்பர் 2013 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam மற்றும் Vinodh

இப்பக்கம் கடைசியாக 17 டிசம்பர் 2013, 21:25 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,137 முறைகள் அணுகப்பட்டது.