மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்:031

மரபு விக்கி இருந்து

(மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் - 031 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

வெங்கட் சாமிதான்


இது காறும் நான் எழுதிவந்தவற்றுக்கு அவ்வப்போது வரும் எதிர்வினைகளைப் பார்க்கும் போது தெரிவது என்ன?, இதை நான் ஆரம்பத்திலிருந்தே அனேகமாக ஒரு வருட காலமாகத் தொடர்ந்து வரும் கருத்துக்களில், தொனிகளில் கவனித்து வருகிறேன் பல அபத்தமான கருத்துக்களை அவை அப்போதைக்கு கிளுகிளுப்பூட்டுவதால் சற்றும் யோசிக்காமல் சந்தோஷமாக உள்வாங்கிக்கொண்டு பின் அந்தக் கிளுகிளுப்பை உதற மனதில்லாமல் ஏதோ மதம் போல, அந்த அபத்தத்தை ஏதேதோ சால்ஜாப்புக்கள் சொல்லி இறுகப் பற்றிக்கொண்டிருக்கத் தான் தோன்றுகிறது. ”சினிமா என்னத்துக்கு இருக்கு?. நாள் பூராவும் உழைத்து ஓய்ந்து வரும்போது மனதுக்கு சந்தோஷம் தரும் பொழுது போக்கு தானே? என்று. இந்த பாமரப் பைத்தியக்காரத்தனத்துக்கு சினிமா தயாரிப்பாளர்களிலிருந்து தொடங்கி சினிமா பெஞ்ச் ரசிகன் வரை எல்லோரும் நியாயம் கற்பிக்கிறார்கள். இந்த அபத்தத்திற்குக் கலை என்று ஒரு லேபிளும் ஒட்டி அறிவு ஜீவிகளும், அதிகாரமும் பத்திரிகையாளரும் அதற்கு சப்போர்ட்டு கொடுக்க மிக சௌகரியமான சாக்காகக் காண்கிறான் ரசிகன். இதை பெஞ்ச் ரசிகன் மாத்திரம் சொல்லவில்லை. ரூபாய் 200-ஓ 500-ஓ கொடுத்துக் காரில் குடும்பத்தோடு வரும் அதிமேதை பணக்காரன் கூடத் தான்.இந்தப் பைத்தியகாரக் கூத்தாட்டத்திற்கு கலை என்று வேறு லேபில் கொடுத்தால் வேண்டாம் என்கிறதா என்ன சம்பந்தப்பட்ட யாருக்கும்?


கலை என்பது சர்க்கஸாகியிருக்கிறது.. மாயாஜாலக் காட்சியாகியிருக்கிறது. ரிகார்ட் டான்ஸாகியிருக்கிறது. ஒவ்வொருத்தனும் தன்னைக் கலைஞர் என்றும் என்னென்னமோ சிகரம், மேதை, திலகம், ஞானி, என்று ஒரு ஒளி வட்டத்தை கற்பனை செய்து கொள்கிறான்.


இந்தக் கூத்தாட்டத்தையெல்லாம் செய்து கொண்டே, இதன் அபத்தத்தையும் அவ்வப்போது போட்டு உடைக்கும் ஒரே ஜீவன் தனுஷைத்தான் பார்க்க.முடிகிறது. அப்படிச் சொன்னாலும் தனுஷ் குத்தாட்டம் போடுவதையோ, பத்து குண்டன்களை சும்மா காலை உதறி, கையை வீசித் திரும்பத் திரும்ப விழுத்தாட்டும் காரியங்களை செய்ய மறுப்பதில்லை. மாமனார் செய்யும் விரலை அசைத்து ரம்பம் அறுக்கும் ஒலிப்பதிவோடு தன் வீராப்பைக் காட்டத் தொடங்கவில்லை (தமிழ் சினிமா டெக்னிக்கில் உலகத்தரத்துக்கு உயர்ந்துள்ளதற்கான சாட்சியம் இந்த விரலைசைப்பும் ஒரு காலை எடுத்து ஒரு ராஜ கம்பீரத்தின் பாவனையுடன் இன்னொரு காலின் மேல் ஒரு வீரப் புன்னகை பூத்து ,போடுவதும், அதெல்லாம் ரம்பம் அறுக்கும் ஒலி பின்னணியில் இருக்க வேண்டும். உலகத்தில் எந்த நாட்டிலும் எந்த மொழியிலும் இந்த மாதிரி டெக்னிக்கைக் காணமுடியாது,. இது தமிழ் சினிமா மூளையின் கண்டுபிடிப்பு. அவர்கள் காபிரைட். சிம்புவும் அதேபோல செய்ய ஆரம்பித்தாயிற்று.


