அன்றொரு நாள்: ஜூலை 11 & டிசம்பர் 15, 1971மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான் நல்ல விஷயங்களை உடனுக்குடன் சொல்லிவிடுவது தான் அழகு. காலம் போறப்போக்கில், யார் கண்டா, சொல்லுங்கோ? மண்ணாசை. பிறந்த மண்ணாசை. தூலியை தலையில் ப்ரோக்ஷணம் செஞ்சுக்கணும். 81 வயசிலே அப்படி ஒரு ஆசை. கை கூடி வந்ததே. அந்த ப்ராப்தத்தை சொல்லணும்லெ. அன்னிக்கு சொந்த மண்ணு. இன்னிக்கு அயல் தேசம். பாஸ்போர்ட், வீஸா, லொட்டு, லொசுக்கு, மண்ணாங்கட்டி எல்லாம் ஏற்பாடு பண்ணித்தரா, ஃப்ரெண்ட்ஸ். முன்னை பின்னத் தெரியாத பெரிய மனுஷன் ஒத்தர் முகமன் கூறி கனிவுடன் வரவேற்று, உபசாரங்கள் பல செய்து, ஸர்கோடா சொந்த மண்ணுக்கு கிழவரை அழைத்துச்செல்கிறார். பிறகு தன் வீட்டில் வைத்து விருந்து. செல்வாக்கானா ஆசாமி போல. புருஷன், பொண்டாட்டி, பசங்க, பந்து ஜனங்கள், ஊழியம் செய்வோர், எல்லாருமா, இப்படி கண்ணும், கருத்துமா! எல்லாம் நன்னாருக்கு. ஆனா, ஒண்ணு புரியலே. எதுக்காக, இப்படி விழுந்து, விழுந்து கொண்டாடரா? ஊருக்கு திரும்பற நாளும் வந்துடுத்து. வர, வர, பேச்சுக்குறையறது. நீண்ட மெளனங்கள். எதுக்கு இவ்வாத்து பொம்மனாட்டியெல்லாம் என்னை இப்படி கருணைக்கடலா, வெல்லப்பாகாக உருகிப்போய் பாக்கறா! இனம் தெரியாத அழுகைன்னா வரது.
பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசர்: ஐயா! எப்படி சொல்வேன்? விதி விளையாடுகிறது! நாமோ அன்யோன்யாமாகிவிட்டோம். சொல்லமுடியாமல் என் நெஞ்சு அடைக்கிறது. அருண் மாவீரன். அன்று (டிசம்பர் 15, 1971) தன்னுடைய டாங்கியுடன், அச்சம் தவிர்த்து, ஆவேசம் மூண்டு, இம்மை மறந்து, ஈட்டி போல் பாய்ந்து, எங்கள் படைகளை அதகளமாக்கினான். இருபக்கமும் பயங்கர உயிர்ச்சேதம். தளவாடங்கள் நொறுங்ககிக்கிடந்தன. நாங்கள் இருவர் மட்டும். எதிரும் புதிருமாக. பகையாளி. ஒரே க்ஷணத்தில் இருவரும் சுட்டோம். நான் இருக்கிறேன். அதான் பார்க்கிறீர்களே.
‘போர்க்களம் நிறுவவது அரசியலர்; அதிகார மையங்கள் போர்க்களங்களை கிளறுகின்றன. போராடுவது, சிப்பாய்!’
‘... 13 லான்ஸர்ஸ்: பாகிஸ்தான் ராணுவம்: நாங்கள் ‘பர்ராபிண்ட்’ என்கிறோம். இந்தியாவின் பூனா புரவிகள் படை ‘பஸந்தர்’ என்கிறது. அந்த யுத்ததில் மலை போல் நின்று உயிர் தியாகம் செய்த ஷஹீத் இரண்டாம் லெஃப்டினண்ட் அருண் க்ஷேத் ரபாலுக்கு வீரவணக்கம்....’ பால்மணம் மாறாத இளைஞன் தான். இனி எழுத எனக்கு திராணியில்லை.
இன்னம்பூரான் ஜூலை 11, 2011
உசாத்துணை: http://indianarmy.nic.in/Index.aspx?flag=LfcULYFlbeQ=
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:01, 12 ஜூலை 2011 (UTC)
|

