அன்றொரு நாள்: ஜூன் 15

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 


இன்ன்மபூரான்


தனிமையின் தனிமை


உளவியல் அறிவுரை வழங்க கோடானு கோடி வல்லுனர்கள் உளர், மனிதஜன்மம் எடுத்த யாவரும் தம்மை அவ்வாறு பாவித்துக்கொள்வதால். ஆனால், ‘நீ யார்?’ என்று மனோதர்ம ரீதியில் கேட்டு விட்டால், குழம்புவார்கள், குழப்புவார்கள். அதற்காக ‘ஆதி சங்கரர் vs சண்டாளன்’ போன்ற ஆத்மவிசாரணைக்குப் போகவேண்டியதில்லை. மனதுடன் மனம் விட்டு (எத்துடன், எதை விட்டு?) பேசினாலே போதுமானது. அது இயலாததால், பெரும்பாலோருக்கு identity crisis (தனிமை குளறுபடி) ஏற்பட்டு விடுகிறது என்று முதல் முதலாக கூறி, உயர்தர மனோதத்துவ ஆய்வுக்கும், ஆலோசனைக்கும் வித்திட்டவர் எரிக் எரிக்ஸன் என்ற பிரபல மனோதர்ம ஆலோசகர். அவரின் ஜன்ம தினம் இன்று ( 15 06 1902). தன்னுடைய தந்தை யார் என்று தெரியாமல் பால்ய பருவத்தில், பற்பல தர்மசங்கடங்களின் இடையே, திரிசங்கு போல, வளர்ந்த எரிக் எரிக்ஸன் குழந்தைகளின் மன வளர்ச்சியை பற்றியும், மனிதனின் வாழ்வில் தலையிடும் எட்டு படி நிலைகளையையும் செவ்வனே ஆராய்ந்து செப்பியதும், அந்த ஆய்வு உலக அளவில் பிரபலம் ஆனதும் குறிப்பிட வேண்டிய செய்தி.

அவர் இந்த பணிக்கு வந்த விதமே விந்தையானது. மருத்துவம் படிக்க விருப்பமில்லாமல், வியன்னாவுக்கு வந்து குழந்தைகளின் சித்திரம் வரையும் ஓவியராக வாழ்க்கையை தொடங்கினார். அருகில் இருந்த ஹைட்ஸிங் பள்ளியை நடத்திய டொரொதி பர்லிங்க்டன், உலகின் முதல் மனோதத்துவ நிபுணரான சிக்மண்ட் ஃப்ராய்டின் பெண்ணும் மனோதத்துவ வாரிசும் ஆன அன்னா ஃப்ராய்டின் தோழி. அந்த பள்ளியும் சிக்மண்ட் ஃப்ராய்டின் மனோபல கோட்பாடுகளுக்கு உகந்தவாறு, அவரது நண்பர்களின்/ உதவி நாடுபவர்களின் குழந்தைகளுக்காக, நடத்தப்பட்டது. குழந்தைகளை இவர் ஆகர்ஷிக்கும் விதம் கண்டு, அன்னா ஃப்ராய்டு, இவரை சகபாடியாகவும், சீடராகவும் ஏற்றுக்கொண்டு, அவரை மனோபலத்துறையில் (psychoanalysis) ஈடுபடுத்தினார். காலம் போக, போக, ஹிட்லரின் ஆதிக்கம் மிகவே, யூதப் பின்னணியுடைய எரிக்ஸன், கோபன்ஹேகனுக்கும், பிறகு அமெரிக்காவுக்கும் புலன் பெயர்ந்தார். அமெரிக்காவில் டாக்டர் பட்டம் இல்லாததால், இவருக்கு எளிதில் நல்ல வேலை கிடைக்கவில்லை. ஹார்வேர்ட்/யேல் பல்கலைக்கழகங்களில் சில காலம் சிறிய வேலைகளில் காலம் ஓட்டி விட்டு, வியன்னா உறவுகளின் நற்பயனாக, உலகப்புகழ் பெர்க்லீ கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததின் பயனாக, இவருடைய புகழ் பரவியது. ஆலோசனை நாடுபவர்கள் அதிகரித்தனர். அமெரிக்க லக்கோட்டா, யூரோக் பழங்குடி சிறார்களிடம் பிரமாதமான ஆய்வுகள் நடத்தினார். மனிதவியல் நிபுணர்களான ஃப்ரான்ஸ் போ, ரூத் பெனெடிக்ட், மார்கெரெட் மீட், கெரகெரி பேட்ஸன் போன்ற ஜாம்பவான்களின் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு, வியன்னாவில் கற்றதை அடித்தளமாக வைத்துக்கொண்டு அவர் செய்த ஆய்வுகளை விண்ணளாவ புகழ்ந்தாலும் தகும்.