.இன்னும். ”இதையெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். செய்கிறேன்” என்று சொல்லி உதறும் நிதானம், புத்தி விவேகம் தனுஷிடமிருந்து போய்விட வில்லை. உலக நாயகனிடமோ அல்லது வேறு யாரிடமோ இந்தப் பேத்தல் காரியங்களை பேத்தல் என்று ஒப்புக்கொள்ளும் விவேகமும் வேளையும் இன்னும் வரவில்லை. சமீபத்தில் தான் பாலுமகேந்திராவின் படம் ஒன்று பார்த்தேன். அது ஒரு கனாக் காலம் என்று நினைக்கிறேன். அதில் தனுஷ் பாலு மகேந்திரா சொன்னதைச் செய்யும் நேர்மையைப் பார்த்தேன். அதை நம் தமிழ் நடிகர்கள் வேறு யாரும் செய்திருக்கமாட்டார்கள். தன் இமேஜ் என்று ஒன்று இருப்பதாகவும், தன் ரசிகர்கள் இதை ஏற்கமாட்டார்கள் என்றும் சொல்வார்கள். தனுஷுக்கு அந்தக் கவலையெல்லாம் ஏதும் கிடையாது. “என் முகத்தைப் பாத்து எவளாவது……..” என்று தொலைக் காட்சியில் வெளிப்படையாகப் பேசும் ஒரு தமிழ் சினிமா நடிகனை, “அம்மா நீங்கள்ளாம் பெரிய பெரிய இடததைச் சேந்தவங்க., நான் ஏதோ சாதாரண……”என்று ஐஸ்வர்யாவைப் பார்த்து மேடையிலேயே சொல்லும் கணவனையும் நடிகனையும் முதல் தடவையாக தமிழ் சினிமாவில், தொலைக்காட்சியில் பார்க்கிறோம். நினைத்துப் பார்க்கலாம். இந்த வார்த்தைகளை, தனுஷ் நடிக்கும் ரோல்களை, வேறு எந்தத் தமிழ் நடிகரிடமிருந்தும் எதிர்பார்க்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. கார்த்திக் எப்போதும் தரித்திருக்கும் அந்தச் சிரிப்பு, சிம்பு பேசும், முகத்தை வைத்துக்கொள்ளும் பாவனைகள், தன்னைப் பற்றி வளர்த்துக்கொண்டிருக்கும் பிம்பங்கள் ஜெயம் ரவியின் அங்க சேஷ்டைகள் எதுவும் சகித்துக்கொள்ள் முடிவதில்லை. இவர்களை இந்தத் தலைமுறையினர் என்பதால் சொல்கிறேன். இவர்கள் தனித்து நிற்பவர்கள் இல்லை. எல்லோருக்கும் அவரவரது அலட்டல்கள், ஒளிவட்டம் ஒன்று தலைக்கு மேலும் பின்னும் சுழல்வதான பிரமைகள், சிவாஜி கணேசனிலிருந்து தொடங்கி தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருகிறது.


