அருள்மிகு விநாயகர் திருக்கோவில் - சிவகங்கைமரபு விக்கி இருந்து(அருள்மிகு விநாயகர் திருக்கோவில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அருள்மிகு விநாயகர் திருக்கோவில் - பிள்ளையார்பட்டி.
மூலவர் : விநாயகர்
தேர்த்திருவிழா : விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒருசில இடங்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகருக்கும், சண்டிகேசுவரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும். பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும் மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செல்வர். சண்டிகேசுவரருக்கான தேரை பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வர். தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வர். இத்திருவிழா 9ம் நாள் நிகழ்ச்சியாக நடக்கும். 9ம் நாள் விழாவான தேர்வலம் வரும் அதே நேரத்தில் மூலவருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவதால் அக்காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். மகா அபிஷேகமும் நடத்தப்படும். ராட்சத கொழுக்கட்டை: ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியன்று உச்சிகால பூஜையின் போது விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட பெரிய அளவிலான ஒரே கொழுக்கட்டை தயாரித்து நைவேத்யம் செய்வர். இது மிகவும் சிறப்பு பெற்றதாகும். 18 படி அரிசியை மாவாக்கி, எள் 2 படி, கடலைப்பருப்பு 6 படி, தேங்காய் 50, பசுநெய் 1 படி, ஏலம் 100 கிராம், வெல்லம் 40 கிலோ ஆகியவற்றை சேர்த்து ஒரே கலவையாக்கி, உருண்டை சேர்த்து அதனை துணியால் கட்டி, மடப்பள்ளியில் அன்னக் கூடையில் வைத்து கட்டுவார்கள். தண்ணீர் நிரப்பப்பட்ட அண்டாவினுள் இறக்கி அதன் அடிப்பகுதியில் படாதவாறு தொங்கவிட்டு மடப்பள்ளி முகட்டில் கயிற்றால் கட்டி விடுவர். பின்னர் அது, அந்த பெரிய அளவிலான பாத்திரத்தில் 2 நாள் தொடர்ச்சியாக வேக வைக்கப்படும். பின்னர் இது உலக்கை போன்ற கம்பில் கட்டி பலர் சேர்ந்து காவடி போல தூக்கி வந்து மூலவருக்கு உச்சிகால பூஜையில் நிவேதனம் செய்வர். மறுநாள் கொழுக்கட்டை சூடு ஆறிய பின்னர் நகரத்தார், ஊரார்கள் மற்றும் பணியாளர்களுக்கு பிரித்து உண்ணக்கொடுப்பர்
சத்தியமாகிய பரம்பொருளை சிந்தித்தால் உள்ளத்தில் ஒளி பிறக்கிறது. உலகில் வாழ்வதற்கு ஒரே ஒரு மார்க்கம் தான் உண்டு. அது கடவுளிடம் பயமும் பக்தியும் கொண்டு நல்லவனாக வாழ்வது மட்டுமே. தேதி - 19 - 03 - 2011. நன்றி - தின மலர். |