அவற்றின் சாராம்சம்: ஸிக்மண்ட் ஃப்ராய்ட் அடித்துச் சொன்ன சுயகெளரவமும், பாலின ஆகர்ஷணமும் முக்கியம் என்றாலும், மனிதன் வாழும் சமுதாயமும், கலாச்சாரமும், சம்பிரதாயமும், அவை விதிக்கும் நடைமுறை, இலக்கு வகையறாவும், மூளைச்சலவையும் ‘நாலு பேர் என்ன சொல்லுவா?’ இணக்கமும்/ பிணக்கமும், குழந்தைகளின் மனதை மிகவும் பாதிக்கின்றன. அவற்றிலிருந்து விடுதலை பெறுவது எளிதல்ல. அவை, அந்த குழந்தைகள் வளர்ந்து தாத்தாவான பிறகும், அவர்களின் மனநிலையையும், உடல் வளர்ச்சியையும் தொடர்ந்து பாதிக்கும்.

எனினும், ஒரு எட்டு படிநிலை நடைமுறை தத்துவத்தையும், தன் ஆய்வின் பயனாக, அவர் முன் வைத்தார்.


நம்பிக்கை vs அவநம்பிக்கை;
தன்னிச்சை vs ஐயமும், அவமானமும்;
முனைந்து செய்வது vs குற்ற உணர்வு;
உழைப்பு vs சிறுமை உணர்வு;
தனித்துவம் vs தனித்துவ குழறுபடி;
அன்யோன்யம் vs தனிமை;
படைப்பாற்றல் vs உளைச்சல்;
நாணயம் vs தடுமாற்றம்.


இவை யாவையும் சீர் தூக்கி, சமன் படுத்தி, வாழ்ந்தால் தான், நிறைவு கிடைக்கும். உதாரணமாக, நம்பிக்கை அடிப்படையில் இல்லாத இல்லறம் பாழ்; ஆனால், மொஃபஸ்ஸில் ஸ்டாண்டில் விபசாரத்துக்கு ஆள் பிடிக்கும் பாட்டியை நம்பினால்!

‘தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும்.’

ஃப்ராய்டு ஐந்து வயதிற்குள் வளராத ஆளுமை (personality) பிறகு வருவதற்கில்லை என்றார். நம் எரிக்ஸனோ, ஆளுமை வளர்ச்சி வாழ்நாள் முழுதும் நடைபெறுகிறது; ஒவ்வொரு இன்னலும், தீர்வும் பாடம் கற்பிக்கின்றன. அவை தொடராக வருவதால், அவை கூடி வருகின்றன என்று தீர்மானமாகக் கூறினார். இன்றளவும், இந்த கோட்பாட்டை, மனோதத்துவ நிபுணர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். வயது வந்தவர்களின் கோளாறுகளை ஓரளவு தணிக்கவோ, இயலாது என்றால் மாற்று நிவாரணங்கள் தேடும் உத்திகளை அளிக்கவோ, இது உதவுகிறது. குழந்தைகள் மனவளர்ச்சியை பற்றி சிறந்த ஆய்வு செய்த மற்றொருவர் ழான் பியாஜே. அவரை பற்றி பிறகு பார்க்கலாம். நேற்று கணித சாத்திரம் பற்றி எழுத விழைந்தேன். இன்று மனோதத்துவத்தை நாடுகிறது என் மனம். இந்த படிநிலை என்ன? (+)? /(-)?