சோகம் என்னவென்றால், இவர்கள் எல்லாம் வேறு வித சூழலில், சமுதாயத்தில், சினிமாக் கலாசாரத்தில், இப்படியான பிரமைகளில மூழ்கிக் கிடந்திருக்க மாட்டார்கள். பாரதி படத்தில். செல்லம்மாளாக நடித்த தேவயானியிடம், glamour girl- ஆகவே தமிழ் சினிமாவில் அது வரை வாழ்ந்துவிட்டவரிடம் இந்தச் செல்லம்மாள் ஒளிந்து கொண்டிருப்பதை யார் எதிர்பார்த்திருக்க முடியும்?. பாரதி படம் முடிந்ததும் அவர் மறுபடியும் ஆடிப்பாடி வசனம் பேசப் போயாயிற்று. இப்படி எத்தனை பேர் இருக்கிறார்களோ தமிழ் சினிமாவில். கமலஹாசனைச் சொல்லலாம். ஆனால் கமலஹாஸனுக்கு என்ன சொன்னாலும் பொழுது போக்கு தானே சினிமா என்ற வாய்ப்பாட்டையே அலுக்காமல் சலிக்காமல் சொல்லும் தமிழ் சினிமா ரசிகனைப் போல, என்னதான் உலகப்படங்களையெல்லாம் பார்த்து பார்த்து வியப்பதாகச் சொன்னாலும் ஆணோ பெண்ணோ கிழவியோ, குள்ளனோ, கோவணதாரியோ, தசாவதாரம், சதாவதாரம் என்ற அவதார மேக்கப் பிரமைகளில் ஆழ்ந்திருக்கும், மேடையில் கலைஞர், முதல்வர், கருணாநிதி நடுநாயகமாக் அமர்ந்து பாராட்டுக்களை முகமலர்ந்து ரசித்துக்கொண்டிருக்கும் வேளையில், ”கலைஞரிடம் தான் நான் தமிழ் கற்றேன், பராசக்தி படத்தைப் பார்க்கும் போது கலைஞருக்கு 1952 லேயே இருந்த சினிமா உத்திகள் பற்றி எவ்வளவு தெரிந்திருக்கிறது!
என்று இப்போதும் நான் மலைத்து பிரமித்துப் போகிறேன்” என்று தன் உலகளாவிய சினிமா ரசனையை வெளிக்காட்டும் போதும் தமிழனுக்கு எது தெரியுமோ தெரியாதோ, அதிகார பீடங்களுக்கு பாலாபிஷேகமும் செய்து சாஷ்டாங்க நமஸ்காரமும் உலகறியச் செய்து தன் வாழ்க்கையை எவ்வித உத்பாதங்களும் நேராது இன்ஷ்யூர் செய்வதற்குரிய அத்தனை உபாயங்களும் தெரிந்தவன் என்பது சாட்சியம் பெற்றது.


வெகு அபூர்வமாக ஒரு தமிழ் விளம்பரப் படம் அதிகம் அசட்டு பாவனைகள் நமக்கேயான வசனங்கள், நடிப்புகள் இல்லாத அமைதியும் அழகுமான விளம்பரம் சூர்யா பக்கத்திலிருக்கும் ஜோதிகாவுக்கு சூர்யனைக் காட்டி, நீ கேட்டால் அந்த சூர்யனை எப்போதும் அங்கேயே இருக்கச் செய்துடட்டுமா? என்று சொல்ல, அப்போது ஜோதிகா சில வினாடிகளுக்கு சூர்யாவைப் பார்க்கும் கூர்ந்த பார்வையும் (இப்படியும் உளறுவியா நீ, பெண்டாட்டிகிட்ட பெருமை அடிச்சுக்க) பின் சின்ன, முகச்சுளிப்பும்) எத்தனை சுலபமாகச் சொல்லிவிடுகிறது. இந்த மாதிரி திறன் ஜோதிகாவிடமிருப்பதை எந்தத் தமிழ் இயக்குனர், தன் படம் மூலம் வெளிக்கொணர முடிந்திருக்கிறது? வித்தியாசமாகப் படம் எடுப்பதற்கு முயன்றவர் பிரகாஷ் ராஜ் தன் மொழி படத்தில் ஜோதிகாவை ஊமைப் பெண்ணாக்கி என்னேன்ன கோணங்கித்தனமெல்லாம் செய்ய வைத்திருக்கிறார்? .எந்த ஊமைப் பெண் இவ்வளவு கோணங்கித் தனம் செய்யப் பார்த்திருக்கிறோம்? அதில்லையென்றால் டான்ஸ், க்ளாமர் கேர்லுக்கு தமிழ்ப் படங்களுக்கென்று தயாரித்து வைத்திருக்கும் பாவனைகள், ஆட்டங்கள், வசனஙகள். பாட்டுக்கள் .தமிழ் ரசிகர்களிடம் என்ன, எந்த விதமான ரசனை வளர்க்கப்பட்டிருக்கிறது அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள், வசூலை அள்ளிக்கொண்டு வர என்னென்ன செய்யவேண்டும் என்று கையிலிருக்கும் ரெடிமேட் கையடக்கப் புத்தகம் பார்த்துப் பார்த்துச் செய்யும் போது தேவயானிக்கும் ஜோதிகாவுக்கும் எங்கேயாவது ஒன்றிரண்டு காட்சிகள் அபூர்வமாக ஒரு படத்தில் கிடைத்தால் பெரிது. அதை நம் தமிழ் ரசிகர்களும் மறந்து விடுவார்கள்.


