அன்றொரு நாள்: ஏப்ரல் 25

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இன்னம்பூரான்


 அகமும், புறமும்: பாஜி! பாஜி!


பேஷ்வா, திவான், ராயசம், மந்திரி, அமைச்சர் என்ற சொற்கள் மேலாண்மை செய்வதைக் குறிக்கின்றன எனலாம். வெண்குடை மன்னனின் செங்கோல் வளையாமல் இருப்பதற்கும், ஆராய்ச்சி மணியடித்தால், ஓடோடி வந்து நீதி வழங்கவும்,’...நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப் பாவை நின்று அழுஉம் பாவை மன்றத்தின்’ கருத்து அறிந்து இயங்கவும், ‘...புடைத்துஉணும் பூதசதுக்கத்தின்’ தொண்டு தொடங்கும் முன் வருமுன் காப்போனாக இயங்கவும், சிறப்புற ராஜ்ய பரிபாலனம் செய்யவும், மக்கள் நலம் காக்கவும், தேச அபிவிருத்தி செய்யவும், காவற்காட்டை பாதுகாத்து, அகழாழம் கவனித்து, எயில் காத்து, பகையை விரட்டவும், இத்தகைய நிர்வாகத் தலைமை தேவை. ராணுவத்தலைமையையும் ஒருவரே வகித்தால், இரட்டிப்பு பயன், எந்த நாட்டிலும். சத்ரபதி சிவாஜி மஹராஜ் கொடுத்து வைத்தவர். அவருக்கு வழி வகுத்த பேஷ்வா பாஜி ராவ் 1 அவர்களை பற்றி, இரண்டாம் உலகப்போரில் தலைமை வகித்த ஃபீல்ட் மார்ஷல் மாண்ட்கோமரி எழுதினார், ‘பாஜி ராவ் 1 தோல்வியே காணாத ஜெனெரல்’ என்று. அவரது யுத்தத்தந்திரங்களையும், போர் வீரத்தையும், தளபதித் திறனையும் நெப்போலியனுடன் சில சரித்திர பேராசிரியர்கள் ஒப்புமை செய்தனர். (விக்கிப்பீடியா அவரது நினைவு தினத்தை இன்றும் [ 25 04 1740] என்றும், 28 04 2012 என்றும் கூறுகிறது! ஜனித்ததோ, கர்நாடகமான, ஆன்மிகம் நாடும், நிம்மதி தேடும் அந்தணர் குலம். மின்னல் தாக்குதலோ ஐயாவுக்கு கை வந்த கலை. அரண்மணை என்றால், ‘திண்டு மந்திரங்கள்’ இல்லாமாலா? சிவாஜியின் தந்தை ஷாஹூஜீயிடம் கோள்கள் ஓதப்பட்டன. அவர் அவற்றை புறக்கணித்து விட்டார். அதுவும் சிவாஜியின்/ இந்தியாவின் பாக்கியம். ஆனால் மாட்சிமை பொருந்திய இந்திய அரசு அவருக்கு தபால் தலை சிறப்பு அளிக்க எத்தனை சுணக்கம் காட்டியது தெரியுமா? வெட்கக்கேடு!

எத்தனை பேர்கள் கவனித்தார்கள் என்று அறியேன். ஏப்ரல் 14 அன்று, ‘...இந்த ஜாலியன்வாலா நந்தவன நிகழ்வு ஏப்ரல் 13, 1919 அன்றைய தனி ஓலம் அன்று. அந்த ஆலங்கன்றின் நுண்ணிய வித்து என்றோ விதைக்கப்பட்டது; கும்பினிக்காரன் வந்த சில வருடங்களுக்குள் சுதந்திர தாகம் நெஞ்சை உலர்த்தியது; ஒளரங்கசீப் காலத்திலியே உரமிடப்பட்டது...’ என்று எழுதினேன். ஆம். மராத்தியரின் வீராவேசம், பாஜி ராவ்1 அவர்களின் தளபதி நிர்வாஹம், சத்ரபதி சிவாஜி மஹராஜின் தேசாபிமானம், அதற்கு அவரது அன்னையிட்ட உரம், சமர்த்த ராமதாஸர் அவர்கள் சிவாஜியின் குருமஹராஜ் ஆனது, பவானி தேவியின் அருள் எல்லாம் தான் அந்த நுண்ணிய வித்தை விதைத்த நிகழ்வுகள். மராட்டிய மகிமைக்குக் காரணகர்த்தா பாஜி ராவ் 1 அவர்கள். இத்தனைக்கும், ஒரு காலகட்டத்தில் முகலாயரிடம் அடைப்பட்டுக்கிடந்த ஷாஹூஜி, கொஞ்சம் முட்டுக்கட்டை போட்டார்.

பாஜி ராவ் 1 அவர்களுக்கு தந்தையிடம் நல்ல பயிற்சி, ராஜாங்கம், ராஜதந்திரம், சேனாதிபதி திறன், திட்டமிடுதல், நாணய நிர்வாஹம் எல்லாவற்றிலும். சுற்றி வர பகை -நைஜாம், மற்ற மராத்திய குறுநில மன்னர்கள், ராஜபுத்திரர்கள், மொகலாய சாம்ராஜ்யம். இவருடைய அணுகுமுறையோ, புண்டல்கண்டு அரசனோடு சேர்ந்து, முகலாயரை தோற்கடிப்பது; முகலாயருடன் சேர்ந்து, புண்டல்கண்டை வீழ்த்துவது! போர்ச்சுகீஸை அடித்து, ஆங்கிலேயனை பயமுறுத்தி செய்து கொண்ட ஒரு தலைபக்க உடன்படிக்கைகளால், இந்தியாவில் மேற்கே மராத்திய சாம்ராஜ்யம் கோலோச்சியது. அவரது சிந்திக்கும் மனமும், உழைக்கும் கரங்களும் தான், இதற்கெல்லாம் காரணம்.
விதி யாரை விட்டது? என்ன ஹாம்லெட்-ஒஃபீலியா? என்ன லைலா மஜ்னூ? என்ன அம்பிகாபதி-அமராவதி? எங்க பாஜி ராவ் அவர்களின் மனைவி ஒரு பேரழகி. முஸ்லீம் வம்சாவளி. இருவரும் காதலால் பிணைந்தவர்கள். அதற்கு ஈடாகாது, பரம்பரை காதல் கற்பனைகள். யாரும் படிக்கிறதாகத் தெரியவில்லை. அதான் சொல்லல்லை!


இன்னம்பூரான்
25 04 2012
http://www.mediabd.com/store_images/stamps/4/179.jpg


உசாத்துணை:
http://www.savarkar.org/content/pdfs/en/hindu-pad-padshahi_savarkar_en_v001.pdf





--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:34, 26 ஏப்ரல் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_ஏப்ரல்_25&oldid=10885" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 26 ஏப்ரல் 2012, 02:34 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,740 முறைகள் அணுகப்பட்டது.