இந்த பழவினை இருக்கிறதே? அதை என்ன செய்ய? எரிக்ஸனுக்கும், அவரது மனைவிக்கும் வேலை பளு எக்கச்சக்கம். ஒரு மகனுக்கு (நீல் எரிக்ஸன்), பிறவியிலேயே மன/உடல் நிலை பாதிப்பு. டாக்டர்கள் அவன் ஓரிரு வருடங்கள் தான் வாழ்வான் என்றார்கள். அவனை ஒரு ஆஸ்பத்திரி போன்ற மையத்தில், ஹூம், தள்ளி விட்டார்கள். அவன் 21 வருடங்கள் வாழ்ந்தான். அதனால், வீட்டில் தர்க்கங்கள். ஆனால் பாருங்கள். அவரும் சரி, அவரது மனைவியும் சரி. தங்கள் இல்லத்து அவலத்தையும் ஒரு நடுநிலை அணுகுமுறை மூலமாக, ஆய்வுக்கும் பயன் படுத்தினர். இன்றளவும் போற்றப்படும், இவரது ‘குழந்தைப்பருவமும், சமுதாயமும்’ என்ற நூலில், இந்த துரதிர்ஷ்டத்தின் எதிரொலியை காணலாம், என்கிறார்கள் விமர்சகர்கள்.

அந்த நூல் பிரபலம் ஆகும் போது, ஒரு இன்னல். கம்யூனிசத்தின் கம்சன் ஆன மக்கார்த்தி என்ற கெடுபிடி பித்தனின் வேட்டைக்கு அஞ்சி, எல்லாரும் ஒரு அசத்திய பிரமாணம் எடுத்துக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டர்கள். அதற்கு உடன்பட மறுத்து, இவர் வேலையை உதறிவிட்டார். இவர் எழுதிய நூல்கள்:


Childhood and Society (1950, psychology)
Young Man Luther (1958, psychology)
Insight and Responsibility (1964, psychology)
Identity: Youth and Crisis (1968, psychology)
Gandhi's Truth (1969, psychology)
Dimensions of a New Identity (1974, psychology)
Life History and the Historical Moment (1975, psychology)
The Life Cycle Completed (1987, psychology, with J.M. Erikson)


அவற்றில் முதல் நூல் உலகுக்கு மாபெரும் வரவு. நான்காவது நூல் தான் இன்றைய உப தலைப்பின் முதுகெலும்பு. அதன் முன்னோடி இரண்டாவது நூல். நியாயமாகப் பார்க்கப்போனால், நாலு வரி எழுதி விட்டு அகலும் சின்ன விஷயம் அல்ல, அது. ஆனால், பக்கம், பக்கமாக எழுதினால், வாசகர் ஓடி விடுவார்.

சுருக்கமாகச் சொன்னால்: ‘தனித்துவம்’, ‘தனித்துவ குளறுபடி’ என்ற சொற்களை முன் கொணர்ந்த எரிக்ஸனின் இது சம்பந்தமான முதல் ஆய்வு, போர்க்களத்திலிருந்து, துணிவுடன் போராடியும், மனம் குலைந்து திரும்பிய வீரர்கள். அதற்கு காரணம் அவர்கள் பயந்து போனதோ, பாசாங்கோ அல்ல; அவர்கள் போறின் க்டுமையினால் தாக்கம் அடைந்து, சுய உணர்வு தன்மையையும், வரலாற்றை புரிந்து கொள்ளும் திறனையும் இழந்து விட்டது தான் காரணம். அதற்கு மறு பெயர் ‘தனித்துவ குளறுபடி’. தற்காலம் அதை post traumatic stress syndrome என்கிறார்கள். ஐந்தாவது நூல் அருமையானது. அண்ணல் காந்தியை முன்வைத்து எழுதப்பட்ட மனோதர்ம சாத்திரம். அதற்கு புகழ் வாய்ந்த புலிட்ஸர் (நம்ம சைண்ட் லூயிஸ் பேட்டைக்காரர்) விருதும், தேசீய விருதும் கிடைத்தன. 91 வயது வரை வாழ்ந்த எரிக்ஸன் உறங்கும்போது, 12 மே 1994 அன்று மீளாத்துக்கத்தில் ஆழ்ந்து விட்டார்்.

இன்னம்பூரான்

15 06 2012

http://img.docstoccdn.com/thumb/orig/103696035.png


உசாத்துணை:

http://www.nndb.com/people/151/000097857/










--பவள சங்கரி திருநாவுக்கரசு. 06:31, 16 ஜூன் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_ஜூன்_15&oldid=11019" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 16 ஜூன் 2012, 06:31 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,794 முறைகள் அணுகப்பட்டது.