அந்த வெற்றி ஃபார்முலாவும் வெற்றி தருவதில்லை. ரசிகர்கள் என்ன வேண்டுகிறார்கள், என்று தெரிந்து வைத்திருக்கும் சூப்பர் ஸ்டாரின் பாபா என்ன ஆயிற்று? குசேலன் என்ன ஆயிற்று?  உலக நாயகனின் தசாவதாரம் என்ன ஆயிற்று? ஆளவந்தான் என்ன ஆயிற்று? காப்பியே அடித்தாலும், உன்னைப் போல் ஒருவன் தன் கையடக்கப் புத்தகத்தின் பட்டியலில் இருக்கும் வெற்றிப்பட மசாலாக்களை எல்லாம் சேர்க்காமல் எடுத்த உன்னைப் போல் ஒருவனால் என்ன பெரிய படுபாதாள வீழ்ச்சி ஏற்பட்டது? என்ன செலவாயிற்று? என்ன வசூல்? என்ன நஷ்டம்?


ஏன் கோடி கோடியா அள்ளணும் என்ற பேராசை எல்லாரையும் பிடித்துப் பேயாக ஆட்டுகிறது?. தன் வெற்றிப்பட பார்முலாக்களை தன் ரசிகர்கள் ஆசைகளைப் பற்றித் தவறிப் போய் A Wednesday யை ஃப்ரேமுக்கு ஃப்ரேம் காப்பியடித்ததால் என்ன மோசம் போயிற்று? காப்பியடித்ததிலோ புதுசா ஒன்றும் நடந்து விடவில்லை. வழக்கமாகச் செய்து வந்தது தானே. கொஞ்சம் பொதுப்புத்தியை உபயோகித்து அப்படியே ஈயடிச்சான் காப்பி அடித்ததால் தன் ப்ராண்டு கோணங்கித்தனம் எதுவும் செய்யாமல் ஒழுங்காகக் காப்பியாவது அடிக்க முடிந்திருக்கிறதே.


பாலு மகேந்திராவும் பார்த்தார். தமிழ் நாட்டில் இதெல்லாம் சரிப்படாது. அவங்க கேக்கற மசாலாவும் கொஞ்சம் அங்கே இங்கே தூவலாம் என்று தூவப் போய், அவர் ஒன்றும் தன் படங்களை வெற்றிப் படங்களாக்கி விட முடியவில்லை. படத்தின் பெயர் நினைவில் இல்லை. ஏதோ ஒரு படத்தில் சரிதாவை கண்ணறாவியாக ஆடவைத்து, இன்னொரு க்ளாமர் நடிகையை ஜலக்ரீடை செய்து பாடவும் வைத்து, ஒன்றும் பயனில்லாது போய்விட்டது. மலையாளத்தில் படம் எடுக்கும்போது இதையெல்லாம் அவர் செய்வதில்லை. டெக்னிக்கில் என்னமோ உலகத்தரத்துக்குத் தமிழ் நாட்டில் சினிமா எடுக்கிறார்களாமே, அந்தத் தமிழ் நாட்டில் தமிழ் ரசிகர்களுக்கு அவர் படம் எடுக்கும் போது தான் அவர் இதையெல்லாம் செய்ய நிர்ப்பந்திக்கப் படுகிறார். உலகத் தர டெக்னிக்கை வேண்டும் தமிழ் ரசிகன் இந்த அரை குறை சமாசாரங்களால் எல்லாம் ஏமாறுவதில்லை. அவன் மிகப் பிடிவாதமான ரசிகன், கொள்கை தீவிரம் கொண்டவன். சூப்பர் ஸ்டார் ஆனாலும் அவரை மச்சுப் பிச்சுக்குப் போய் ஐஸ்வர்யாவுடன் நாப்பது எக்ஸ்ட்ராவோடு டான்ஸ் பண்ணி கிதாரும் வாசித்தால் தான் அவனைத் திருப்திப் படுத்த முடியும். சங்கரும் புதுசு புதுசா ஏதும் பிரம்மாண்டமான கோமாளித் தனங்களை யோசித்துத் தான் ஆகணும். இல்லையெனில் எல்லாத்தையுமே பாபாவாக்கிவிடுவான்.


அவ்வப்போது என்ன காரணத்தாலோ கொஞ்சம் யதார்த்தமும் தமிழ் வாழ்க்கையையும் மற்ற மசாலாக்கள் போல சேர்த்துக் கொள்ளலாமே என்று சிலர் யோசிக்கிறார்கள். அதில் தான் இந்த மதுரைப் பேச்சு, விருதுநகர் தெருக்கள், கைலியை தன் காக்கி அண்டர் வேர் தெரிய் கைலியை மடித்துக் கட்டுதல் எல்லாம் வந்து சேரும்.


(இதெல்லாம் யதார்த்தமுங்க, தமிழ் ரசிகன் படிப்படியா மாறிட்டு வராங்க, அதுக்குத் தக்காப்போல நாம்பளும் மாறாட்டி எப்படீங்க, கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க)


இதில் அதிக அளவு முன்னேறியது வெற்றி மாறன் ஆடு களத்தில். அதுக்கு தனுஷ் தான் சரி. உலக நாயகனையா, இல்லை சூப்பர் ஸ்டாரையா கூப்பிட முடியும்? சூப்பர் ஸ்டார் ”இந்தத் தடவை மெக்ஸிகோ போலாங்க அங்கேயும் தமிழ் நாட்டுக்கரங்க மாதிரியே வான்கோழி, இல்லை வல்லூறு சண்டை இருக்கான்னு சங்கர் ஒரு சர்வே பன்ணீட்டு வந்துருவாரு இல்லாட்டி அந்த ஊர் எருமைச் சண்டையா வச்சிக்கிடலாங்களா?,” என்று சொல்லலாம். உலக நாயகனுக்கும் இப்படி ஏதாவது மேக்கப் ஐடியா வரலாம். நம்ம தமிழ் சினிமா மரபை எப்படி மாத்தறது?. ரிக்‌ஷாக்காரன் தான்னாலும் பட்டு வேஷ்டி, தலைப்பாகை, சில்க் ஜிப்பா போட்டு ரிக்‌ஷா மேலே நின்னுக்கிட்டே பாடினாத்தான் எம்ஜிஆர் ரசிகர்கள் ஒத்துக்குவாங்க. அதே போல ரிக்‌ஷாக்காரன்னாலும் கலைஞர் கருணாநிதி வசனம் எழுதி அதை சிவாஜி சார் பேசணும் என்று சொல்லக்கூடும்.


இதெல்லாம் ஒரு படத்தோடு சரி. இனி ஆடுகளம் மாதிரியே எடுத்திட்டிருப்பாங்களா, வளர்ற கலைஞர்கள் என்று வெற்றி மாறனும் வெற்றிப்படம் ஃபார்முலாவுக்கு போயாற்று என்று தோன்றுகிறது. இப்படித்தான் சாண் ஏறி முழம் சறுக்கும் விவகாரமாகத் தான் தமிழ் சினிமா வரலாறு இருக்கிறது. முந்தியெல்லாம் சறுக்கு மரத்துக்கு எண்ணை தடவினார்கள் என்றால் நம் ஹீரோக்கள் சொல்லக் கூடும், “நல்ல ஊத்துக்குளி வெண்ணையாத் தடவணுங்க. காலம் மாறுது நாமும் வளரணும்க” என்ற ரகத்தில் தான் நம் சினிமா சிந்தனைகள் இருக்கின்றன”.


இப்போ சங்கருக்குப் போட்டியா வெற்றிப்பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் முரண் என்று ஒரு படம் எடுத்திருக்கிறார். அவருக்கு எப்படி எங்கேயும் எப்போதும் படம் கொண்டிருந்தது போன்ற கதையைக் கற்பித்துக்கொள்ள முடிந்தது? பின் அதைப் படமாக்கவும் மனதில் ஒரு எண்ணத்தைத் தைரியமாகக் கொள்ள முடிந்தது? என்பது புதிராக இருக்கிறது. புதுமை புதுமை என்று கோஷமிடுவதில் தமிழனுக்கு ஒரு அலாதி பரவசம் உண்டு. புதுமை இருக்கோ இல்லையோ அதுபற்றிக் கவலை இல்லை. ஸ்ரீதர் தமிழ் சினிமாவுக்கு தன் ஒரு கையை மடக்கி தாடையைத் தாங்கி உட்கார்ந்து ஒரு சிந்தனையாளராகப் போஸ் கொடுக்கத் தொடங்கிய காலத்திலிருந்து “இந்தப் படத்திலே என்ன புதுமை புகுத்தியிருக்கீங்க? என்று ஒரு வழக்கமான கேள்வி அவரிடம் கேட்கப்படும். அவரும் புளகாங்கிதமடைந்து எதாவது சொல்லி வைப்பார். அதன் பின் இந்தப் புதுமை என்ற கேள்வி எல்லாரிடமும் கேட்கப்பட்டது. காபி அடிப்பவர்களெல்லாம் ஏதாவது புதுமை செய்ய ஆங்கிலப் படம் பார்த்து நோட்ஸ் எடுக்க ஆரம்பித்தார்கள். அந்த மாதிரி முருக தாஸும் ஏழாம் அறிவு எடுத்ததாகச் சொல்கிறார்கள். அது முற்றிலும் புதுமை என்றும் சொல்கிறார்கள். இருக்கலாம் சந்தோஷம் தான். நான் இன்னும் பார்க்கவில்லை. சண்டை,மாயா ஜாலங்கள், தமிழன் பெருமை என்று இந்த மாதிரி ஆகிவந்த வெற்றிச் சமாசாரங்கள் அதில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.


போகட்டும். ஆனால் முரண் பற்றி சொல்வதாகச் சொல்லி பாதை மாறிக்கொண்டே இருக்கிறேன். பார்த்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. சேரன், பிரசன்னா இருவர் தான் எனக்கு நினைவில் இருக்கிறார்கள். மற்ற யாரும் எனக்கு நினைவில் இல்லை. அவர்கள் இருவரும் நினைவில் இருக்க வேண்டியவர்கள் தான்.


படத்தின் ஆரம்பத்திலேயே பிரசன்னா குடி போதையில் எதிரிலிருப்பவர்கள் முன் திடீரெனெத் தோன்றி வம்புக்கு இழுத்து சவால் விட்டு, தற்கொலை செய்துகொள்வது போல பயமுறுத்தியதும், பின் காரில் வந்து கொண்டிருந்த சேரன் காரோடு ஒரு பணக்கார போக்கிரிக் கும்பல் கலாட்டா செய்துகொண்டே மோதிச் செல்ல பழுதடைந்த காரை ரோடிலேயே விட்டு விட்டு ஏதும் கார் கிடைக்குமா என்று ரோடில் நின்று கொண்டிருக்க பிரசன்னா காரை நிறுத்திச் சேரனைத் தன் காரில் ஏற்றிக்கொண்டு, சேரனோடு பேச்சுக் கொடுக்க நீண்ட தூரப் பிரயாணத்தில், அவரைச் சினேகிதம் செய்து கொண்டு தன் தந்தையைக் கொலை செய்தால் தான் சேரனின் மனைவியை, சேரனிடம் அன்பு செலுத்தாத, சேரனை அவமானப் படுத்தும் மனைவியைக் கொல்ல உதவுவதாகச் சொல்கிறான். சேரனைச் சினேகிதம் செய்துகொள்ள பிரசன்னா கையாண்ட உபாயம் காரை அந்தப் போக்கிரிக் கும்பல் இருக்குமிடம் சென்று அவர்களை வதைத்ததும், பின் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்காமல் எப்படி இருக்கமுடியும் என்று சொல்லி ரோட் நடுவில் நின்று கொண்டு எதிர் எதிர் திசையில் விரைந்து வரும் இரண்டு கார்களுக்கு இடையில் நின்று உயிரைப் பணயம் வைத்துப் பிழைத்து வருவதை அதிலும் ஒரு சிறிய மனச் சலனம் உடல் பதற்றம் கூட இல்லாது வருவதைப் பார்த்து சேரனுக்குத் தான் பதற்றமும் பயமும். இப்படிச் சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் இப்படிப் பட்ட உயிர் போகும் சவால்களா? படத்தின் கடைசி வரை பிரசன்னாவுக்கும் சேரனுக்கும் இடையேயான பேரங்களும் பேச்சுக்களும் சவால்களும் சேரனின் தயக்கங்களும் பிரசன்னாவிடம் காட்டும் வெறுப்பும் திரும்பத் திரும்ப பிரசன்னா சேரனைத் தூண்டுவதும்…… எல்லாம் எனக்குத் தமிழ் சினிமாவுக்குப் புதியவை. அந்த அமைதியான, சாதாரணமாக நாம் இருவருக்குள் பேசிக்கொள்ளும் குரலிலேயே அந்தப் படம் முழுவதும் விரவியிருக்கும் பரிமாறல் எனக்கு மிக ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்த ஒன்று. எனக்கு இந்தப் புரட்சிகர மாற்றம், வசனத்தில், பேசும் தொனியில், பெறும்பாலும் காரில் விரைந்து செல்லும்போதே நிகழ்வதான படப்பிடிப்பும் எனக்குப் பிடித்தவை. இது தொடர வேண்டும். தமிழ் சினிமாவில் கத்துவார்கள். வீர வசனம் பேசுவார்கள். காதல் வசனம் என்று பிதற்றுவார்கள். ஆட்டம், பாட்டம் எல்லாம் இருக்கும். அதை விட்டு சாதாரணமாக நாம் வாழ்க்கையில் பேசும் குரலில், பேசும் மொழியில் இருவர் இடையில் பேச்சு அமைந்திருப்பது, அது படத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருப்பதும் புதிய பாதையில் நிகழும் புதிய பயணம்.


ஆனால் இந்த மாதிரியான ரோடில் திடீர் சினேகிதமும், அந்த சினேகிதனிடம் நான் உனக்கு உதவுகிறேன், நீ என் அப்பாவைக் கொலை செய்யவேண்டும் நான் உனக்கு வேண்டாத உன் மனைவியைக் கொல்கிறேன் என்று பேரம் பேசுவதும், இதே படம் முழுவதும் ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதும், வாழ்க்கையில் காணாத குரூர கற்பனை. இதற்கும் தமிழ் வாழ்க்கைக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இது ஒரு குரூரமான கற்பனை. என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் போதே, என் மருமகள் சொன்னாள், இது ஹிட்ச்காக்கின் Strangers in a Train என்னும் படத்தின் காபி என்றாள். பொத்தென என் சந்தோஷம் தமிழ் சினிமாக் கனவுகளெல்லாம் உடைந்து சிதறின. இருப்பினும் மீசை முறுக்காத, கோரமாக தலையை விரித்துப் போட்டுக்கொள்ளாத, பயங்கரமாகச் சிரிக்காத, பயங்கரமாக விழிகளைப் பிதுக்காத பயமுறுத்தும் கொடிய வசனம் பேசாத சாதாரணமாக நம்மைப் போல் தோற்றமும் பேச்சும் கொண்ட ஒரு வில்லத்தனத்தை ஏதோ வீடு வாங்குவது போன்று ஒரு கொலைத்திட்டத்தைப் பேசும் வில்லனை, காபி அடித்தாவது தமிழ் சினிமாவில் உலவ் விட்டிருக்கிறார்களே, அதுவரைக்கும் சந்தோஷப்படலாம். கொலை, வில்லன் என்றால் பி. எஸ் வீரப்பாதான் மாடல் என்று நினைக்காத தமிழ் சினிமா எட்டிப் பார்த்து விட்டதே.

--Ksubashini 10:40, 18 மார்ச் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 11 ஆகஸ்ட் 2012, 14:16 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,963 முறைகள் அணுகப்பட்டது.